இந்தியாவில் சத்துக் குறையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்திய சந்தை ஆராய்ச்சிப் பணியகத்தின் 2021 கணக்கின்படி 73 சத இந்திய மக்கள் புரதக் குறைபாடு மிக்கவர்களாக உள்ளனர். உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் அரிசி மற்றும் கோதுமையைத் தான் உணவாகக் கொள்கின்றனர். இவற்றில் மாவுச்சத்து அதிகமாகவும், புரதம் உள்ளிட்ட மற்ற சத்துகள் குறைவாகவும் உள்ளன.
இந்த நிலையை மாற்ற, மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். சத்தான உணவுகளை உண்ணும் சரிவிகித உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். இதற்குப் புரதம் நிறைந்த தானியங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தானிய வகைகளில் அதிகப் புரதம் மற்றும் பிற சத்துகள் நிறைந்தது குயினோ தானியமாகும். இதில் 22 சதம் புரதம் உள்ளது.
குயினோ என்பது தானியப் பயிராகும். ஆனால், புல் வகையைச் சேர்ந்தது அல்ல. இதன் வளர்ச்சிக்காலம் 70 முதல் 150 நாள் வரை இருக்கும். கி.மு. 5000-கி.மு. 3000 காலங்களில், தென் அமெரிக்காவில் இன்காஸ் என்னும் பழங்குடி மக்கள், இப்பயிரைப் பயிரிட்டு உணவாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அம்மக்கள் இதைத் தாய்த் தானியம் என அழைத்துள்ளனர்.
இப்போது குயினோ உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. பொலிவியா, பெரு ஆகிய நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் 440 எக்டர் பரப்பில் குயினோ பயிரிடப்பட்டு உள்ளது. இவ்வகையில், இராஜஸ்தான் மாநிலத்தில் இதன் சாகுபடி அதிகமாகும். பெருவும் பொலிவியாவும் அதிகளவில் குயினோவை ஏற்றுமதி செய்கின்றன. இதை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்கா. ஐ.நா.சபை, 2013 ஆம் ஆண்டை குயினோவுக்கான உலக ஆண்டாக அறிவித்தது.
குயினொ வேகமாக வளரும் பயிராகும். இப்பயிர் 0.2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரும். பயிரியின் மேல் பகுதியிலும் கிளைகளிலும் பூக்கள் (Panicle) வரும். இது, தன் மகரந்தச் சேர்க்கைப் பயிராகும். குயினோ 4 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலான காற்றின் வெப்பநிலையைத் தாங்கி வளரும். மணல் மற்றும் மணல் சார்ந்த மண், வடிகால் வசதியுள்ள மண்ணில் நன்கு வளரும். களிமண்ணில் இதன் முளைப்புத் திறன் குறைவாக இருக்கும். பாசனம் குறைந்த இடங்களிலும் குயினோ வளரும்.
குயினோவில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சிவப்பு, கறுப்பு மற்றும் வெள்ளைத் தானிய இரகங்கள் சாகுபடி செய்யப்படும் வகைகளில் அடங்கும். வெள்ளைத் தானியத்தில் இருப்பதை விடக் கறுப்பு, சிவப்பு இரகங்களில் வைட்டமின் ஈ இருமடங்கு கூடுதலாக உள்ளது. கறுப்பு இரகத்தில் கொழுப்புக் குறைவாகவும், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் கரோட்டினாய்டு அதிகமாகவும் உள்ளன. வெள்ளை இரகம் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது ஆகும்.
குயினோவில், புரதம் 22%, கார்போஹைட்ரேட் 49-68%, நார்ச்சத்து 1.1-16.32%, இரும்புச்சத்து 20 பிபிஎம், கால்சியம் 1,300 பிபிஎம் மற்றும் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் மற்றும் ஒன்பது அமினோ அமிலங்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளன.
இதன் புரதச்சத்து பாலின் புரதச்சத்துக்கு இணையானது. இதன் இலைகளில் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் உள்ளன. மேலும், ஒவ்வாமையை எதிர்க்கும் குசெடின், கேம்ப்ரால் என இரண்டு பிளவனாய்டுகள் உள்ளன. இதில் குளுடென் சத்து இல்லை.
பயன்கள்
குயினோவைத் தினசரி உணவில் எடுத்துக் கொண்டால், இதய நோய் மற்றும் நீரிழிவின் பாதிப்புக் குறையும். குயினோவில் 0.1-5 சதம் சபோனின் உள்ளது. இது, நோய் மற்றும் பூச்சிகளிடம் இருந்து விதைகளைப் பாதுகாக்கிறது. குயினோ இலைகளைக் கீரையாகப் பயன்படுத்தலாம். அரிசிக்குப் பதிலாகக் குயினோவின் முழுத் தானியத்தைச் சமைக்கலாம். மாடு, கோழி, பன்றிகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். குயினா தானியத்தில் இருந்து உப்புமா, லட்டு, கேசரி, அல்வா, பிஸ்கட், பொங்கல், பாயசம், பணியாரம் போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம்.
குயினோவைப் பயிரிட்டு அதன் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம், அதிகப் புரதமுள்ள தானியம் கிடைக்கும். இந்தத் தானியம் இந்திய மக்களிடம் உள்ள புரதப் பற்றாக்குறையைப் போக்க உதவும்.
முனைவர் ந.தவப்பிரகாஷ்,
முனைவர் க.யமுனாதேவி, முனைவர் செ.மோபினா, ம.அஜித்குமார்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.
சந்தேகமா? கேளுங்கள்!