கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021
சத்துகள் மிகுந்த உணவுப் பொருள் மீன். இதை நம் முன்னோர்கள் நீர் நிலைகளுக்குச் சென்று பிடித்து வந்து உண்டனர். ஆனால், இப்போது மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது மீன்.
மீன்வள அறிவியல் வளர்ச்சியும் மீன் வளர்ப்புப் பெருக்கமும் தான் இதற்குக் காரணம். மீன்களில் நன்னீர் மீன், கடல்நீர் மீன் என இருவகை மீன்கள் உள்ளன.
மீன் எளிதில் செரிக்கும் என்பதால் இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக உள்ளது. மீனிலுள்ள தாதுகளே இதற்கு முக்கியக் காரணம். நன்னீர் மீன் வகைகளில், நல்ல ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உயிர்ச் சத்துகள் ஏ, டி ஆகியன நிறைந்துள்ளன.
கடல் மீன்களில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், மக்னீசியம் ஆகிய சத்துகள் உள்ளன.
மீனை நாம் பல முறைகளில் சமைத்து உண்கிறோம். குழம்பாக வேக வைத்து, எண்ணெய்யில் பொரித்து, தோசைக்கல்லில் வேக வைத்து, பதப்படுத்தி வைத்தும் உண்கிறோம்.
இவற்றில், எண்ணெய்யில் பொரித்து உண்பது எல்லோருக்கும் பிடித்ததாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிலுள்ள சுவை தான். ஆனால், இப்படிச் செய்வதால், மீனிலுள்ள சத்துகள் நமக்குக் கிடைப்பதில்லை என்பது தான் உண்மை.
எண்ணெய்யில் பொரிப்பதால், மீனிலுள்ள நல்ல ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுகள் அழிந்து விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே, மீனை மிதமான வெப்பத்தில், அதாவது, குழம்பாக அல்லது தோசைக்கல்லில் வேக வைத்து உண்ணும் போது, அதிலுள்ள சத்துகள் அனைத்தும் நமக்குக் கிடைக்கின்றன.
ஆகவே, சுவைக்கு அடிமை ஆகாமல், நமக்கு நல்ல சத்துள்ள உணவாகப் பயன்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மீனை மிதமான சூட்டில் வேக வைத்து உண்போம்.
த.வேலுமணி,
முதுகலை மாணவர், மத்திய மீன்வளக் கல்வி நிறுவனம், மும்பை.
சந்தேகமா? கேளுங்கள்!