நீர் அனல் நல்ல நிலம் வெளி காற்றென
நிறை இயற்கைகளே – பாரதிதாசன்
இந்த ஐந்து பூதங்களால் ஆக்கப்பட்டதே நமது உடம்பு. மண்ணில் விளைகிறது உணவு. உணவு நம்மை வளர்க்கிறது. மண்ணுடன் நாம் நேரடியாக உறவு கொள்ளவில்லை. உணவு வழியாகத் தொடர்பு இருக்கிறது. மற்ற நான்கு பூதங்களான காற்று, நீர், நெருப்பு, வெளி ஆகியவற்றுடன் நமக்கு நேரடியாகத் தொடர்பு உள்ளது. மற்ற நான்கும் நம் நலத்தைப் பாதிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, அளவுக்கு அதிகமாக உணவைக் கொள்ளும் போது வெளி குறைகிறது. அதுவே நோய்க்கு அடிப்படையாகிறது. மண்ணுக்கும் நமக்கும் உள்ள உறவு, செடி, கொடி, மரம் மூலமாகத் தான். இவையே நமக்கு உணவைக் கொடுக்கும் வள்ளல்கள்.
நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் எவை எவற்றை உண்ண வேண்டும், எந்த உணவு என்ன மருத்துவக் குணம் கொண்டது என்று கண்டறிந்து, மருந்தை எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்களின் மருந்தே உணவு.
உண்ணா நோன்பும், மருந்தே உணவாவதும், பறவையின் இரண்டு இறக்கைகளைப் போல. ஒரே நேரத்தில் இரண்டு இறக்கைகளும் அடிக்கும் போது, பறவை உயரே பறக்கிறது. உணவையே மருந்தாகவும், மிகும்போது உண்ணாது நிறுத்துவதும், உடல் நலனுக்கான அடிப்படைத் தேவைகள். பூதம் ஐந்தும் உடல் நலத்தைத் தீர்மானிக்கின்றன.
ஆறாவதாக, நமது மனமும் நோயைக் கொடுக்கவோ நோயை விலக்கவோ செய்கிறது. மனமே செயலுக்குத் தூண்டுகோலாக அமைகிறது. மனம் நோயைக் கொடுக்கவில்லை. மனம் வேண்டாத பழக்க வழக்கங்களை மேற்கொள்ளத் தூண்டுகிறது. கீழோருடன் நட்பு கொள்ளச் செய்கிறது. பொறாமை, அவா, கோபம், இன்னாச்சொல் போன்ற தீய குணங்களை மனம் ஏற்றுக் கொள்கிறது.
நாக்குக்கும், மூக்குக்கும் நம்மை அடிமையாக்குகிறது. இந்தத் தகாத வழிகளால், நாம் நோய்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். ஆதலால், நோயிலிருந்து நாம் காக்கப்பட வேண்டுமானாலும், மனம் ஒத்துழைக்க வேண்டும்.
இயற்கை மருத்துவத்தில் மனம் நம்பிக்கை வைக்க வேண்டும். நன்னெறியைக் கைக்கொள்ள வேண்டும். நோயாளிகள் நோய் வராது தவிர்க்க, உயர்ந்தோருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
நல்ல நூல்களைக் கற்க வேண்டும். உயர்ந்த பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும். சுயநலத்தை விட்டொழிக்க வேண்டும். உயர்ந்த இலட்சியத்தை மனம் பற்றவும், அதற்காக இடைவிடாது பாடுபடவும் வேண்டும்.
சென்ற இடத்தால் செலவிடாது தீதொறீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு- குறள்
நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…
சந்தேகமா? கேளுங்கள்!