கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014
இப்போது கீரைகளின் அருமையை மக்கள் உணர்ந்துள்ளதும், பயன்படுத்துவதும் மகிழ்ச்சிக்கு உரியதாகும். நமக்கு எளிதாகக் கிடைக்கும் கீரைகளில் ஒன்று அரைக்கீரை. இதன் தாவரவியல் பெயர் amaranthus tritis என்பதாகும். இக்கீரை இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகிறது. இது ஒரு அடி உயரம் வரை வளரும். இந்தக் கீரையின் இலைகளும் தண்டுகளுமே உண்பதற்கு உகந்தவை. இது, அறுக்க அறுக்க மீண்டும் மீண்டும் வளரும் செடியாகும். அதனால், இந்தக் கீரைக்கு அறுகீரை என்னும் பெயரும் உண்டு.
அரைக்கீரை சிறந்த இயற்கை மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. ஒரு கிலோ அரைக்கீரையில் உள்ள இரும்புச்சத்தைப் பெற, 32 அன்னாசிப் பழங்களைச் சாப்பிட வேண்டும் என்பதிலிருந்து, இக்கீரையின் சிறப்பைத் தெரிந்து கொள்ளலாம். ‘அத்திப்பழமும் அரைக்கீரை நல்வித்தும் கொத்தி உலைப்பெய்து கூழிட்டு வைத்தனர்’ என்னும் திருமூலரின் திருமந்திரப் பாடலால், அரைக்கீரை விதைகளையும் அக்காலத்தில் உணவாகப் பயன்படுத்தினர் என்பதை அறியலாம்.
அரைக்கீரை விதையிலிருந்து ஒருவிதத் தைலம் எடுக்கப்படுகிறது. தேங்காயின் ஒரு கண்ணை மட்டும் திறந்து நீரை வெளியேற்றி விட்டு, அதற்குள் அரைக்கீரை விதைகளை நிரப்பி, தேங்காய்க் கண்ணை மரத்துண்டால் மூடி, மண்ணுக்கு அடியில் 40-50 நாட்கள் புதைத்து வைக்க வேண்டும். பின்பு, தேங்காயை வெளியே எடுத்து உடைத்து அதற்குள் இருக்கும் விதைகளை நல்லெண்ணெய்யில் கொதிக்க வைத்து வடித்துத் தைலமாக்கி விடலாம். இதைத் தலையில் தேய்த்துக் குளித்துவர, தலைவலி, தலைப்பாரம் அகலும். கண்களுக்குக் குளிர்ச்சி ஏற்படும். தலைமுடி கருகருவென வளரும்.
கூந்தல் உதிர்வதைத் தடுக்க, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை ஆகியவற்றைத் தலா ஒரு கிண்ண அளவுக்கு எடுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதை ஒரு கிண்ணத் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துப் பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்க வேண்டும். பிறகு, இதனை ஒரு புட்டியில் ஊற்றி ஒருநாள் வைத்திருந்தால் தெளிந்து விடும். இந்த எண்ணெய்யைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்துச் சிகைக்காய்ப் பொடியைப் போட்டு அலசினால் கூந்தல் உதிர்வது நின்று விடும்.
நூறு கிராம் அரைக்கீரையில், புரதம் 2.8 கிராம், மாவுச்சத்து 7.4 கிராம், கலோரிச்சத்து 44 கி.கலோரி, தாதுப்புகள் 2.4 கிராம், சுண்ணாம்பு 364 மி.கிராம், பாஸ்பரஸ் 52 மி. கிராம், இரும்புச்சத்து 38.5 மி.கிராம் உள்ளன. வேறு எந்தக் கீரையிலும் இல்லாத அளவுக்கு அரைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால், இரும்புச்சத்துக் குறையால் ஏற்படும் இரத்தச்சோகை உள்ளவர்கள், தினமும் ஒரு கைப்பிடி அரைக்கீரையைப் பொரித்தோ மசித்தோ உண்ணலாம். இதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குச் சாப்பிட்டால், இரத்தத்தில் ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த அணுக்கள் அதிகரித்து, இரத்தச் சோகை நோய் அகலும்.
இதிலுள்ள பி வைட்டமின், வாய் ருசியற்றுப் போதலையும் பசியில்லாத நிலையையும் போக்கும். நரம்பு தொடர்பான நோய்களுக்கு அரைக்கீரை சிறந்த உணவாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்க, அரைக்கீரைச் சாற்றில் மிளகை ஊற வைத்து, உலர்த்தித் தூளாக்கி, தினமும் அரைத் தேக்கரண்டி அளவுக்கு எடுத்துத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். உணவாக மட்டுமின்றி, மருந்தாகவும் பயன்படும் அரைக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துப் பயன் பெறுவோம்.
முனைவர் மா.விமலாராணி,
முனைவர் பா.குமாரவேல், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!