கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019
நன்னீர் மீன் வளர்ப்பில், மீன்களின் ஊட்டத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், தரமற்ற தீவனத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது வழக்கமான செயலாகும். இந்தத் தீவனங்கள் எளிதில் கரைந்து, நீரின் தரத்தைக் குறைத்துப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தீவனமிடல் மற்றும் தீவன மேலாண்மையில் உள்ள குறைகளே மீன்வளர்ப்பில் இழப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன. ஏனெனில், மீனுற்பத்திக்கான மொத்தச் செலவில் 50-60% தீவனச் செலவாகும். ஆகவே, தீவனமிடலும் தீவன மேலாண்மையும் மீன் வளர்ப்பில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
உணவிடுவதில் புதிய உத்திகள்
ஆந்திரம், மேற்கு வங்கம், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலுள்ள முற்போக்கான மீன் பண்ணையாளர்கள் தனித்துவமான உணவிடும் முறைகளைக் கண்டறிந்துள்ளனர். இந்த முறைகளால் மீன்களின் ஊட்டக் கிரகிப்புத் தன்மை கூடுவதுடன், தீவனங்கள் வீணாதல் மற்றும் சத்திழப்புகள் குறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.
உணவை நிறுத்தும் முறை
இது எளிய தீவன மேலாண்மையாகும். இதில் மீன்களுக்கான உணவு, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை நிறுத்தப்படுகிறது. பொதுவாக, பத்து நாட்களுக்கு ஒருநாள் தீவனம் நிறுத்தப்படுவதால், ஒருநாள் உணவுச் செலவு குறைகிறது. இதனால் உற்பத்திச் செலவு கணிசமாகக் குறைகிறது.
இந்த உணவு முறை, மீன்களின் உண்ணும் அளவைக் கூட்டுகிறது என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. ஒருநாள் பட்டினியில் இருந்த மீன்கள், அடுத்து வழங்கப்படும் உணவை அதிகமாக உண்ணுகின்றன.
உணவுத் தவணைகளைக் கூட்டல்
தீவன மேலாண்மையின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று உணவிடும் தவணைகளைக் கூட்டுவதாகும். வளர்ப்புக் குளத்தில் பெரிய மீன்களின் ஆதிக்கத்தால், சிறிய மீன்களுக்கு உணவு சரியாகக் கிடைப்பதில்லை. இதனால், மீன்கள் வெவ்வேறு எடையில் இருக்கும்.
இந்நிலையை மாற்ற, உணவிடும் தவணைகளைக் கூட்டலாம். அதாவது, ஒருநாளில் ஒருமுறை அல்லது இருமுறை உணவிடுதலை தவிர்த்து, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை உணவிட வேண்டும். இதனால், மீன்கள் அனைத்தும் ஒரே எடையை அடையும்.
பை மூலம் உணவிடுதல்
மீன்களுக்குத் தேவைப்படும் போது உணவிட்டால், அவை உணவில் நிறைவடையும். மேலும் அவற்றின் வளர்ச்சியும் புரத உள்ளீடும் கூடும். இந்த உணவு முறை, தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தில் அதிகமாக உள்ளது.
துளையிட்ட பைகளில், தூள் தீவனம் அல்லது குச்சி அல்லது உருண்டைத் தீவனத்தை நிரப்பி, மூங்கில் கம்புகளின் கட்டி, நீருக்குள் மூழ்கி இருக்கும்படி தொங்க விடுகிறார்கள். இந்தத் தீவனத்தைத் தங்களுக்குத் தேவைப்படும்போது மீன்கள் கொரித்து உண்ணுவதால் தீவனம் நீரில் வீணாகக் கரைவதில்லை.
இதில், தீவனம் தீர்ந்ததும் அப்பைகளை வெளியே எடுத்து உலர்த்தி மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.
வேலி முறையில் உணவிடுதல்
இம்முறையில், குளத்தின் நடுவில் ஒரு சிறிய பகுதி நாற்புறமும் வலையால் வேலியாக அமைக்கப்படும். இந்த வேலி, நீரின் மேற்பரப்பில் ஒரு அடி மேலும், கீழும் இருக்கும். இதற்குள் மிதவை உணவுகள் இடப்படும்.
குறிப்பிட்ட இடத்தில் உணவை இடுவதால், மீன்கள் அந்த உணவை எளிதாக அணுக முடியும். மேலும், உணவு வீணாகாமலும் இருக்கும்.
வேக வைத்து உணவிடுதல்
வேகவைத்து உணவிடும் முறை என்பது, சில தாவரத் தீவன மூலப்பொருள்களை வேகவைக்கும் போது, அவற்றிலுள்ள ஸ்டார்ச் மூலக்கூறுகள் பிணைந்து பசையைப் போல மாறும். இது மீன்களில் சத்துகளின் கிரகிப்புத் தன்மையைக் கூட்டும்.
மேலும், எளிதில் செரிக்கும். ஆந்திர மீன் பண்ணையாளர்கள் அரிசிக் குருணையை வேக வைத்துக் கொடுக்கின்றனர். இம்முறை, கெளுத்தி மீன் வளர்ப்பில் அதிகமாகப் பயன்படுகிறது.
த.கௌசல்யா,
வே.இராணி, பா.சுந்தரமூர்த்தி, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி,
தலைஞாயிறு, நாகை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!