கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2021
உயர் விளைச்சலைத் தரும் ஒட்டுவகைக் காய்கறி நாற்றுகளை, குழித்தட்டுகள், நிழல்வலைக்குடில் மூலம் உற்பத்தி செய்து பயிரிட்டால், நிறைய இலாபத்தை அடையலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் பழமொழிக்கு ஏற்ப, நாம் உற்பத்தி செய்யும் நாற்றுகள் தரமாக, வீரியமாக, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலின்றி இருக்க வேண்டும்.
தற்போதுள்ள மேட்டுப்பாத்தி, அகலப்பாத்தி முறையில், திறந்த வெளியில் நாற்றுகளை உற்பத்தி செய்யும்போது முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது; நிறைய நாற்றுகள் வீரியமின்றி இருக்கின்றன. மேலும் மழைக் காலத்தில் நாற்றுகளை உற்பத்தி செய்வது சவாலாகவும், இழப்பை உண்டாக்கும் வகையிலும் உள்ளது. இத்தகைய குறைகளைத் தவிர்த்து, தரமான நாற்றுகளை உற்பத்தி செய்ய, நிழல்வலைக் குடிலை அமைத்துக் குழித்தட்டுகளைப் பயன்படுத்தலாம்.
குழித்தட்டு நாற்றங்காலுக்குத் தேவையான பொருள்கள்
நிழல்வலை, குழித்தட்டுகள், நன்கு மட்கிய தென்னை நார்க்கழிவு, நைலான் வலை, பாலித்தீன் விரிப்புகள்.
நிழல்வலை
நிழல்வலை என்பது பிளாஸ்டிக் நரம்பிழைகளால் பின்னப்பட்ட பச்சை, கறுப்புநிற வலையாகும். இது, சூரிய ஒளியை 25%, 50%, 75%, 90% என, பின்னப்பட்ட நெருக்கத்தைப் பொறுத்து, தடுக்கும் தன்மை கொண்டது. சமவெளியில் 50% சூரிய ஒளியைத் தடுக்க, பச்சை வலையையும், மலைப்பகுதியில் 25% சூரிய ஒளியைத் தடுக்க, கறுப்பு வலையையும் பயன்படுத்தலாம். இது 5.3 மீட்டர் அகலத்தில் 25 மீட்டர் நீளத்தில் கிடைக்கும்.
குழித்தட்டுகள்
நிலத்தில் உற்பத்தி செய்யும் நாற்றுகளைப் பறிக்கும்போது, வேர்கள் அறுந்து விடுவதையும், நடவுக்குப் பிறகு நிறைய நாற்றுகள் செத்து விடுவதையும் பார்க்கிறோம். மேலும், மண்ணிலுள்ள நோய்ப் பூசணங்களும் நாற்றுகளை எளிதில் தாக்கிச் சேதப்படுத்தும். எனவே, இந்நிலையைத் தவிர்க்க, குழித்தட்டுகள் பயன்படுகின்றன. இம்முறையில், நோய்த்தாக்கமும், பரவலும் குறைவாக இருப்பதால், தனித்தனிக் குழியில் வளரும் நாற்றுகள் தரமாகவும் திடமாகவும் வளர்கின்றன. ஒரு குழித்தட்டு 0.8 மி.மீ. தடிமன் மற்றும் 3 செ.மீ. விட்டமுள்ள 98 குழிகளைக் கொண்டிருக்கும். இது பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்டிருக்கும்.
தென்னை நார்க்கழிவு
நாற்றுகளை வளர்க்க, மண்ணுக்குப் பதிலாக நன்கு மட்கிய தென்னை நார்க்கழிவைப் பயன்படுத்தலாம். பெர்லைட், பீட்மாஸ் போன்றவை பயன்பட்டாலும் அவற்றின் விலை அதிகம். குறைந்த அளவே கிடைக்கும். ஆகையால், குறைந்த விலையில் அதிகமாகக் கிடைக்கும் தென்னை நார்க்கழிவு, நாற்று உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. நன்கு மட்கிய தென்னை நார்க்கழிவின் கார அமிலத்தன்மை சீராக இருக்கும். இந்தக் நார்க்கழிவை, நீராவி அல்லது பார்மலினைப் (0.5%) பயன்படுத்தி, நோய்களைப் பரப்பும் பூசணங்களை அகற்றி விட்டுப் பயன்படுத்தலாம்.
மட்காத கழிவைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில், அதிலுள்ள லிக்னின், செல்லுலோஸ் என்னும் வேதிப்பொருள்கள் விதை முளைப்புத் திறனைப் பாதிக்கும். தென்னை நார்க்கழிவைப் பயன்படுத்த முக்கியக் காரணம், அதிகப்படியான நீரை வடித்து விட்டு, நாற்றுகள் வளர்வதற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தொடர்ந்து தரும் என்பதுதான். மேலும், எவ்விதத் தடையுமின்றி வேர்கள் சீராக வளரும்.
நைலான் வலை
நிழல்வலைக் குடில் அமைப்பின் நான்கு பக்கமும் கொசுவலையைப் போல இருக்கும் நைலான் வலையால் மூடவேண்டும். இந்த அமைப்பானது, வைரஸ் என்னும் நச்சுயிரி நோய்களைப் பரப்பும் சிறிய சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் நேரடியாக நாற்றுகளைத் தாக்கும் பூச்சிகள், நாற்றங்காலில் புகாதவாறு தடுக்கும்.
முக்கால் எச்.டி.பி.இ. குழாய்
முளைப்பு வந்ததும் நிழல்வலைக் குடிலிலுள்ள மேட்டுப் பாத்திகளின் மேல் விதைகள் பரப்பி வைக்கப்படும். இந்தச் சூழலில் பெருமழை பெய்தால், முளைத்த விதைகள் அதிகளவில் பாதிக்கப்படும். ஆகையால் மழையால் நாற்றுகள் பாதிக்காமல் இருக்க, ஒவ்வொரு மேட்டுப்பாத்திக்கும் மேல் தற்காலிகக் குகை அமைப்பு ஒன்றை ஏற்படுத்த இந்த ¾ எச்.டி.பி.இ. குழாயை, மேட்டுப்பாத்திக்கு மேல் C வடிவத்தில் 2 மீட்டர் இடைவெளியில் பொருத்த வேண்டும்.
பாலித்தீன் விரிப்புகள்
400 கேஜ் பாலித்தீன் விரிப்புகள் இரு இடங்களில் பயன்படுகின்றன. ஒன்றை, வேர்கள் குழித்தட்டுக்குக் கீழுள்ள துளைகள் மூலம் வெளியேறி மண்ணுக்குள் போகாமலிருக்க, மேட்டுப்பாத்திக்கு மேல் விரிக்க வேண்டும். இன்னொன்று, தற்காலிகக் குகை அமைப்பில் மூடக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
நாற்று உற்பத்தி
குழித்தட்டு நாற்றங்கால் மூலம், காய்கறிப் பயிர்கள், பூக்கள் மற்றும் நாற்று விட்டுப் பயிரிடும் அனைத்துப் பயிர்களுக்கான நாற்றுகளையும் உற்பத்தி செய்யலாம். முதலில், காய்கறி விதைகளை சூடோமோனாஸ் அல்லது டிரைக்கோடெர்மா உயிர்ப் பூசணக் கொல்லியில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழித்தட்டில் 1.25 முதல் 1.5 கிலோ என்னுமளவில், மட்கிய மற்றும் தொற்று நீக்கிய தென்னை நார்க்கழிவை நிரப்ப வேண்டும்.
இப்படி நிரப்பிய 10 குழித்தட்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, இதற்குமேல் இரண்டு மூன்று வெற்றுத் தட்டுகளை வைத்து லேசாக அமுக்க வேண்டும். இப்படிச் செய்தால் நார்க்கழிவை நிரப்பிய தட்டுகளில் உள்ள குழிகளில் 0.5 செ.மீ. அளவுக்குப் பள்ளம் விழும். இந்தப் பள்ளங்களில் குழிக்கு ஒரு விதையை இட்டு, மீண்டும் தென்னை நார்க்கழிவால் மூட வேண்டும். பின்னர், குழித்தட்டுகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி, வெளிச்சம் படாதபடி, பாலித்தீன் விரிப்பால் 3 முதல் 5 நாட்கள் மூடி வைக்க வேண்டும்.
பெரும்பாலான விதைகளில் 5ஆவது நாள் முளைப்புத் தெரிந்து விடும். தக்காளி மூன்றாம் நாளும், கத்தரி நான்காம் நாளும் முளைக்கும். முளைப்புத் தெரிந்ததும் குழித்தட்டுகளை, குடிலில் அமைத்துள்ள மேட்டுப்பாத்தியின் மேல் பரப்பி வைக்க வேண்டும். முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, விதைத்ததும் நீரைத் தெளிக்கக் கூடாது. தென்னை நார்க்கழிவில் உள்ள ஈரப்பதத்தைக் கண்டறிய, சிறிதளவு கழிவை உள்ளங்கையில் வைத்து கையை மூடி அழுத்த வேண்டும். அப்போது, விரல் இடுக்குகளில் நீர் எட்டிப் பார்க்க வேண்டும். நீர் சொட்டக்கூடாது.
மேட்டுப்பாத்தியில் அடுக்கிய பிறகு, தினமும் காலை மாலையில் பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். நன்கு பாதுகாக்கப்பட்ட நாற்றங்காலில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்காது. சில நேரம் வேரழுகல் நோய் இருப்பின் காப்பர் ஆக்ஸி குளோரைடை, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்னுமளவில் கலந்து வேர்ப்பகுதி நனையும்படி ஊற்ற வேண்டும்.
தக்காளி, மிளகாய் போன்ற நாற்றுகளில் சில சமயம் சாற்றை உறிஞ்சும் பூச்சிகள் தாக்கினால், ஒரு லிட்டர் நீருக்கு இமிடாகுளோபிரிட் 0.5 மில்லி அல்லது டிரையசோபாஸ் 1.5 மில்லி என்னுமளவில் கலந்து தெளிக்கலாம். நாற்றின் வளர்ச்சி பயன்படுத்தும் நார்க்கழிவில் உள்ள சத்தைப் பொறுத்து இருக்கும். பெரும்பாலும் நாற்றுகள் நடவு வயது வரையில், வளரத் தேவையான சத்து, தென்னை நார்க்கழிவிலேயே இருக்கும். சில நேரங்களில் நடவு வயதை அடைந்தும் வளர்ச்சிக் குறைவாக இருக்கும். அப்போது, 0.1% மல்டி கே கரைசலைத் தெளித்தால், அடுத்த மூன்று நான்கு நாட்களில் நடவுக்குத் தேவையான வளர்ச்சியை அடைந்து விடும்.
மழைக் காலத்தில் மழையால் ஏற்படும் சேதத்தில் இருந்து நாற்றுகளைக் காப்பாற்ற, நிழல்வலைக் குடிலிலுள்ள தற்காலிகக் குகை அமைப்பைப் பயன்படுத்த வேண்டும். இப்படி நாற்றுகளை உற்பத்தி செய்யும் போது, நடவுக்கு ஏற்ற முதிர்ச்சியை அடைய, பயிர்களைப் பொறுத்து நாட்கள் தேவைப்படும். சரியான நடவு வயதுள்ள நாற்றுகளை நட்டால் மட்டுமே நல்ல மகசூலை அடைய முடியும். நடவு வயதைக் கடந்த நாற்றுகளால் மகசூல் குறைவாகவே கிடைக்கும். இதைக் கருத்தில் கொண்டு, கீழே சில காய்கறி நாற்றுகளுக்கான நடவு வயது கொடுக்கப்பட்டுள்ளது.
தக்காளி 25-30 நாள், கத்தரி 30-35 நாள், மிளகாய் 35-40 நாள், தர்ப்பூசணி 12-15 நாள், முலாம் பழம் 12-15 நாள், வெங்காயம் 20-25 நாள், பஜ்ஜி மிளகாய் 35-40 நாள், முட்டைக்கோசு 25-30 நாள், பூக்கோசு 25-30 நாள்.
நடவு முறை
இப்படித் தயாரித்த நாற்றுகளைத் தட்டுகளோடு நடவு வயலுக்கு எவ்விதச் சேதமுமின்றி எடுத்துச் செல்லலாம். இந்தப் நாற்றங்கால் முறையில் ஒரு எக்டருக்குத் தேவையான விதையளவு முன்பு இருந்ததைவிட கால் பங்காகக் குறைந்து விட்டது. எடுத்துக்காட்டாக, முன்பு 400 கிராமாக இருந்த தக்காளி விதை இப்போது 100 கிராமாகவும், ஒரு கிலோ மிளகாய் விதை இப்போது 200 கிராமாகவும் குறைந்துள்ளன. மேலும், குழித்தட்டு நாற்றுகளின் வளர்ச்சி ஒரே சீராகவும் திடமாக இருக்கும். நடவுக்குப் பின் இறப்பு இருப்பதில்லை.
நிழல்வலைக் குடிலை அமைக்கும் முறை
முதலில் நாற்றங்காலை அமைவிடத்தைத் தேர்ந்தெடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து, தேவையான பரப்பளவை முடிவு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, 5 செண்ட் என்றால், 20 மீ. நீளம், 10 மீ. அகலம் தேவை. நிழல்வலையை விரிக்கத் தேவையான அமைப்பை உருவாக்க, 1½ அங்குல இரும்புக் குழாயை நான்கு பக்கமும் 3 மீ. இடைவெளியில் 2 கன அடி குழியைத் தோண்டி, கான்கிரீட் போட்டு நட வேண்டும். இதேபோல் எதிரெதிர் தூண்களுக்கு இடையில் 11 அடி இடைவெளியில் தூண்களின் மேல்பகுதியை ஒரு அங்குல இரும்புக் குழாயால் இணைக்க வேண்டும்.
நான்கு பக்கமும் இணைக்குமாறு பூமியில் இருந்து ½ அடி அகல சிமெண்ட் கட்டைக் கட்ட வேண்டும். இந்தப் பரப்புக்குத் தேவையான நிழல்வலையை இணைத்து, தூண்களுக்கு மேல் விரித்து 1 அடி மேலிருந்து கீழே தொங்கவிட்டு இரும்புக் குழாயுடன் தைத்து இணைத்துவிட வேண்டும். நான்கு புறமும் நைலான் வலையால் மூட வேண்டும். நிழல்வலைக் குடிலுக்குள் சென்று வர, கதவொன்றைப் போட வேண்டும்.
சமுதாய நாற்றங்கால்
தனித்தனியாக நாற்றுகளை உற்பத்தி செய்வதை மாற்றி, விவசாயிகள் ஒரு குழுமமாக இணைந்து, பருவத்திற்கேற்ப, சந்தை சார்ந்த காய்கறிப் பயிர்களைத் தேர்வு செய்து, சமுதாய நாற்றங்கால் முறையில் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.
சமுதாய நாற்றங்காலின் பயன்கள்
தங்களுக்குத் தேவையான நாற்றுகளை விவசாயிகளே உற்பத்தி செய்யலாம். பல விவசாயிகளுக்குத் தேவைப்படும் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். நாற்றுகளைப் பார்வையிடுவது மிகவும் எளிது. பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலிலிருந்து நாற்றுகள் பாதுகாக்கப்படும்.
நடுவதற்குக் காலதாமதம் ஆகும் நிலையில், குழித்தட்டு நாற்றங்கால் சரியான மாற்றாகும். பருவமற்ற காலங்களிலும் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். நடவு வயலுக்கு எவ்விதச் சேதமும் இல்லாமல், நாற்றுகளை எடுத்துச் செல்லலாம். வழக்கமான முறையை விட, 30-40 சதவீத விதைகளே குழித்தட்டு நாற்றங்காலுக்குப் போதுமானது. நடவு செய்த அடுத்த நாளிலிருந்தே நாற்றுகள் சீராக வளரத் தொடங்கி விடும். எனவே, போக்கு நாற்றுகளை நடவேண்டிய அவசியமில்லை.
முனைவர் அ.இரமேஷ் குமார்,
முனைவர் சு.கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம்,
விருத்தாச்சலம்-606001, கடலூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!