கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021
அலங்கார மீன் தொட்டி மற்றும் மீன் பண்ணை வைத்திருப்போர் அவசியம் வாங்க வேண்டிய கருவி காற்றுப் புகுத்தியாகும். ஏனெனில், காற்றுப் புகுத்தி தொட்டிக்குள் காற்றைச் செலுத்தும் அடிப்படைப் பணியைச் செய்கிறது. இப்படி மீன் தொட்டிக்குள் செலுத்தப்படும் காற்று, மீன்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை நீரில் கரைத்து விடுகிறது. மேலும், மீன் தொட்டியின் அழகை அதிகரிக்கிறது. மீன் தொட்டியில் வடிகட்டும் கருவி நன்கு இயங்கவும் காற்றுப் புகுத்தி உதவுகிறது.
பயன்பாடுகள்
காற்றேற்றம்: மீன்கள், தாம் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனைத் தமது செவிள்களின் மூலம் எடுத்துக் கொள்ளும். பொதுவாகத் தொட்டிகளின் மேற்பரப்பில் தான் ஆக்ஸிஜன் இருக்கும். ஆனால், போதியளவில் இருக்காது. எனவே, காற்றுப் புகுத்தி மூலம் காற்றை நீரில் குமிழ்களாக விடும் போது, ஆக்ஸிஜன் மற்றும் கரியமில வாயுவைப் பாதுகாப்பான அளவில் பராமரிக்க முடியும்.
நீரில் சிறு குமிழ்களாகக் காற்றைச் செலுத்தும் போது, ஆக்ஸிஜன் அதிகளவில் நீரில் கலக்கும். இப்படிச் சிறு குமிழ்களை உருவாக்கும் காற்றுக் கற்கள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. குழாயின் அடியில், வட்ட வடிவில். தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். சிறிய தொட்டியில் பெரிய காற்றுக் கற்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், காற்றை அதிக அடர்த்தியில் விடும் போது, நீர் கலங்க நேரிடும். ஆகவே, ஒரு கண்ணாடித் தொட்டிக்கு ஒரு காற்றுக்கல் போதும்.
அழகைக் கூட்டும்: காற்றுக் கற்கள் காற்றுப் புகுத்தியுடன் செயல்படுவதுடன், மீன் தொட்டியின் அழகையும் கூட்டும். காற்றுக் கற்களுடன் ஒளிரும் மின் விளக்கை இணைத்தால் மேலும் அழகைக் கூட்டலாம்.
வடிகட்டிகள்
கல் வடிகட்டி மற்றும் பஞ்சு வடிகட்டி காற்றுப் புகுத்தியால் செயல்படும். காற்றுக் குமிழ்கள், வடிகட்டியின் உள்ளே செல்லும் வகையில் நீரை உந்தித் தள்ளும். இப்படி உருவாகும் சுழற்சியால் சுத்திகரிப்பு மூலப் பொருள்களின் இடையே செல்லும் நீர் சுத்தமாகும். மேலும், காற்றைச் சுவாசிக்கும் பாக்டீரியாக்கள், உயிரி வடிகட்டிக்குள் நன்கு வளர உதவும். இவ்வகை வடிகட்டியைப் பயன்படுத்தும் போது, தனியாகக் காற்றுக் கற்கள் அவசியம் இல்லை. அதனால், காற்றுப் புகுத்தியின் திறன், இந்த வடிகட்டியின் தேவையை விட அதிகத் திறனுள்ளதாக இருக்க வேண்டும்.
புரத நீக்கி
மீன் தொட்டியில் இருந்து தேவையில்லாத புரதம், கழிவுகளை நீக்குவதற்கு, புரத நீக்கிகள், காற்றுக் கற்களைப் பயன்படுத்திக் கொள்ளும். புரத நீக்கிகள் காற்றுப் புகுத்திகளின் உதவியுடன் நன்கு செயல்படும். கடல் நீர் அலங்கார மீன் தொட்டிகளில் இது தவிர்க்கக் கூடாத பாகமாகும்.
காற்றுப் புகுத்தியின் வகைகள்
உதரவிதான பம்பு: இது, ஒரு ரப்பர் உதரவிதானத்தை அழுத்துவதால் ஏற்படும் காற்று அழுத்தத்தை, வால்வுகள் மூலம் ஒரு திசையில் செலுத்த உதவுகிறது. இது, மலிவான மற்றும் வீட்டில் வைக்கும் சிறிய கண்ணாடித் தொட்டிகளுக்கு ஏற்றது. பெரிய பண்ணைகளுக்கு ஏற்றதல்ல. இது, தொடர்ந்து இயங்கும் போது எளிதில் பழுதாகிப் போகலாம்.
கம்ப்ரேஸர் பம்பு: இதில் பிஸ்டன் மூலம் காற்றழுத்தம் உருவாக்கப்படும். இந்த பம்பு அதிகத் திறன் மிக்கதாக இருக்கும். பெரிய பண்ணைகளில் பயன்படுத்த ஏற்றது. இதன் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த பம்பு சீராக இயங்க எண்ணெய் பயன்படுவதால், காற்றின் மூலம் மிகச் சிறிய அளவில் எண்ணெய் மீன் தொட்டிகளில் கலந்து விடலாம். அதனால், இப்பம்பை இயக்கும் போது அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும். அல்லது எண்ணெய்ப் பொறியை (oil trap) வைத்து இயக்க வேண்டும். அல்லது எண்ணெய் இல்லாத (oil free) கம்ப்ரேஸரை வாங்க வேண்டும்.
காற்றூதி (Air blowers): இந்த பம்பு, காற்றுச் சுழலில் இயங்கும். எண்ணெய்ப் பயன்பாடு இல்லாததால், இதனால் மீன்களுக்குப் பாதிப்பில்லை. இதில் அழுத்தம் அதிகமாக இருக்காது. ஆனால், அதிகக் காற்றைப் புகுத்தும் திறன் இருக்கும். சிறிய தொட்டிகள் உள்ள பண்ணைக்கு ஏற்றது. இதன் விலை அதிகமாக இருந்தாலும், மிகக் குறைந்த சப்தத்தை எழுப்புவதால் சிறந்தது.
அதிகத் திறனுள்ள காற்றுப் புகுத்திகள்: மீன் தொட்டி 18 அங்குலத்துக்கும் அதிக ஆழமுள்ளதாக இருந்தால், அதிகத் திறனுள்ள காற்றுப் புகுத்தி தேவை. இது பெரிய மீன் தொட்டிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய காற்றுக் கற்களுடன் அதிக அழுத்தம் தேவைப்படும் மீன் குளங்களுக்கும் ஏற்றது. சாதாரணக் காற்றுப் புகுத்தியை விட, இந்தக் காற்றுப் புகுத்தி, இயக்கத்தின் போது அதிக சப்தத்தை ஏற்படுத்தும்.
மின்கலம் மூலம் இயங்கும் காற்றுப் புகுத்தி: இது மின்கலம் மூலம் இயங்குவதால், இதற்குச் செருகுப்பட்டை (plug) தேவையில்லை. இது, உயிர் மீன்களை வெகு தொலைவுக்கு எடுத்துச் செல்வதற்குப் பயன்படும். இது, AC, DC ஆகிய இரண்டு திறனையும் பயன்படுத்தும் வகையில் இருக்கும்.
காற்றுப் புகுத்தியின் பாகங்கள்
காற்றுவழிக் குழாய்: இதுவே காற்றுப் புகுத்தியையும், காற்றுக் கற்கள் முதலான பொருள்களையும் இணைக்கும்.
அடைப்பான் (Check valve): நீர் பின்னோக்கிச் செல்வது, காற்றுப் புகுத்தியைப் பாதிப்பதுடன், மின்சாரத் தீங்கையும் ஏற்படுத்தும். எனவே, காற்றுப் புகுத்திக்கு அடைப்பான் அவசியம். ஏனெனில், இதுவே காற்றை, காற்றுவழிக் குழாயின் மூலம் ஒரு வழியில் மீன் தொட்டியில் செலுத்தவும், தொட்டி நீர், காற்றுக் குழாய் வழியாகப் பின்னோக்கிச் செல்வதைத் தடுக்கவும் பயன்படுகிறது.
கூட்டுக்குழு மாற்றியமைப்பான்: இது, ஒன்றுக்கும் மேற்பட்ட காற்றுவழிக் குழாய்களை இணைக்கப் பயன்படும். இதன் மூலம் ஐந்துக்கும் மேற்பட்ட காற்றுவழிக் குழாய்களை இணைக்கலாம். இது, குழாய்களைத் தனித்தனியாக மாற்றியமைக்கும். இதனால் தொட்டியில் விருப்பமான விளைவை ஏற்படுத்த முடியும்.
காற்றுப் புகுத்தியை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
நமக்குத் தேவையானதை விடச் சற்றுப் பெரிய காற்றுப் புகுத்தியை வாங்க வேண்டும். இது, பின்னாளில் அதிகக் காற்றுப் பயன்பாடுள்ள தொட்டியில் பயன்படுத்த உதவும். காற்றுப் புகுத்தியை வைக்கும் இடம் மிகவும் முக்கியம். பெரும்பாலும் காற்றுப் புகுத்தி தொட்டியின் அடியில் வைக்கப்படுகிறது. ஆனால், இது மிகவும் மோசமான இடம். ஏனெனில், இதனால் தொட்டியிலுள்ள நீர், காற்றுப் புகுத்திக்குள் போக வாய்ப்புள்ளது.
மேலும், தொட்டியின் கீழே இருக்கும் போது நீரின் அழுத்தம் அதிகமாக இருப்பதால், காற்றுப் புகுத்தி அதிக சப்தத்தை எழுப்பும். எனவே, காற்றுப் புகுத்தி நீர் மட்டத்துக்கு மேலே தான் இருக்க வேண்டும்.
முனைவர் சா.ஆனந்த்,
ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ்சபரி, வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு,
ச.சுதர்சன், டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி, தலைஞாயிறு, நாகப்பட்டினம்.
சந்தேகமா? கேளுங்கள்!