கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019
கறவை மாடுகளுடன் ஒருங்கிணைத்து மீன் வளர்ப்பை மேற்கொள்வது, அதிக இலாபத்தை அளிக்கக் கூடியது. விவசாயிகள் பலர் இதைக் கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு எக்டருக்கு 5-6 கறவை மாடுகளை வளர்க்கலாம்.
400-450 கிலோ எடையுள்ள ஒரு மாட்டில் இருந்து ஆண்டுக்கு 4 முதல் 5 டன் சாணம் மற்றும் 3,500-4000 லிட்டர் சிறுநீர் கிடைக்கும்.
சாணம் ஒரு நிமிடத்தில் 2-6 செ.மீ. ஆழம் வரை செல்லும். இது, சாணத்தை உணவாக மீன்கள் எடுத்துக்கொள்ளப் போதுமான நேரமாகும். கட்லா, வெள்ளிக் கெண்டை ஆகிய மீன்களுக்குச் சாணமும் சிறுநீரும் முழு உணவாகும்.
சாணத்தில், 0.2-0.4% தழைச்சத்தும், 0.5-0.8% மணிச்சத்தும், 0.10-0.7% சாம்பல் சத்தும் உள்ளன. மாட்டுச் சிறுநீரில், 1.1% தழைச்சத்தும், 1.4% சாம்பல் சத்தும் உள்ளன. இந்த அடிப்படையில், 5-6 மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணமானது, ஒரு எக்டர் குளத்திலுள்ள மீன்களுக்கான இயற்கை உணவை உற்பத்தி செய்யப் போதுமானது.
மேலும் சாணத்தில், கார்பன்-ஹைட்ரஜன் விகிதம் மிக அதிகமாக இருப்பதால் (25:1) சிறுநீருடன் கூடிய கழிவு சிறந்ததாகக் கருதப்படுகிறது.
எனவே, குளத்தின் அருகில் சிமெண்ட் தரையாலான கொட்டகையை, மாட்டுக்கு 2-3 சதுர மீட்டர் இடவசதியுடன் அமைத்து, மாடுகளின் கழிவுகள் நேரடியாகக் குளத்தை அடையும்படி செய்ய வேண்டும். இதனால், நேரமும் ஆள்கூலியும் மிச்சமாகும். ஒரு மாட்டுக்கு ஆண்டுக்கு 7,000-8,000 கிலோ பசும்புல் தேவை. இதில், 2,500 கிலோ புல் வீணாகிறது.
இந்தப் புல்லைக் குளத்திலுள்ள புல் கெண்டைகளுக்குக் கொடுப்பதன் மூலம் அந்த மீன்களுக்கான உணவுச் செலவு குறையும். மேலும், மாடுகள் வீணாக்கும் புண்ணாக்கு, தானியங்கள் போன்றவற்றையும் நேரடியாக மீன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம்.
இவ்வகையான ஒருங்கிணைந்த பண்ணை மூலம் ஆண்டுக்கு 9,000 கிலோ பாலையும், 3,000-4,000 கிலோ மீன்களையும் பெற முடியும்.
குளத்துக்கான இயற்கை உரம் இலவசமாகக் கிடைக்கிறது. மாடுகளுக்குத் தேவையான நீர் கிடைக்கிறது. மீன்களை உற்பத்தி செய்வதற்கான செலவு குறைகிறது. வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது. மேலாண்மை முறைகள் எளிமையாக உள்ளன.
முனைவர் க.தேவகி,
உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு-603203.
சந்தேகமா? கேளுங்கள்!