கோவைக்காய் மருத்துவக் குணங்கள்!

கோவைக்காய் r kovai kai 14f415669d5ff6848b8954f18288a036 e1665325772339

கோவைக் கொடிக்குத் தொண்டைக் கொடி என்னும் பெயரும் உண்டு. இது, வேலிகள், தோட்டங்கள், காடுகளில் படர்ந்து கிடக்கும். இதன் பழம், இனிப்பு, புளிப்பு, கசப்புத் தன்மையில் இருக்கும். கோவைக்காயின் நிறம், வடிவத்தைக் கொண்டு இதனைப் பல வகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் மிக்கவை.

கோவைக்காயைச் சமைத்தும், பச்சையாகவும் உண்ணலாம். வற்றல் போடவும் ஏற்றது. பல்லாண்டுப் பயிரான கோவைக்கொடி ஆண்டு முழுவதும் காய்த்துக் கொண்டே இருக்கும். குளிர் நிறைந்த பகுதிகளில் 8-9 மாதங்கள் வரை காய்க்கும்.

கிராமப்புறங்களில் உள்ள ஆறு, குளம், வீட்டுக்கொல்லையில் தானாகக் காய்த்துத் தொங்கும் கோவைக் காய்களைப் பார்த்திருப்போம். ஆனால், அவற்றை உணவுக்காகப் பயன்படுத்துவது இல்லை. இதன் பழங்களைச் சிறுவர்கள் பறித்துச் சாப்பிடுவார்கள். ஆனால் இன்று அந்தக் கோவைக்காய் மக்கள் அனைவராலும் விரும்பப்படும் உணவுப் பொருளாக மாறியுள்ளது. இதைத் தனிப் பயிராக சாகுபடி செய்து நல்ல விளைச்சலும், வருமானமும் பெற்று வருகிறார்கள் விவசாயிகள்.

காய்கறிகளைப் பயிரிடப் பட்டங்கள் பல இருந்தாலும், ஆடிப்பட்டம் தான் மிகவும் ஏற்றது. இந்தப் பட்டத்தில் மற்ற பயிர்களை சாகுபடி செய்தாலும் மகசூலுக்குப் பாதகம் இருக்காது. அதனால் தான் நம் முன்னோர்கள் ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்லி வைத்தார்கள். தேனி, திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் கோவைக்காய் சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

பயிரிடும் முறை

கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, படப்பை, நமக்கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன. சித்திரை மாதத்தைத் தவிர மற்ற எல்லா மாதங்களிலும் கோவைக்காய் கொடித் தண்டுகளை நடவு செய்யலாம். ஆனால், ஆடிப் பட்டத்தில் நடவு செய்தால் முளைப்பு, செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஒருமுறை நடவு செய்யும் கோவைக் கொடிகளை, மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். வடிகால் வசதியுடன் கூடிய செம்மண், மணற்சாரி ஆகிய மண் வகைகள் கோவைக்காய் சாகுபடிக்கு ஏற்றவை.

தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 2 டன் எருவைக் கொட்டி மூன்று முறை உழவு செய்து நான்கு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, முளைத்து வரும் களைகளை அழிக்கும் வகையில் மீண்டும் உழவு செய்து நிலத்தைச் சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண் கொடிகளிலிருந்து கிடைக்கும் தண்டுக் கொடிகளைத் தான் நட வேண்டும். நடவுக் கொடிகளை, இரண்டு முதல் இரண்டரை வயதுள்ள கொடிகளில் இருந்து எடுக்க வேண்டும்.

ஆறடி இடைவெளியில் ஓரடி அகலத்தில் வாய்க்காலை அமைக்க வேண்டும். இந்த வாய்க்காலில் ஆறடி இடைவெளியில் ஒரு கன அடி அளவில் குழிகளை எடுத்து, ஒவ்வொரு குழியிலும் இரண்டு கிலோ எரு மற்றும் மேல் மண்ணை ஒன்றாகக் கலந்து மூடி, 3-4 கோவைக் கொடியின் தண்டுகளை நட வேண்டும்.

பிறகு குழிகள் மீது வைக்கோலால் மூடாக்கைப் போட்டு உயிர் நீர் விட வேண்டும். மண்ணின் ஈரப் பதத்துக்கு ஏற்ப ஐந்து நாட்கள் வரை ஒருநாள் விட்டு ஒருநாள் பாசனம் செய்ய வேண்டும். பிறகு பாசன இடைவெளியைக் கூட்டிக் கொள்ளலாம். சாதாரண முறையில் பாசனம் செய்வதை விட, சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது சிறப்பானது. சாதாரணப் பாசனமாக இருந்தால் 4 முதல் 7 நாட்களுக்கு ஒருமுறையும், சொட்டுநீர்ப் பாசனமாக இருந்தால், 2 நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்தால் போதுமானது.

இருபது நாளில் களையெடுக்க வேண்டும். ஒவ்வொரு கொடிக்கும் ஒரு கொம்பு இருக்குமாறு ஐந்தரை அடி உயரத்தில் மூங்கில் கொம்பு அல்லது கல் தூண்களைக் கொண்டு பந்தல் அமைக்க வேண்டும். முப்பது நாளில் கொடியை ஒட்டிக் குச்சியை ஊன்றிப் பந்தலில் ஏற்றிவிட வேண்டும். அறுபது நாளில் கொடிகள் நன்கு படர்ந்து எழுபது நாள் முதல் காய்க்கத் தொடங்கும். மாதம் ஒருமுறை களையெடுக்க வேண்டும்.

காய்ப்பு அதிகமாக இருக்கும் போது, ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்ய வேண்டும். மற்ற நாட்களில் வாரம் ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும். ஆண்டுக்குச் சராசரியாக 24 ஆயிரம் கிலோ காய்கள் மகசூலாகக் கிடைக்கும்.

மருத்துவப் பயன்கள்

இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கக் கோவைக்காய் உதவும். கோவைக்கீரை பார்வைக் கோளாறுக்கும், உடலில் ஏற்படும் சொரிக்கும், அரிப்புக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. கோவைக் கீரையை அரைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் வியர்க்குரு வராமல் தடுக்கலாம். வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. கோவைக்கீரைக் கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

கோவைக்காயைப் பெரும்பாலும் பொரியலாகத் தான் சமைப்போம். இங்கே குறிப்பிட்டுள்ள முறையில் சமைத்தால் வேறுபட்ட சுவையில், ஆந்திர சமையலைப் போல இருக்கும்.

தேவையான பொருள்கள்

கோவைக்காய் 500 கிராம், கடுகு அரைத் தேக்கரண்டி, சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகாய் வற்றல் 2, பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை தேவையான அளவு, எண்ணெய் 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் அரைத் தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு. அரைப்பதற்கு 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 4 தேக்கரண்டி கடலைப் பருப்பு, 2 தேக்கரண்டி தனியா, 4 மிளகாய் வற்றல், கால் கிண்ணம் தேங்காய்த் துருவல்.

செய்முறை

அரைக்க வேண்டிய பொருள்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆற வைத்து மின்னம்மியில் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். கோவக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி அதற்குள் அரைத்த பொடியை வைக்க வேண்டும். கால் மணி நேரம் கழித்துக் கடாயில் எண்ணெய்யை ஊற்றி, கடுகு, சீரகத்தை இட்டுத் தாளிக்க வேண்டும். பிறகு, மிளகாய் வற்றலைப் போட வேண்டும். பெருங்காயத்தூளைப் போட்டு வதக்க வேண்டும்.

அடுத்து, கோவைக்காயை இக்கலவையில் சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் நீரைக் கொஞ்சமாக ஊற்றி ஐந்து நிமிடங்கள் மூடி வைத்துக் கொதிக்க வைத்தால் புதிய சுவையுள்ள கோவைக்காய் தயாராகி விடும். கோவைக்காயைப் பொரியலாக மட்டுமின்றி, கோவைக்காய்ச் சில்லி, வறுவல், கூட்டு, சாம்பார் எனப் பல வகைகளில் சமைக்கின்றனர். இதை நீளமாக நறுக்கி பஜ்ஜியாகவும் போடலாம்.


கோவைக்காய் DR.G.KALAISELVI e1616350379131

முனைவர் கோ.கலைச்செல்வி,

உதவிப் பேராசிரியை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ

அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading