அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூலைக் கூட்டுவதில் தேனீக்கள் முக்கியப் பங்காற்றுவதால் மேலை நாட்டினர் தேனீக்களை, வேளாண் தேவதைகள் என்று போற்றுகின்றனர். மேலும், தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் தேன், தேன் மெழுகு, இராஜபாகு போன்ற பல்வேறு பயன்களை அடைவதற்காகத் தேனீ வளர்ப்பை மக்கள் மேற்கொள்கிறார்கள்.
தேனீ வளர்ப்பைப் பகுதிநேர வேலையாகச் செய்ய முடியும் என்பதால், இது இலாபமிக்க தொழிலாகப் பார்க்கப்படுகிறது. இது, முற்றிலும் இயற்கையைச் சார்ந்த தொழிலாகக் கருதப்படுகிறது. தேனீ வளர்ப்பு, விவசாயம் மற்றும் தோட்டக்கலை உணவு உற்பத்தியைப் பெருக்கும் ஆற்றலையும் கொண்டது. சுற்றுச்சூழலையும் மேம்படுத்த உதவும்.
பூச்சி இனங்களில் தேனீக்கள் தனித் தன்மையும் அதிகப் புத்திசாலித்தனமும் வாய்ந்தவை. எந்த ஒரு சூழ்நிலையிலும் வாழ்வதற்குத் தயாராகிக் கொள்ளும் இயல்பு மிக்கவை. இதனால் தான் தேனீக்களால் இயற்கையாகக் கட்டப்படும் தேன்கூடு கலைக்கப்படும் போது, அவை மற்றோர் இடத்தில் புதிதாகக் கூட்டை அமைத்துக் குடியேற முடிகிறது. இப்படி, தனித்தன்மை வாய்ந்த தேனீக்கள் தேனை உற்பத்தி செய்வதுடன், பல்வேறு வகைகளில் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் மற்றும் பல உயிரினங்களுக்கும் நன்மைகளைச் செய்து வருகின்றன.
சுற்றுச்சூழல் காரணிகள்
இந்தியாவில் பெரும்பாலும் வளர்க்கப்படும் தேனீ வகையானது, ஏபிஸ் செரானா இன்டிகா என்னும் அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. தேனீக்கள் ஓரளவு இருளான மற்றும் குளிரான இடங்களில் ஒரு சமூகமாக வாழக் கூடியவை. தேனீக்கள், நிழல் தரும் இடங்களை, அதிலும் குறிப்பாக அருகில் மரங்கள் நிறைந்த இடங்களைத் தங்களின் இருப்பிடங்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன.
ஒருவேளை காற்று அதிகமாக வீசினாலும் அதனால் தேன்கூட்டுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தச் சூழல் இருக்கும். தேனீக்கள் சுத்தமான நீரையே விரும்பும். தேனி வளர்ப்புத் தொழிலில், சுத்தமான, சுகாதாரமான நீரைப் பயன்படுத்தினால், தேனீக்கள் அதிகளவிலான தேனை உற்பத்தி செய்து தரும்.
தேனீக்கள் வளர்ப்பிடத்தில் பழைய தேன் கூட்டின் சிறிய துண்டை வைத்து விட்டால், தேனீக்கள், தம்மைப் பராமரிப்பவரை நண்பராகப் பாவிக்கும். தீண்டுதல் ஏதும் செய்வதில்லை. இயற்கையான தேன்கூடு கிடைக்கவில்லை என்றால், மரத்தினால் ஆன செயற்கைத் தேன்கூட்டை உருவாக்கி வைத்து விடலாம். செயற்கை முறையில் தேனீக்களை வளர்க்கும் போது அவற்றுக்குத் தேவைப்படும் மகரந்தச் செடிகள் அருகில் இருக்க வேண்டும். இச்சூழல், தேனீக்கள் தரமான தேனை மிக விரைவாகச் சேகரிக்க உதவும்.
கடுமழை பெய்யும் போது, தாவரங்களின் பூத்தல் செயல்பாடு குறைவதால் தேனீக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். இருப்பினும், தேனீக்கள் தேனைச் சேமிப்பதற்கு மழையும், உலர் காலநிலையும் அவசியமாகும்.
தேனீ வளர்ப்பில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும்
தேனீக்குடிகள் கைவிட்டுச் செல்லல்: தேனீக்கள் தேன் கூட்டிலிருந்து முழுமையாக வெளியேறிச் செல்வது, தேனீக்குடி கைவிட்டுச் செல்லல் ஆகும்.
காரணங்கள்: பருவக்காற்று மற்றும் மழை காரணமாக, தேனீக்களுக்குத் தேன், மகரந்தம் போன்ற உணவுகள் போதுமான அளவில் கிடைக்காமல் போதல். தேனீக்களின் எண்ணிக்கை குறையும் காலத்தில், அவை மெழுகு அந்துப் பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளதால்.
குளவிகள், பறவைகள் மற்றும் எறும்புகளின் ஆக்கிரமிப்புகள். வைரஸ் நோய்த் தாக்குதல். வறட்சியான காலநிலையின் போது ஏற்படும் அதிக வெப்பம். கடுமையான காற்று, புகை மற்றும் தேனீப்பெட்டி கீழே விழுதல். பயிர்ப் பாதுகாப்பில் அதிகளவில் இரசாயன மருந்துகளைப் பயன்படுத்துதல்.
தேனீக்குடிகள் வெளியேறுவதற்கான அறிகுறிகள்
தேனீக்கள் சுறுசுறுப்பாக இயங்கும் காலை வேளையில் பெட்டியில் இருந்து வெளியே செல்லும் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுதல். அதைப் போல, மகரந்தம் சேகரித்து வரும் தேனீக்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுதல்.
தேனீப் பெட்டியில் உள்ள வதைகளில் மகரந்தம் மற்றும் தேன் இல்லாமல் இருத்தல். அடிப்பலகை மற்றும் வதைகளில் மெழுகு அந்துப்பூச்சிப் புழுக்களின் தாக்கம் இருத்தல். பெட்டியில் உள்ள வதைகளில் குடம்பிகளின் எண்ணிக்கையும், தேனீக்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைதல். எறும்புகள் மற்றும் முசுறுகளுக்கு எதிராகத் தேனீக்கள் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்காமல் இருத்தல்.
பெட்டியை விட்டுச் செல்லும் நிலையில் உள்ள தேனீக் குடியின் தேனீக்கள், ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையில் வெளியில் வந்து, அருகிலுள்ள இடத்தில் குவியலாகத் தொங்கிக் கொண்டிருத்தல். மேலும், தேனீப் பெட்டியின் வாயிற் தகட்டுக்கு அருகிலும் குவிந்திருத்தல்.
தக்க வைக்கும் வழிகள்
தேனீப் பெட்டிகள் அமைந்துள்ள இடங்களில் மரங்கள், பூக்கள் இருக்க வேண்டும். சுற்றுப்புறத்தில் போதியளவில் பூக்கள் இல்லாத போது, சர்க்கரைக் கரைசலை உணவாக வழங்க வேண்டும்.
மெழுகு அந்துப்பூச்சித் தாக்குதலின் தொடக்கத்தில் ஒரு சில அடை அறைகள் வெள்ளைப் பட்டு நூலால் மூடப்பட்டு இருக்கும். இப்படி இருந்தால், தாக்கப்பட்ட அறைகளை அகற்றிப் புதைத்து விட வேண்டும். புழுக்கள் தாக்கிய அறைத் துண்டுகளைத் தேனீப்பெட்டிக்கு அருகில் இடக்கூடாது. தேனீப் பெட்டியின் அடிப்பலகையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
தேன் கூட்டில் எறும்புகள், முசுறுகள் நுழைவதைத் தடுக்க, தேனீப் பெட்டியின் ஆதாரத் தூணைச் சுற்றி, நீர் தேங்கும் தொட்டியை அமைக்கலாம். மேலும், ஆதாரத் தூணில் கிரீசைப் பூசி விடலாம். சர்க்கரைப் பாகைக் கொடுக்கும் போது, பாகு கீழே சிந்துவதைத் தவிர்த்தால், எறும்புகளின் நடமாட்டம் குறையும்.
குளவிகளின் தாக்கத்தைக் குறைக்க, தேனீப்பெட்டிக்கு அருகிலுள்ள குளவிக் கூடுகளை அழிப்பதுடன், தேனீப் பெட்டியைச் சுற்றிக் கம்பிவலையை இடலாம். மழை அதிகமாகப் பெய்யும் காலங்களில் தேனீக்கள் உணவைச் சேகரிக்க வெளியில் செல்ல இயலாது. அப்போது, தேனீக்களுக்குச் சர்க்கரைக் கரைசலை வழங்க வேண்டும்.
உலகம் முழுவதும் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான முக்கியக் காரணமாக பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்கள் உள்ளன. எப்போது நாம் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புகிறோமோ, அப்போது தான் நம் நாவிலும் இயற்கையான இனிப்பு நடனமாடும்.
பெ.ஜெயபால்,
தொழில் நுட்ப வல்லுநர், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.
நா.ஆனந்த பைரவி, பூச்சியல் துறை, விவசாயக் கல்லூரி, மதுரை.
சந்தேகமா? கேளுங்கள்!