My page - topic 1, topic 2, topic 3

பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!

தோட்டக்கலைத் துறை இயக்குநர் ந.சுப்பையன் விளக்கம்

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019

நீர்வளம் குறைந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது. பாசனத்துக்கும் குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கும் போதிய அளவில் நீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இது குறித்து, தோட்டக்கலைத்துறை இயக்குநர் டாக்டர் ந.சுப்பையன் நம்மிடம் விளக்கிக் கூறினார்.

“விவசாயத்தில் பாசன நீர் அனைத்து விதங்களிலும் முக்கிய இடுபொருளாக உள்ளது. நுண்ணீர்ப் பாசன நுட்பம், இருக்கும் நீரை முறையாகப் பயன்படுத்தி, நீர்ப் பயன்பாட்டுத் திறனை 40-60 சதம் அதிகரிக்க உதவும் உத்தியாகும். பாசன நீரின் அளவு, பாசன நேரம், பாசன முறை ஆகியவை, மகசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நுண்ணீர்ப் பாசன நுட்பம், தேவையான நீரை, தேவையான இடத்தில் வழங்க உதவுகிறது. இந்நுட்பம், பாசனப் பற்றாக்குறைக்கு நல்ல தீர்வாகும். பாரம்பரியப் பாசன முறைகளை விட, அதிக மகசூல் கிடைக்க வழி செய்கிறது.

சீரான கால இடைவெளி மற்றும் அளவில் பயிர்களுக்கு நீர் கிடைப்பதால், உற்பத்தித்திறன் மற்றும் நீர்ப் பயன்பாட்டுத் திறன் மிகுவதுடன் வேலையாட்கள் செலவும் கணிசமாகக் குறைகிறது. உரத்தையும் இந்தப் பாசனம் மூலமே இடுவதால், அதன் பயனும் கூடுகிறது.

தமிழகம் நீர்ப் பற்றாக்குறை மாநிலமாக இருப்பதால், நீர் அதிகமாகத் தேவைப்படும் கரும்பு மற்றும் வாழையில் இத்திட்டத்தைப் பெரியளவில் செயல்படுத்தும் முயற்சிகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. நுண்ணீர்ப் பாசனத் திட்டம், துளி நீரில் அதிகப் பயிர் என்னும் உட்பிரிவில், மத்திய மாநில அரசுகளின் 60:40 மானியப் பங்களிப்பில் செயல்படுத்தப்படுகிறது. ஆயினும், மத்திய அரசு அனுமதிக்கும் மானியத்தில் இருந்து மாறுபட்டு, கூடுதல் நிதிச்சுமை என்பதை விட, விவசாயிகளின் நலனே முக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ளும் தமிழக அரசு, சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கி வருகிறது.

மேலும், மத்திய அரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்கம் விவசாயிகளைப் பாதிக்காத வகையில் 12% சரக்கு மற்றும் சேவை வரியைத் தமிழக அரசே ஏற்றுக்கொண்டு, 2017-18 ஆம் ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவன நுண்ணீர்ப் பாசனக் கருவிகளுக்கான விலை, ஒரே அளவில் இருக்கும்படி தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக, 2017-18 ஆம் ஆண்டு முதல், நுண்ணீர்ப் பாசன மேலாண்மைத் தகவல் அமைப்பு என்னும் புதிய மென்பொருளை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உருவாக்கியுள்ளது. இது பயன்படுத்த எளிதாக இருப்பதால், இதன் மூலம் விவசாயிகளே இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகளும், பயனாளிகள் பதிவு முதல் இறுதியாக மானியம் விடுவிக்கப்படும் வரை கண்காணிக்கலாம். நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த இந்த மென்பொருள் உதவுகிறது.

ந.சுப்பையன் இ.ஆ.ப.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், ஆதார் அட்டை, அடங்கல், சிட்டா, நில வரைபடம், சிறு குறு விவசாயிகளாக இருப்பின், வருவாய்த் துறையிலிருந்து பெறப்பட்ட சான்று ஆகியவற்றுடன், tnhorticulture.tn.gov.in/horti/mimis என்னும் இணையதளத்தில் விவசாயிகளே பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிப் பதிவு செய்து இத்திட்டத்தில் பயனடையலாம்’’ என்றார்.


மு.உமாபதி

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks