கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019
தமிழக விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை, ஒருங்கிணைந்த பண்ணைய முறையைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நம்மிடம் விளக்கினார் வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி.
“நம் நாட்டின் முக்கியத் தொழில் வேளாண்மை. நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விவசாயிகள் உற்பத்தித் திறனை உயர்த்தி வருகின்றனர். ஆனாலும் மிகுந்து வரும் சாகுபடிச் செலவு, வேலையாள் பற்றாக்குறை, குறைந்து வரும் சாகுபடிப் பரப்பு போன்றவற்றால், விவசாயம் பெரும் சவாலாக உள்ளது. எனவே, இவற்றைச் சமாளித்து, உயர் வருமானம் பெறுவதற்கு ஒருங்கிணைந்த பண்ணை நடவடிக்கைகள் அவசியமாகும்.
விளைச்சலைக் கூட்டி வருமானத்தை உயர்த்தவும், பண்ணைக் கழிவுகளைச் சுழற்சியாகப் பயன்படுத்தவும், பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களை இணைத்துச் செயல்படுவதே ஒருங்கிணைந்த பண்ணையம். தற்போது விவசாயிகள் தங்களின் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும், கூலியாள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் ஒருங்கிணைந்த பண்ணையம் வழிவகுக்கிறது. மேலும் இதில், ஒரு பண்ணைத் தொழிலின் கழிவுகள் மற்றொரு பண்ணைத் தொழிலுக்கு இடுபொருளாக மாறுவதால், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு வளமாவதுடன் சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது.
கால நிலைக்கேற்ப ஒருங்கிணைந்த பண்ணையம் செயல்படுத்தப்படுகிறது. சூழலுக்கேற்ற பண்ணை முறைகளின் மாதிரி செயல்விளக்கங்கள், விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கு ஏதுவாக உள்ளன. எனவே, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில், பண்ணையளவில் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கி, வாழ்வாதாரத்தைக் காத்தல் என்னும் நோக்கத்துடன் சூழலுக்கேற்ற பண்ணை முறைகளுடன் செயல்படுத்தப்படுகிறது.
திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், ஈரோடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் நான்கு வெவ்வேறு தட்பவெப்ப மண்டலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்துக்கு ஒரு வட்டாரத்தில் 500 மாதிரிகள் வீதம், ஐந்து மாவட்டங்களில் 2,500 ஒருங்கிணைந்த பண்ணைய மாதிரிகள் செயல்படுத்தப்படுகின்றன.
நஞ்சை, புஞ்சை, மானாவாரி சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணைய மாதிரிகளில் ஏதாவது ஒன்று, 50 சத மானியத்தில் அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் வீதம், முக்கிய இனங்களான கறவை மாடுகள், ஆடுகள், நாட்டுக்கோழிகள், வாத்துகள், வீட்டுத் தோட்டம், பழச்செடிகள், தீவனப்பயிர்கள், சாண எரிவாயுக் கலன், பண்ணைக் குட்டைகள், தேனீ வளர்ப்பு, வேளாண் காடுகள், வான்கோழி அல்லது காடை அல்லது முயல் வளர்ப்பு, தீவன மரங்கள் மற்றும் தீவனப்புல் கரணைகள், நிரந்தர மண்புழு உற்பத்திக்கூடம் மற்றும் இதர இனங்களுக்கு 2,500 மாதிரிகளுக்கு வழங்கத் திட்டமிட்டு, 2,577.20 ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது.
இதுவரை 6,157 ஏக்கரில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. 3,528 கறவை மாடுகள், 8,726 ஆடுகள், 28,740 நாட்டுக்கோழிகள் மற்றும் 80 வான்கோழிகள் விவசாயிகளால் வாங்கப்பட்டுள்ளன. மேலும், 144 பண்ணைக் குட்டைகள், 93 மீன் குட்டைகள், 373 சாண எரிவாயுக் கலன்கள், 1,858 வீட்டுத் தோட்டங்கள், 1,039 மண்புழு உரத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 12.799 இலட்சம் தீவனப்புல் கரணைகள், 2,588 கிலோ தீவனப்புல் விதைகள், 74,623 சமுதாய நாற்றங்கால் கன்றுகள், 25,560 பழமரக் கன்றுகள், 3,144 தேனீப் பெட்டிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 10.22 கோடி ரூபாயில் செலவினங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
குறைந்த நிலப்பரப்பில் நவீன அறிவியல் முறைகளைக் கொண்டு சாகுபடி, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் காடு வளர்ப்பு மற்றும் இதர துணைத் தொழில்களை ஒருங்கிணைத்து விவசாயிகள் அனைவரும் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் வழிவகை செய்வதால், 2019-20 ஆம் ஆண்டிலும் 5,000 ஒருங்கிணைந்த பண்ணைய மாதிரிகள், 51.61 கோடி ரூபாயில் 25 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன” என்றார்.
மு.உமாபதி
சந்தேகமா? கேளுங்கள்!