My page - topic 1, topic 2, topic 3

இனக்கவர்ச்சிப் பொறி என்ன செய்யுது தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019

ன்று வேளாண் பரப்பளவைக் கூட்டும் வாய்ப்புக் குறைவாக இருப்பதால், நவீன வேளாண் நுட்பங்களைச் சார்ந்தே உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது. தொழில் நுட்பங்கள் இருந்தாலும், உயிருள்ள, உயிரற்ற காரணிகள் மூலம் கடுமையான விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பயிர்ப் பாதுகாப்பில் இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது, சுற்றுச்சூழல் மாசடைவதுடன், பூச்சிகளின் எதிர்ப்புத் திறனும் வளர்கிறது. இதனால் தற்போது பயிர்ப் பாதுகாப்பில் இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைக் காட்டிலும் இனக்கவர்ச்சிப் பொறியின் பங்கு கூடி வருகிறது.

பூச்சிகளைக் கண்காணிப்பது, கவர்ந்து அழிப்பது இனக்கவர்ச்சிப் பொறியின் முக்கிய வேலையாகும். அதே இனத்தைக் கவர்ந்து அழிப்பது இனக்கவர்ச்சிப் பொறியின் சிறப்பாகும்.

இனக்கவர்ச்சிப் பொறியின் சிறப்பு

ஒரு இனத்தைச் சேர்ந்த பெண் தாய் அந்துப் பூச்சியானது அதே இனத்தைச் சேர்ந்த ஆண் அந்துப் பூச்சியைக் கவர்ந்திழுக்க ஒருவித வாசனைப் பொருளைத் தன் உடலில் சுரந்து காற்றில் வெளிவிடும். இது இனக்கவர்ச்சி ஊக்கி அல்லது பிரமோன் எனப்படும். அதே இனத்தைச் சேர்ந்த ஆண் பூச்சிகள் மட்டுமே இதை உணர முடியும். இவ்வாறு கவரப்பட்ட ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளைத் தேடிச் சென்று புணர்வதால், பெண் பூச்சிகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் பயிர்களைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும். இவ்வாறு முட்டையிடுவதற்கு முன் இனவிருத்தியைத் தடுக்கவே இனக்கவர்ச்சிப் பொறி பயன்படுகிறது. மேலும், ஆண் பூச்சியுடன் சேராத பெண் பூச்சிகள் கருவுறா முட்டைகளையே இடும். இதிலிருந்து புழுக்கள் வராது.

ஆணும் பெண்ணும் உடலிலிருந்து வாசனைப் பொருளான இனக்கவர்ச்சி ஊக்கியை வெளியிடும். ஆனால், பெண் வெளியிடும் ஊக்கி நீண்ட தொலைவுக்குப் பரவும். எனவே, பெரும்பாலும் பெண் பூச்சியின் கவர்ச்சி ஊக்கியே பயிர்ப் பாதுகாப்பில் பயன்படுத்தப்படுகிறது. இனக் கவர்ச்சிக்கு மட்டுமல்லாமல், உணவுப் பாதையை அடையாளம் காணவும், பாதுகாப்புக் கூட்டத்தைத் தயார் செய்யவும் இந்த ஊக்கிகளைப் பூச்சிகள் சுரக்கின்றன.

இனக்கவர்ச்சிப் பொறிகளின் வகைகள்

குழாய் போன்ற நீண்ட பாலித்தீன் பைகள் அடங்கிய பொறி. நீருள்ள வட்டப் பொறி, முக்கோண வடிவ அட்டைப் பெட்டிப் பொறி போன்றவை அதிகமாகப் பயன்படும் வகைகளாகும். இவற்றைத் தவிர பழ ஈக்கள், காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்திழுக்கும் பொறிகளும் உள்ளன. செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இனக்கவர்ச்சி ஊக்கியைக் கொண்ட இரப்பர் குமிழ்களை இப்பொறியில் பொருத்தி வயலில் பயிருக்குச் சற்று மேலே இருக்கும்படி வைக்க வேண்டும்.

இந்த அமைப்பை, குச்சியால் உறுதியாகக் கட்டி, காற்றில் ஆடாமல் பாதுகாக்க வேண்டும். இப்படி வைக்கும் போது இரப்பர் குமிழ்களில் உள்ள இரசாயனக் கவர்ச்சி ஊக்கி வயலில் பரவி, அந்தக் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பூச்சிகளின் ஆண் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இதை நாடி இரவில் வரும் பூச்சிகள், நீளமான பாலித்தீன் பைகளில் விழுந்து மாட்டிக்கொள்ளும். நீருள்ள வட்டப் பொறியில் நீருடன் சிறிதளவு மண்ணெண்ணெய்யைக் கலந்து வைத்து விட்டால் அந்துப்பூச்சிகள் அதில் விழுந்து இறந்து விடும்.

இனக்கவர்ச்சிப் பொறிகளை எக்டருக்கு 10-12 வரையில் வைக்க வேண்டும்.  30-40 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும்.  சராசரியாக அன்றாடம் 3-4 பூச்சிகள் வரை ஒரு பொறியில் மாட்டிக்கொள்ளும். பொறியில் விழும் பூச்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அவற்றின் சேதம் மற்றும் நடமாட்டத்தைக் கண்டறியலாம். பூச்சிகளைக் கண்காணிக்க என்றால், எக்டருக்கு 2 பொறிகள் போதும். ஒரு ஆண் அந்துப் பூச்சியைக் கவர்ந்து இழுப்பதன் மூலம், பெண் பூச்சியின் முட்டைகளில் இருந்து 200-300 புழுக்கள் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது.

கவனிக்க வேண்டியவை

இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட பூச்சிகளைக் கவர்வதற்கு, அதற்கான இனக்கவர்ச்சி ஊக்கிகளைக் கொண்ட இரப்பர் குமிழ்களைப் பயன்படுத்த வேண்டும். இந்தக் குமிழ்களை 21 நாட்களுக்குப் பின் மாற்றிவிட வேண்டும். பாலித்தீன் பைகளின் வாய்ப்பகுதி திறந்தே இருக்க வேண்டும். இல்லையெனில் கவரப்படும் பூச்சிகள் அதில் விழாமல் பறந்து விடும்.

நன்மைகள்

இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்துவதால் சூழல் மாசடைவதில்லை. மேலாண்மைச் செலவும் நேரமும் குறையும். முட்டையிடுவதற்கு முன்பே பூச்சிகள் அழிக்கப்படுவதால் சேதம் குறையும். காய்கறிப் பயிர்களுக்குப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தத் தேவையில்லை. இது பூச்சிக் கொல்லிகளைப் போல் அனைத்துப் பூச்சிகளையும் கொல்லாது. அந்துப் பூச்சிகளை மட்டும் கவர்வதால் நன்மை செய்யும் பூச்சிகள் வயலில் பெருகும். பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன், எஞ்சிய நஞ்சு போன்ற சிக்கல்கள் இதில் இல்லை. மற்ற பயிர்ப் பாதுகாப்பு முறைகளுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு: 04182-201525, 293484.


.நாராயணன்,

தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், 

கீழ்நெல்லி-604410, திருவண்ணாமலை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks