My page - topic 1, topic 2, topic 3

மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்ப்பு!

மிதவைக் கூண்டுகளில் மீனை வளர்ப்பது, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காலங் காலமாக இருந்து வரும் முறையாகும். பிறகு, இம்முறை, உலகம் முழுவதும் பரவியது. மிதவைக் கூண்டு என்பது வலைக்கூண்டு போன்றது. நீர் உள்ளே, வெளியே சென்று நீர்ப் பரிமாற்றம் ஏற்படும் வசதியைக் கொண்டது. மீன்களின் கழிவும், மீதமுள்ள உணவும் வெளியேறும் வசதியுள்ளது. மிதவைக் கூண்டானது, பாரம்பரியக் கூண்டுகள், வணிக நோக்கிலான கூண்டுகள் எனப் பல வகைகளில் உள்ளன.

மிதவைக் கூண்டுகளை அமைத்தல்:

இதற்குச் சட்டம் மற்றும் வலை தேவைப்படும். மரம், பிவிசி மற்றும் ஜிஐ குழாய் போன்ற பொருள்களைக் கொண்டு சட்டத்தைச் செய்யலாம். முதலீட்டுக்கு ஏற்றபடி சட்டத்துக்கான பொருள்களைத் தேர்வு செய்யலாம்.

கூண்டின் வடிவம்: 

வட்டம், நீளம், சதுரம், செவ்வகம் ஆகிய வடிவங்களில் கட்டலாம். பிற வடிவங்களை ஒப்பிடும்போது வட்ட வடிவம் சிறந்தது. ஏனெனில், அலையால், காற்றால், நீரோட்டச் சுழற்சியால் பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. கடலில் வளர்க்க உகந்தது வட்ட வடிவக் கூண்டுகளாகும்.

கூண்டின் அளவு:

கூண்டின் விட்டம் 8 மீட்டர், 6 மீட்டர், 15 மீட்டர் என, நீர் நிலைகளைப் பொறுத்து அளவைத் தேர்வு செய்யலாம். கூண்டின் ஆழம் 2 முதல் 10 மீட்டர் வரை, நீர் நிலையின் ஆழத்தைப் பொறுத்து முடிவு செய்யலாம்.

கட்டுமானப் பொருள்களின் தரம்:

மிதவைக் கூண்டுகளை அமைக்கத் தேவைப்படும் பொருள்கள், உறுதியாகவும், கனமாக இல்லாமலும், எளிதில் கிடைப்பதாகவும், மீன்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும்.

கூண்டின் வலைப்பகுதி:

மிதவைக் கூண்டுகளில் மூன்று விதமான வலைகள் உள்ளன. உள் வலையின் கண் அளவு 16-40 மி.மீ, வெளி வலையின் கண் அளவு 40 மி.மீ.க்கு மேல், பறவைகள் புகுவதைத் தடுக்கும் வலை 80 மி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.

கூண்டின் சட்டம் உள் மற்றும் வெளி வட்டம் உடைய அமைப்பைக் கொண்டது. அதில் வலைகள் கட்டப்படுகின்றன. உணவளிக்க, பராமரிக்க, மிதவைக் கூண்டின் சட்டத்தின் வெளியே ஆட்கள் சுற்றி வருவதற்கு ஏற்ற நடைபாதை, கைப்பிடி ஆகிய வசதிகள் இருத்தல் அவசியம்.

மிதவைக் கூண்டுகளை நிறுவுதல்:

நீர் நிலைகளில் மிதவைக் கூண்டை நிறுவும் போது, நீரோட்டம் நன்றாக உள்ளதா, வேகமான அலைகளின் பாதிப்பு இருக்குமா, மாசுபடாத இடமாக உள்ளதா, தேவையான ஆழம் உள்ளதா, கூண்டின் கீழ் 0.5-1 மீட்டர் இடைவெளி இருக்குமா, ஆட்கள் சென்று வர வசதியுள்ளதா, பாதுகாப்பான இடமாக உள்ளதா எனக் கவனிக்க வேண்டும்.

ஓரிடத்தில் நங்கூரமிட்டு மிதவைக் கூண்டை நிறுவும்போது, கூண்டானது சுற்றிவர வாய்ப்பு உண்டு. கடலில் நிறுவ இதுவே சிறந்த முறை. நன்னீர் மற்றும் உவர்நீர்ப் பகுதியில் இரண்டு இடத்திலோ அல்லது மூன்று இடத்திலோ கம்புகளை ஊன்றி அவற்றில் மிதவைக் கூண்டைக் கட்டலாம். கூண்டு ஒரே இடத்தில் நிலையாக இருக்கும்.

மீனினத் தேர்வு:

கடல்சார் மிதவைக் கூண்டுகளில் வளர்க்க, கொடுவா மீன், மடவை மீன், இறால், சிங்கி இறால் இரகங்கள் ஏற்றவை. உவர்நீர்ப் பகுதிகளுக்கு முத்துப்புள்ளி மீன், திலேப்பியா மீன் இரகங்கள் ஏற்றவை. நன்னீர் நிலைகளில், கெண்டை மீனினங்கள், கெளுத்தி மீன், மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை, ஒரு கன மீட்டருக்கு 75-80 மீன்கள் வீதம் இருப்பு வைக்கலாம்.

மிதவைக் கூண்டின் அளவுக்கு ஏற்றாற் போல், மீன்களைக் கணக்கிட்டு இருப்பு வைக்க வேண்டும். 15 மீட்டர் விட்டமுள்ள மிதவைக் கூண்டில் 30 ஆயிரம் மீன்களை இருப்பு வைக்கலாம். 6 மீட்டர் விட்டமுள்ள கூண்டில் 5000-10,000 மீன்களை இருப்பு வைக்கலாம்.

இருப்பு வைக்கும் மீன்களின் எடை குறைந்தது 25 கிராம் இருக்க வேண்டும். வளர்ப்புக் காலத்தைப் பொறுத்து இருப்படர்த்தியை மாற்றிக் கொள்ளலாம். 100 கிராம் எடையுள்ள மீன்களை இருப்பு வைத்தால் 4-5 மாதத்தில் ஒரு கிலோ எடையை அடையும். 3-5 டன் மீன்களை உற்பத்தி செய்யலாம். தனிப்பட்ட மீனின் எடை 800-1000 கிராம் இருக்கும். பிழைப்புத்திறன் 98% ஆகும்.

உணவளித்தல்:

வளர்க்கப்படும் மீன்களுக்கு ஏற்ற உணவை அளிக்க வேண்டும். அதைப் பொறுத்துத் தான் மீன்களின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் இலாபம் அமையும். கழிவு மீன்கள், மிதக்கும் தீவனம், மூழ்கும் தீவனம், மீன்களின் உடல் எடையில் 4-8% இருக்க வேண்டும். உணவை 2-3 முறையாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். மீன்களின் இரகத்தைப் பொறுத்து உணவளிக்க வேண்டும். மாமிச உண்ணி, தாவர உண்ணி மற்றும் அனைத்துண்ணி மீன்களுக்கு ஏற்றபடி உணவளிக்க வேண்டும். மூழ்கும் தீவனத்தை உணவுத் தட்டிலும், மிதக்கும் தீவனத்தை உணவு வளையத்திலும் அளிக்க வேண்டும்.

வலைமாற்றம்:

மிதவைக் கூண்டின் உள்வலையை மாற்ற வேண்டும். ஏனெனில், வலையின் மீது பாசிகள், சிப்பிகள் ஒட்டும் போது வலையின் கண்கள் மறைந்து விடும்.  நீர் மாற்றம் ஏற்படாது. அதனால் மீன்கள் இறக்க நேரிடும். எனவே, மாதம் ஒருமுறை வலையின் நீர் மாற்றத்துக்கு ஏற்ப உள்வலையை மாற்ற வேண்டும். மாற்றப்படும் வலைக்கண் 15-40 மி.மீ. இருக்க வேண்டும்.

அறுவடை: பருவத்துக்கு ஏற்ப, தேவைக்கேற்ப, மீன் வளர்ச்சிக்கு ஏற்ப அறுவடை செய்யலாம். ஒரு வலைக்கூண்டில் 3-4 டன் மீன்களை அறுவடை செய்யலாம்.

மிதவைக் கூண்டு மீன் வளர்ப்பின் பயன்கள்: குளம் வெட்டுவதைக் காட்டிலும் மிதவைக் கூண்டுகளை வடிவமைப்பது எளிது. வளர்க்கப்படும் மீன்களை நேரடியாகக் காண்பதும், உணவளிப்பதும், பராமரிப்பதும் எளிது. மிதவைக் கூண்டுகளில் வளர்க்கப்படும் மீன்களின் தரம் சிறப்பாக இருக்கும். நிலமில்லாதவர்கள், இயற்கையான நீர் நிலைகளில் மீன் வளர்க்க வாய்ப்பு ஏற்படுகிறது. மீன்களை அறுவடை செய்வது எளிது. வளர்ப்பு மீன்களை எதிரி மீன்களிடம் இருந்து பாதுகாக்கலாம்.

குறைகள்:

மீன்களுக்கு இயற்கை உணவு கிடைப்பது குறையும். மேலுணவை நம்பித் தான் வளர வேண்டும். அதிகமாக மீன்களை இருப்பு வைத்து வளர்க்கும் போது, மீன்களுக்கு நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.


முனைவர் சு.பாலசுந்தரி,

இணைப் பேராசிரியை, மீன்வளத் தொழில்நுட்ப நிலையம், பொன்னேரி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks