பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சி!

மாவுப்பூச்சி Photo 3

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019

ருத்தியில் மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக உள்ளது. முன்பு, குறைந்தளவில் சேதத்தை விளைவித்து வந்த இப்பூச்சி, தற்போது பி.டி. பருத்தியின் வரவால் அதிகளவில் சேதத்தை விளைவிக்கும் முக்கியப் பூச்சியாக மாறி விட்டது. இதனால், இதைக் கட்டுப்படுத்தும் பணச்செலவையும், மக்சூல் இழப்பையும் விவசாயிகள் அடைந்து வருகின்றனர்.

மாவுப் பூச்சி

பீனோகாக்கஸ், மாக்கோ நெல்லி காக்கஸ் என்னும் மாவுப்பூச்சிகள் இலையின் அடியில் கூட்டமாக இருக்கும். இளம் புழுக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். முதிர்ந்த பூச்சிகள் இறக்கைகளற்ற, வெண் மெழுகைப் போன்ற தோலுடன் மென்மையாக இருக்கும். இந்த மெழுகுத் தன்மை இப்பூச்சியை மருந்துகளில் இருந்து பாதுகாக்கிறது. மாவுப்பூச்சி பெருமளவில் பெருகி மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

இப்பூச்சிகள் சுரக்கும் தேனைப் போன்ற திரவத்தால் கரும்பூசணம் படர்வதால், இலைகளில் ஒளிச்சேர்க்கை குறைந்து செடிகள் வாடிவிடும். இவை காற்று, நீர், மழை, பறவை மற்றும் விலங்குகள் மூலம் பரவும். மாவுப்பூச்சிகளால் தாக்கப்பட்ட இலைகள் சுருங்கியிருக்கும்; செடிகள் வளர்ச்சியின்றி இருக்கும்; இலைகள் உதிர்ந்து போவதால், செடிகள் காய்ந்ததைப் போலத் தெரியும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

மாவுப்பூச்சிக் குஞ்சுகள், அடுத்தடுத்த செடிகளை நோக்கி விரைவாகப் பரவும். எனவே பாதிக்கப்பட்ட செடிகளை விரைவாகக் கண்டறிந்து பிடுங்கி எரிக்க வேண்டும். இதன் மாற்றுப் பயிர்களான, செம்பருத்தி, பப்பாளி, தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் களைகளான பார்த்தீனியம், துத்தியிலும் இதன் தாக்குதலைக் கண்காணிக்க வேண்டும். அதைப்போல, சிறிய செடிகளுக்கு மாவுப்பூச்சியின் தாக்குதலை எதிர்க்கும் திறன் இருப்பதால், அந்தச் செடிகளில் மருந்தைத் தெளிக்கக் கூடாது.

மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகளும் பொறி வண்டுகளும் உள்ளன. மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த தெளிக்கப்படும் மருந்தால், இந்த நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து போவதால், மாவுப்பூச்சிகள் திடீரெனப் பெருகும். எனவே, மருந்துத் தெளிப்பை, சப்பை பிடிக்கும் பருவத்தில் தவிர்க்க வேண்டும். தேவை ஏற்படின், வேப்ப எண்ணெய் சார்ந்த மருந்துகள் அல்லது பியூப்ரோபைசின் என்னும் மருந்தை, பருத்தியின் வளர்ச்சிப் பருவத்தில் தெளிக்கலாம்.

ஆனால், சப்பை கட்டும் பருவத்தில் மாவுப்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதால், சரியான நேரத்தில் பூச்சியின் நடமாட்டத்தை அறிந்து கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், கடும் மகசூல் இழப்பு ஏற்படும். பூச்சி மருந்தை நிலம் முழுவதும் தெளித்தால் நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து விடும். அதனால், ஒரு கொம்புக்கு மேல் பூச்சிகள் தாக்கிய செடிகளைக் கண்டறிந்து, அவற்றை நம் உடலில் படாமல் பிடுங்கி, நெகிழிப் பையில் வைத்து வெளியே கொண்டு சென்று எரிக்க வேண்டும்.

ஆனால், 100க்கு 10க்கு மேற்பட்ட செடிகளில் மாவுப்பூச்சிகள் தாக்கியிருந்தால், தையோடிகார்ப் 75 WP @ 750 கிராம் அல்லது புரோபோனோபாஸ் 50  EC @ 1.25 கிலோ அல்லது அஸிப்பேட் 75 SP @ 2 கிலோ அல்லது டைமீத்தோயேட் 1 லிட்டர் ஆகிய மருந்துகளில் ஒன்றை, ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.


மாவுப்பூச்சி ANANDHI 1 e1629362269234

முனைவர் பி.ஆனந்தி,

முனைவர் நா.புனிதவதி, முனைவர் சா.இளமதி, முனைவர் வெ.அம்பேத்கார்,

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை-612101, தஞ்சை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading