கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022
செல்லப் பிராணிகளின் நட்பு, ஏமாற்றம் இல்லாத உன்னதமான நட்பாகும். செல்லப் பிராணியான நாய்களை வளர்ப்பது, நமக்கு மன நிம்மதியையும், அவற்றின் செயல்கள் மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடிய வகையில் அமையும். எனவே, நாய் வளர்ப்பு முறைகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அதற்கு முன், நாம் வளர்க்கப் போகும் செல்லப் பிராணி நம் வீட்டுக்கு உகந்ததா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏனெனில், அதனால் நம் வீட்டில் உள்ளோர்க்கு ஒவ்வாமை எதுவும் வராமல் இருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணியைத் தகுந்த உடல் நலத்துடன் பாதுகாத்தால் நமக்கு எந்தச் சிக்கலும் நேராது.
குட்டிகளைத் தேர்ந்தெடுத்தல்
நன்கு சுவாசிக்கும் திறன், மினுமினுப்பான தோல், நன்கு கேட்கும் திறன், மற்றும் பார்வைத் திறனுடன், சுறுசுறுப்பாக விளையாடும் குட்டிகளைப் பார்த்து வாங்க வேண்டும். அவற்றுக்குப் புதிதாகச் சமைத்த சத்தான உணவையும் குடிநீரையும் அளிக்க வேண்டும். செல்லப் பிராணிகளின் உணவு, சரிவிகிதச் சத்துகள் நிறைந்ததாக, எளிதில் செரிப்பதாக இருக்க வேண்டும்.
குடற்புழு நீக்கம்
நோயிலிருந்து தடுக்கும் முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளில் குடற்புழு நீக்கமும் ஒன்றாகும். இது நாய்க் குட்டிகளின் உடல் நலத்தில் முக்கியப் பங்களிக்கும். குட்டியின் 14 ஆம் நாளில் முதல் முறையாகக் குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும். அதன் பிறகு, 15 நாட்களுக்கு ஒருமுறை என, மூன்று மாதங்கள் வரையும், அடுத்து, மூன்று மாதத்துக்கு ஒருமுறை எனத் தொடர்ந்தும் குடற்புழு நீக்க மருந்தைக் கொடுத்து வர வேண்டும்.
தடுப்பூசி
ரேபிஸ், பார்வோ வைரஸ் நோய், டிஸ்டெம்பர் என்னும் உயிர்க்கொல்லி நோய் ஆகியவற்றில் இருந்து நாய்களைப் பாதுகாக்க, காலம் தாழ்த்தாமல் சரியான நேரத்தில் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும். 6-8 வாரத்தில், முதல் தடுப்பூசியான டிஸ்டெம்பர், ஹெப்பாடிட்டீஸ், பார்வோ, பாரா இன்புளுன்சா, லெப்டோ என்னும் ஆறு வகையான வைரஸ் நோய்த் தடுப்பு மருந்தை ஒரே தடுப்பூசியாகச் செலுத்த வேண்டும். பிறகு 9-12 வாரத்தில், அதே தடுப்பூசியை ஊக்க மருந்தாக அளிக்க வேண்டும். அடுத்து, மூன்றாம் மாதத்தில், ரேபிஸ் தடுப்பூசியைப் போடுவதுடன், அதன் ஊக்க மருந்தை ஆண்டுக்கு ஒருமுறை அளித்து வர வேண்டும்.
கருத்தடை
கருத்தடை செய்வது என்பது, கருப்பைப் புற்றுநோய், கருமுட்டைப் புற்றுநோய் ஆகியவற்றில் இருந்து நாய்களைப் பாதுகாக்கும். மேலும், ஆண் குட்டிகளில் முரட்டுத் தன்மையைக் குறைக்கவும், விரைச்சிரைப் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும்.
நோய் அறிகுறிகள்
உணவை எடுத்துக் கொள்வதில் சிரமம் இருக்கும். நீரை அதிகமாகப் பருகும். திடீரென உடல் எடை குறையும் அல்லது கூடும். விசித்திரமாக நடந்து கொள்ளும். உடல் சோர்வுடன் இருக்கும். இத்தகைய அறிகுறிகள் நாய்களில் தெரிந்தால் உடனே கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது. கால்நடை மருத்துவரைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அணுகி, அதாவது, ஆண்டுக்கு இரண்டு முறையாவது மருத்துவரிடம் நாய்களை அழைத்துச் சென்று சோதனை செய்து கொள்வது நல்லது. நோய் அறிகுறிகள் தென்படின் உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
குறும்புத்தனம், அன்பு, பாசம் போன்ற தமது பண்புகளால் நமக்கு அமைதியை, மகிழ்ச்சியைக் கொடுக்கும் நாய்கள், நம்முடன் நடக்க, விளையாட, பயணித்து மகிழ ஆசைப்படும் என்பதை நாம் உணர வேண்டும். எனவே வளர்ப்பு நாய்களை, நல்ல ஆகாரத்துடன் அரவணைத்துப் பாதுகாத்தால், அவற்றின் நன்றிக் கடனுக்கு நாம் தகுதியுள்ளவர்கள் ஆவோம்.
மரு.வெ.சரண்யா,
மரு.செ.ஜோதிகா, கால்நடை மருத்துவக் கல்லூரி,
ஒரத்தநாடு, தஞ்சை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!