மக்காச்சோளச் சாகுபடியில் பண்ணைக் கருவிகள்!

மக்காச்சோளச் சாகுபடி DSCN2527

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019

மானாவாரி நிலத்தில் ஈரம் காய்வதற்குள் விதைத்தல் போன்ற வேலைகளைச் செய்து முடிக்க, கருவிகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்துவது அவசியமாக உள்ளது. இப்படிச் செய்தால் தான் விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியும். இப்போது உழவு முதல் அறுவடை வரையான அத்தனை வேலைகளையும் செய்து முடிக்கத் தேவையான இயந்திரங்களும் கருவிகளும் நடைமுறைக்கு வந்து விட்டன. இவ்வகையில், மக்காச்சோளச் சாகுபடிக்குப் பயன்படும் கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பற்றி இங்கே காணலாம்.

சட்டிக் கலப்பை

வட்ட வடிவத்தில் குழிவான இரும்புத் தகட்டினால் ஆன இக்கலப்பையில் கொழு இல்லை. இதற்கு மாற்றாக இரும்புச் சட்டிகள் 60-90 செ.மீ. விட்டத்தில் இருக்கும். இக்கலப்பை டிராக்டரின் இழுவைத் திறனுக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று சட்டிகளைக் கொண்டிருக்கும். உழும்போது ஒவ்வொரு சட்டியும் இழுவைக் கோட்டில் முன்னோக்கிச் செல்வதுடன், சட்டியின் மையத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அச்சின் மேல் சுழலுகிறது. இப்படிச்  சுழலும்போது சட்டியின் விளிம்பு மண்ணை வெட்டிச் சட்டியின் மையத்தை நோக்கித் தள்ளுகிறது. சட்டி குழிவாக உள்ளதால் மையத்துக்குக் கொண்டு வரப்பட்ட மண், சட்டியின் மேல் நோக்கிப் புரட்டப்பட்டு முன் வரிசைச் சாலின் மேல் தள்ளப்படுகிறது.

உழும்போது சட்டியில் ஒட்டும் மண்ணை அகற்றும் வகையில் மண் சுரண்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. உழும் ஆழத்தை ஒரே சீராகக் கட்டுப்படுத்துவதற்கு வளைப்பலகைக் கலப்பையில் உள்ளது போல் இக்கலப்பையிலும் ஆழக் கட்டுப்படுத்தி உருளைகள் உள்ளன. உழும்போது மண்ணால் உண்டாகும் அழுத்தத்தைச் சரிக்கட்ட, சால் உருளை கலப்பைக்குப் பின்புறம் உள்ளது. 

உளிக் கலப்பை

மகசூலைக் கூட்ட உளிக் கலப்பையால் ஆழமாக உழ வேண்டும். இதனால், கடினமான அடிமண் தகர்ந்து, நீரை கூடுதலாக உறிஞ்சிச் சேமித்து வைக்கும். இந்நிலையால், நிலத்தின் அடிப்பகுதியில் பயிர்களின் வேர்கள் படர்ந்து வளரும். ஆகவே, பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மானாவாரியில் உளிக்கலப்பையால் கோடையுழவு செய்தால், நிலத்தின் நீர் உறிஞ்சும் தன்மை கூடுவதுடன், மண்ணரிப்பும் கட்டுப்படும்.  நன்கு காய்ந்த நிலம் உளிக்கலப்பையால் உழுவதற்கு ஏற்றதாக இருந்தாலும், உழுவதற்கு அதிக இழுவிசை தேவைப்படும்.

குறைந்த இழுவிசை மற்றும் அதிகச் செயல் திறனுள்ள உளிக்கலப்பையை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. இந்தக் கலப்பையின் கொழு 20 டிகிரி கோணமும் 25 மி.மீ. அகலமும் 150 மி.மீ. நீளமும் கொண்டது. இக்கலப்பை 3 மி.மீ. தகட்டில் நீள்சதுர இரும்புக் குழாயினால் ஆன சட்டத்தைக் கொண்டுள்ளது. 

சிறப்புகள்

இந்தக் கலப்பையால் 40 செ.மீ. ஆழம் வரையில் உழலாம். இதை 35-45 குதிரைத் திறனுள்ள டிராக்டரால் இயக்கலாம். வரிசைக்கு வரிசை ஒரு மீட்டர் இடைவெளியில் உழுதால், ஒரு மணி நேரத்தில் 0.42 எக்டர் நிலத்தை உழுது விடலாம்.

விதைப்புக் கருவி

விதைப்பின் போது, சரியான ஆழத்தில், சரியான இடைவெளியில் விதைகளைப் போடுதல், அந்த விதைகளை நன்றாக மூடுதல், சால்மேல் மூடப்பட்ட மண்ணை அமுக்கி விட்டு ஈரம் காயாமல் இருக்கச் செய்தல் அவசியம். இவற்றை எளிதாகச் செய்வதற்கு, மாடுகளால் இழுக்கக் கூடிய, பவர் டில்லரால் மற்றும் டிராக்டரால் இயங்கக் கூடிய விதைப்புக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பவர் டில்லரில் இயங்கும் விதைப்புக் கருவி  

இக்கருவியில் விதைப்பெட்டி, விதைகளை உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்துச் சாலில் போடும் குவளை போன்ற அமைப்பு, சிறிய சால்களை உருவாக்கும் கொத்துக் கலப்பை, இதை மாட்டத் தேவையான இரும்புச் சட்டம், அமர்வதற்கான இருக்கை ஆகிய வசதிகள் உள்ளன. இந்த அமைப்புகள் அனைத்தும் இரண்டு சக்கரங்களுடன் கூடிய சட்டத்தில் பொருத்தப் பட்டுள்ளன. இக்கருவியை பவர் டில்லருடன் இணைத்த பின் மிகக் குறைந்த ஆரத்தில் எளிதாகத் திருப்பலாம். அதனால், நிலத்தின் ஓரங்களில் கருவியைத் திருப்பக் குறைவான இடமே தேவைப்படும்.

கையினால் இயங்கும் லீவர் அமைப்பின் மூலம் கொத்துக் கலப்பைகளைக் கொண்ட இரும்புச் சட்டத்தை மேலேயும் கீழேயும் எளிதாக இயக்கலாம்.  கலப்பைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியையும், விதைக்கும் ஆழத்தையும் தேவையான அளவில் எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இரும்புச் சட்டத்தை லீவர் கம்பியினால் இயக்கி மேலே நகர்த்தினால், விதைகளை எடுத்துப் போடும் அமைப்பிற்குச் செல்லும் இயக்கம் நிறுத்தப்படும். ஒரே நேரத்தில் நான்கு வரிசைகளில் சீராக விதைக்கலாம். வரிசைகளின் இடைவெளியை 25-60 செ.மீ. வரை மாற்றிக் கொள்ளலாம். அனைத்து வகை பவர் டில்லர்களுடனும் இணைக்கலாம். ஒரு மணி நேரத்தில் 0.2 எக்டர் நிலத்தில் விதைக்கலாம். அமர்ந்தவாறே கருவியை எளிதாக இயக்கி விதைக்கலாம்.

மக்காச்சோளச் சாகுபடி DSC 8162

விதைப்புக் கருவி

தமிழ்நாட்டில் மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. நல்ல ஈரம் இருக்கும் போதே விதைத்துவிட வேண்டும் என்று எல்லா விவசாயிகளும் நினைப்பதால், போதிய ஏர்களும் ஆட்களும் கிடைப்பதில்லை. இதனால் சரியான ஈரத்தில் விதைக்க முடிவதில்லை. தமிழ்நாட்டில் தற்போது டிராக்டர்கள் நிறைய உள்ளன. அதனால், அனைத்து விவசாயிகளும் கொத்துக் கலப்பையைப் பயன்படுத்தி வருகிறார்கள். தனியாக டிராக்டர் மூலம் இயங்கும் விதைப்புக் கருவியைத் தயாரிப்பதற்கான செலவு அதிகமாக இருப்பதுடன், இதன் பயன்பாடும் குறைவாகவே உள்ளது. எனவே, கொத்துக் கலப்பையின் மூலம் உழும்போதே விதைப்பதற்கு ஏற்ற வகையிலான கருவியொன்று  உருவாக்கப் பட்டுள்ளது.

இந்தக் கருவியில், விதைப்பெட்டி, விதைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சாலில் போடுவதற்கான குவளை, இவற்றை இயக்கும் சக்கர அமைப்பு, சால்களில் விழுந்த விதைகளை மணணால் மூடும் அமைப்பு ஆகியன அமைந்துள்ளன. இக்கருவியை 9 அல்லது 11 வரிசைக் கொத்துக் கலப்பையின் மேல் எளிதாகப் பொருத்திக் கொள்ளலாம். வரிசைகளின் இடைவெளி, விதை இடைவெளியை வேண்டியபடி மாற்றிக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் அரை எக்டரில் விதைக்கலாம். இக்கருவியால் 87.5% நேரம் மீதமாகிறது.

தானியத்தைப் பிரிக்கும் கருவி

மக்காச்சோளக் கதிரிலிருந்து தோகையை நீக்கித் தானியத்தைப் பிரித்தெடுக்க இக்கருவி ஏற்றது. இக்கருவியில் உள்வாய், சுழலும் உருளை, சல்லடை, திருகு, 7.5 குதிரைத் திறனுள்ள காற்றாடி மோட்டார், வெளிவாய் மற்றும் சட்டம் போன்ற பாகங்கள் உள்ளன. கதிரிலுள்ள தோகை, சல்லடைக்கும் உருளைக்கும் இடையில் நீக்கப்பட்டு தானியங்கள் உதிர்க்கப்படும். இவை திருகு மூலம் வெளிவாய்க்கு வரும். சக்கைகள் இன்னொரு வெளிவாய்க்கு அனுப்பப்படும். இக்கருவியின் திறமை 98% ஆகும். ஒருநாளில் 100 குவிண்டால் தானியங்களை உதிர்க்கலாம்.


முனைவர் அமுதசெல்வி,

வெ.தனுஷ்கோடி, நூர்ஜஹான், அ.கா.அனீப், ம.சுருளிராஜன், ச.ஈஸ்வரன்,

வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading