கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020
பெட்டா எனப்படும் போராளி மீன் ஆஸ்பரோனெமிடே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பெட்டா ஸ்பெலெண்டென்ஸ் ஆகும். இதனால் இம்மீன் பெட்டா எனப்படுகிறது. தொட்டிகளில் இம்மீன் வளர்க்கப்படுகிறது. ஆண் மீனுக்குச் சண்டைக் குணம் அதிகமிருக்கும்.
ஒரே தொட்டியில் இரண்டு ஆண் மீன்களை வளர்த்தால் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதில் ஏதாவது ஒன்று இறந்து போகும். எனவே, இம்மீன்களை ஒரே தொட்டியில் விட்டு வளர்க்கக் கூடாது. இனப்பெருக்கக் காலத்தைத் தவிர, பெண் மீனையும் கூட, ஆண் மீனுடன் சேர்த்து வளர்க்கக் கூடாது.
மீன் ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு நிறம் மற்றும் வடிவங்களில் இம்மீன்கள் உள்ளன. இது வண்ணமய நன்னீர் மீன் வகைகளில் ஒன்றாக உள்ளது. பெட்டா மீனினம், உடலின் நிறம் மற்றும் வால் துடுப்புகளின் வடிவத்தைப் பொறுத்துப் பலவகைப்படுகிறது.
வண்ண பெட்டா வகைகள்
இருநிற பெட்டா மீன்: இவ்வகை பெட்டா மீன், வெளிர் அல்லது அடர் நிறக் கலவையில் உள்ளது. உண்மையான இருநிறப் பெட்டா மீனில் தெளிவாக இரு நிறங்கள் வேறுபட்டு இருக்கும். கம்போடியன் பெட்டா இருநிற வகையில் அடங்கும். அவை, பச்சை, நீலம் அல்லது சிவப்பாக இருக்கும். சாக்லேட் பெட்டாவும் இருநிற வகையில் அடங்கும். இதன் துடுப்புகள் தங்கம் அல்லது மஞ்சளாகவும், உடல் பழுப்பாகவும் இருக்கும்.
பட்டாம்பூச்சி நிற பெட்டா: இதன் உடல் ஒரே நிறத்திலும், துடுப்பு இரண்டு நிறங்களிலும் இருக்கும். மேலும் இது எந்த நிறத்திலும் இருக்கும்.
கிரிஸ்சில் பெட்டா: இம்மீன் பொதுவாக வெளிர் நிறத்திலும் ஆங்காங்கே அடர் நிறத்திலும் இருக்கும்.
மார்பில் வண்ணம்
முதலில் மார்பில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பெட்டா மீன் வந்தது. ஆனால் இன்று பலநிறக் கலவையில் கிடைக்கிறது. மூன்று நிறங்கள் சேர்ந்த புதிய பளிங்குக் கலவை, கொய்நிறக் கலவை எனப்படுகிறது. பெட்டா உற்பத்தியாளர்கள், கொய்நிற பெட்டாவை, வெள்ளை உடலில் சிவப்பு மற்றும் கறுப்பு நிறம் வருமாறு உருவாக்கி வருகின்றனர்.
பல வண்ணம்
இந்தப் பெட்டா மீன் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். இதன் உடலில் குறைந்தது மூன்று நிறங்களும், துடுப்பில் சீரற்ற நிறக்கலவையும் இருக்கும்.
வண்ண பைபால்ட்
இது தனித்தன்மை மிக்கது. இதன் முகம் சதை நிறத்திலும், உடல் பல நிறங்களிலும் இருக்கும். தலையானது நிறமற்று வழுக்கையாக இருப்பதால் இது பால்ட் எனப்படுகிறது.
அன்னாசி நிற பெட்டா
இதன் உடல் முழுவதும் ஆரஞ்சு நிறத்திலும், துடுப்பின் ஓரங்கள் கறுப்பு நிறத்திலும் இருக்கும்.
ஒரே நிற பெட்டா
இந்த பெட்டா வாய் முதல் வால் வரை நீலம், சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஏதாவது ஒரு நிறத்தில் இருக்கும்.
வெய்ல் வால்
இது பொதுவான வால் வகை பெட்டா மீனாகும். இதன் வால் நீண்டு, கீழ்நோக்கி ஊடுருவிச் செல்லும்.
கிரீட வால்
இதன் வால் நரம்புகள் ஒரு வலைப்பின்னல் போல் இருக்கும். இந்தப் பின்னல் பாதி வாலுக்கு மேல் பிரிந்து இருக்கும். இதனால், வால் ஒரு கிரீடம் போல் தெரிவதால் இம்மீன் கிரீட வால் மீன் எனப்படுகிறது.
சீப்பு வால்
இந்த மீனின் வாலிலுள்ள வலைப்பின்னல் வாலின் முக்கால் பகுதி வரை திடமாகவும், அதற்கு மேல் பிரிந்தும் இருக்கும். இதனால் கதிர்களைப் போலவும் நீளமான கிரீடம் போன்றும் இருக்கும்.
இரட்டை வால்
இம்மீனின் வாலின் அடிப்பகுதி இரண்டாகப் பிரிந்து வளர்ந்திருக்கும். இப்படி இரண்டு வேறுபட்ட வால்கள் இருப்பதால், இது இரட்டை வால் மீன் எனப்படுகிறது.
ஸ்பேடு வால்
இம்மீனின் வால் துடுப்பு, மண்வெட்டியைப் போலத் தெளிவாக அமைந்துள்ளது. வால் சீராகச் சென்று ஒரு புள்ளியில் கூர்மையாக முடிந்திருக்கும்.
அரை நிலவு வால்
இம்மீனின் வால் அரை நிலவைப் போலப் பெரிதாக 180 டிகிரியில் இருப்பதால், இது அரை நிலவு வால் மீன் எனப்படுகிறது.
ஓவர் அரை நிலவு
இம்மீனின் வால் விசிறியைப் போலப் பெரிதாக இருக்கும். 180 டிகிரிக்கு மேல் வளர்ந்து அரை வட்டத்தை விடப் பெரிதாக இருக்கும்.
டெல்டா
இந்த மீனின் வால் குறுகலாகத் தொடங்கி, முக்கோண வடிவத்தில் முடியும்.
சூப்பர் டெல்டா
டெல்டா வாலை மிகவும் ஒத்திருக்கும். சூப்பர் டெல்டாவின் வால் 120 முதல் 160 டிகிரி வரை விரிந்திருக்கும். இது அரை நிலவு பெட்டாவின் வாலைப் போல 180 டிகிரி வரை விரிவதில்லை.
அரைச் சூரியன் பெட்டா
இது, கிரீட வால் மற்றும் அரைநிலவு வாலின் கலவையாகும். இதன் கதிர்கள் மற்றும் வலைப்பின்னல் இடையே 180 டிகிரியில் சிறிய கிரீடத்தைப் போல வால் முடிந்திருக்கும்.
ரோஜா வால் பெட்டா
இதில் அரைநிலவைப் போன்ற அமைப்பில் சற்று அழகான மாற்றங்கள் இருக்கும். வாலின் இடையில் ஆங்காங்கே நிறம் மாறி ரோஜாவைப் போல அழகாக இருக்கும்.
சிறகு வால் பெட்டா
இது, ரோஜா வாலைப் போல இருந்தாலும், இன்னும் கூடுதலான கிழிந்த கதிர்கள் அழகாக இருக்கும்.
பிளகாட் பெட்டா
இது குறுகிய வாலைக் கொண்ட மீனாகும். ஆகவே, ஆண் மீன் கிட்டத்தட்ட பெண் மீனைப் போலவே இருக்கும்.
டம்போ காது
இந்த பெட்டா மீனின் செவிள் துடுப்புகள் யானைக் காதை ஒத்திருக்கும்.
சா.ஆனந்த்,
அ.சுரேஷ், பொ.கார்த்திக் ராஜா, ச.இராஜேஸ்வரி,
வளங்குன்றா மீன் வளர்ப்பு நிலையம், பவானி சாகர், ஈரோடு மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!