கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020
முக்கியச் சத்துகள், எளிதில் செரிக்கும் தன்மை, பக்கவிளைவற்ற தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ள மீன், உலக மக்களின் விருப்ப உணவாக உள்ளது. எனவே, மீன் வணிகமும் உலகளவில் முக்கிய இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தேவையைச் சமாளிக்கும் நோக்கில் மீன்களைப் பிடித்து வருவதால், கடல்மீன் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இப்படி, தேவை அதிகரிப்பதும், மீன்வளம் குறைவதும், கலப்படம் செய்யும் நிலைக்கு வணிகர்களைக் கொண்டு சென்றுள்ளன.
மீன் உணவு மோசடி
மீன் உணவு மோசடி என்பது, அதிக இலாபம் ஈட்டுவதற்காக, கடல் உணவு விநியோகச் சங்கிலியில், மேற்கொள்ளப்படும் முறையற்ற செயல்களின் தொகுப்பாகும்.
கடல் உணவு விற்பனை, மிக நீண்ட வணிக அமைப்பைக் கொண்டுள்ளதால், எவ்விடத்தில் உணவு மோசடி நடக்கிறது என்பதைக் கண்டறிதல் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
மீன் வகைகளில் கலப்படம், எடையைக் கூட்ட மீனற்ற பொருள்களைக் கலப்படம் செய்தல், மீன் குறித்த குறிப்புகளில் தவறான தகவல்களை அச்சிடுதல், இறக்குமதி வரியைக் குறைக்க, ஒரு நாட்டில் பிடித்த மீன்களின் விவரங்களை மறைத்து, வரி குறைவாக உள்ள வேறொரு நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்தல் போன்றவை, நுகர்வோரின் நிதியிழப்புக்கும் உடல்நலப் பாதிப்புக்கும் காரணங்களாக உள்ளன.
மீன் இனங்களில் கலப்படம்
மீன் உணவு மோசடிச் செயல்களில், மீனினக் கலப்படம் மிக முக்கியமாகும். அதாவது, ஒரு மீனின் பெயரைச் சொல்லி இன்னொரு மீனினத்தை விற்பது. இதில் பெரும்பாலும் விலை குறைந்த மீன் வகைகள், விலையுயர்ந்த மீன் வகைகளின் பெயர்களில் விற்கப்படுகின்றன.
அதிலும், நுகர்வோர் விரும்பும் மீன் வகைகளின் பற்றாக்குறையைச் சமாளிக்க, அந்த மீன்களின் பெயரைச் சொல்லி, விலை மற்றும் தரம் குறைந்த மீன்களை விற்கின்றனர்.
அதிக இலாபம் ஈட்டும் நோக்கிலான இச்செயல், நுகர்வேர் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் கடும்பாதிப்பை விளைவிக்கும் மோசடியாகக் கருதப்படுகிறது.
இது குறித்த ஓர் ஆய்வில், 37% மீன்களிலும், 13% மற்ற கடல் உணவுப் பொருள்களிலும் கலப்படம் செய்ததாகக் கண்டறியப்பட்டது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கக் கடல் பகுதிகளில் மட்டும் கிடைக்கும் ஒருவகைச் சிவப்புக்கீளி மீன்களில், விலை குறைந்த மற்ற மீன் வகைகளை 94% கலப்படம் செய்ததாகத் தெரிய வந்துள்ளது.
கலப்பட முறைகள்
ஒருவகை மீனுக்குப் பதிலாக மற்ற மீன் வகைகளை விற்பது. பிடித்த இடத்தை மாற்றி வேறொரு இடத்தில் பிடித்ததாகச் சொல்லி விற்பது. வளர்ப்பு மீன்களைக் கடல்மீன் என்று சொல்லி விற்பது. மரபியல் மாற்றம் செய்யப்பட்ட மீன்களை, இயற்கை மீன் என்று சொல்லி விற்பது.
குறிப்பிட்ட மீனின் தேவையும் அதன் விலையும் கூடுதலாக உள்ள நிலையில், மலிவாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் மீன்களின் தோல், தலை, வால் போன்றவற்றை நீக்கி விட்டு, விலை கூடுதலான மீனின் பெயரைச் சொல்லி விற்பது.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் அதிக விலை மற்றும் பெரும்பகுதி மக்கள் விரும்பும் சீலா மீனின் பெயரைச் சொல்லி; எளிதாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் கெளுத்தி மீன்களை; தலை மற்றும் தோலை நீக்கிவிட்டு அதிக விலைக்கு விற்பது.
அமெரிக்க மற்றும் கனடாவில், அதிக விலையும் விருப்பமும் உள்ள சிவப்புக்கீளி மீனுக்குப் பதிலாக, விலை குறைந்த மற்ற கீளி வகை மீன்களை விற்பது.
அதைப்போல, சிலவகை மீனினங்கள் உலகில் பல இடங்களில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வளரும் இதே மீன்கள் சுவையாக இருப்பதால், இவற்றின் தேவையும் கூடுதலாக உள்ளது.
இலாப நோக்கத்தில், இது இந்த இடத்தில் பிடித்த மீனென்று பொய்யைச் சொல்லி கூடுதல் விலைக்கு விற்பது. எ.கா: அதிக விலையுள்ள ஐரோப்பிய நெத்திலி என்று சொல்லி, விலை குறைந்த தெற்கு அமெரிக்க நெத்திலியை விற்பது.
வளர்ப்பு மீன்களை விட ருசியானது, விலை கூடுதலானது, மக்களால் அதிகமாக விரும்பப்படுவது கடன் மீன். எனவே, இதைச் சாதகமாகக் கொண்டு, பண்ணை மீன்களைக் கடல்மீன் என்று சொல்லி அதிக விலைக்கு விற்று விடுகின்றனர்.
எ.கா: இந்தியாவில் பண்ணை வளர்ப்பு இறால்கள், கடல் இறால்கள் என்று விற்கப்படுகின்றன. மேலை நாடுகளில், பண்ணையில் வளர்க்கப்படும் சால்மன், கொடுவா, ட்ரவுட் ஆகிய மீன்கள், இயற்கையாக வளர்ந்தவை என அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட மீன்கள், இயற்கையாக வளர்ந்த மீன்கள் என விற்கப்படுகின்றன.
மீன் உணவு உற்பத்தியைப் பெருக்க, இயற்கை மீன்வளத்தைத் தவிர, பண்ணை வளர்ப்பு முறை கொண்டு வரப்பட்டது. அடுத்து, வளர்ப்பு மீன்களில் மரபணு மாற்றம் செய்து, அதிக நிறமும் ருசியுமுள்ள மீன்களாக உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த மீன்களை, அரசின் அனுமதியைப் பெற்று, மரபியல் மாற்றம் செய்யப்பட்ட மீன்கள் எனக் குறிப்பிட்டுத் தான் விற்க வேண்டும். ஆனால், இதைக் கண்டு கொள்ளாமல், இம்மீன்கள், இயற்கை மீன்களைப் போலவே விற்கப்படுகின்றன. எ.கா: மரபணு மாற்றப்பட்ட சால்மன், சாதாக்கெண்டை, திலேப்பியா மீன்கள்.
கலப்பட ஆபத்துகள்
நலக்கேடு: மீன் கலப்படத்தால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. ஹாங்ஹாங் நாட்டில் 600க்கும் மேற்பட்ட மக்கள் அட்லாண்டிக் காட் மீன் என்று நம்பி, விலை மலிவான எஸ்காளர் மற்றும் எண்ணெய் மீன்களை உண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காரணம், இந்த இரண்டு மீன்களிலும் இருக்கும் ஜெம்பைலோடாக்ஸின் என்னும் வேதிப்பொருள்; வாந்தி, பேதி போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும் தன்மை மிக்கவை. மேலும், இந்த மீன்கள், சூரை, காட் துடுப்பு மீன், மற்றும் கொடுவா மீன் என, மக்களை ஏமாற்றி விற்கப்படுகின்றன.
பேத்தை மீனானது துறவி மீன் என்னும் பெயரில் விற்கப்படுகிறது. பேத்தை மீனிலுள்ள டெட்ரடோடாக்ஸின் என்னும் பொருள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நஞ்சாகும். இது, தசைகளைக் களைப்படையச் செய்து வாதத்தையும் இறப்பையும் ஏற்படுத்தும்.
அதைப்போல, நச்சுப்பாசிகள் நிறைந்த மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பிடிக்கும் மீன்களை, மற்ற தரமான மீன்களுடன் கலப்படம் செய்வதால், அந்த மீன்களிலுள்ள சிகுவாட்ரா என்னும் நஞ்சால், மனித வயிறு, நரம்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படலாம்.
ஹிஸ்டமைன் என்னும் வேதிப்பொருள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது, சிலவகை மீன்களில் அதிகமாக உள்ளது. இந்த மீன்களை மற்ற மீன்களுடன் கலப்படம் செய்தால், ஒவ்வாமை உள்ளவர்கள் பாதிப்பை அடைவார்கள். எ.கா: ஹிஸ்டமைன் நிறைந்த சூரை மற்றும் மயில் மீன்களை, களவாய் மீன்கள் என்று விற்பனை செய்தல்.
டைல்பிஷ் போன்ற சிலவகை மீன்களில் பாதரசம் அதிகமாக இருக்கும். கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த மீனை உண்ணக் கூடாது. இந்த மீன்கள், சிவப்புக்கீளி மற்றும் ஹாலிபுட் மீன்கள் என்று சொல்லி விற்கப்படுகின்றன. இவற்றால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.
நிதியிழப்பு: மீன் கலப்படத்தால் விலையுயர்ந்த மீன்களுக்குப் பதிலாக விலை மலிவான மீன்களை, அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் நிதியிழப்பு, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
எ.கா: ஒரு நாட்டில் அதிகமாக விரும்பப்படும் ஒருவகை மீனுக்குப் பதிலாக, அதே பெயரில் மற்றொரு நாட்டிலிருந்து பெறப்படும் விலை மலிவான மீன் வகைகளால் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நிதிநிலை சீர்கெடும்.
சரியான விலை கொடுத்து வாங்கும் நுகர்வோருக்கு உணவின் உண்மைத் தன்மையையும், தரத்தையும் அறியும் உரிமை உள்ளது. கடல் உணவு முறைகேடுகள், நுகர்வோருக்கு நிதியிழப்பு, உடல்நலப் பாதிப்பு மற்றும் கடல் சூழல் பாதிப்புக்கும் முக்கியக் காரணமாக அமைகின்றன.
எனவே, இந்த முறைகேடுகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவது மிகமிக அவசியமாகும். கடல் உணவு உற்பத்தி முதல் அது நுகர்வோரை அடையும் வரையில் அனைத்து நாடுகளும் தீவிரமாகக் கண்காணித்தால் தான் இந்தக் கலப்படத்தைத் தடுக்க முடியும்.
பா.சிவராமன்,
இரா.ஷாலினி, த.சூர்யா, உ.அரிசேகர், ச.சுந்தர், இரா.ஜெயஷகிலா,
ஜீ.ஜெயசேகரன், மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி-628008.
சந்தேகமா? கேளுங்கள்!