செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.
நமது உணவில் உள்ள சத்துகளில் நார்ச்சத்தும் ஒன்று. இந்தச் சத்து நமது உடலின் செரிமான மண்டலத்தில் எளிதில் செரிப்பதில்லை. எனவே, இது உணவின் கசடாகவே கருதப்படுகிறது.
இது, கரையும் நார்ச்சத்து, கரையா நார்ச்சத்து என இரு வகைப்படும். பலவகை உணவுப் பொருள்களில் இருக்கும் இந்த இரண்டும், உடலின் செயல்கள் பலவற்றில் பங்களிக்கின்றன.
நார்ச்சத்தின் பயன்கள்
தினமும் நார்ச்சத்து உள்ள உணவைச் சாப்பிட்டால் நோயின்றி இருக்கலாம். நார்ச்சத்துக் குறைந்த இப்போதைய உணவுப் பழக்கம், கழிவுகளை இறுக வைத்து மலச்சிக்கலுக்குக் காரணமாகிறது.
நார்ச்சத்து, வயிற்றில் உள்ள உணவுக் கழிவுகளின் அளவைக் கூட்டுவதுடன், பெருங்குடலில் இந்தக் கழிவுகளின் நகர்வைத் தூண்டுகிறது. மேலும், நிறைய நீரை உறிஞ்சுதல் மூலம், பெருங்குடலின் உராய்வுத் தன்மையைக் கூட்டி, கழிவு நீக்கத்தை எளிதாக்குகிறது. குடலிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயலைக் கூட்டி, குடலின் நலத்தைக் காக்கிறது.
பெருங்குடல் புற்றுநோயைத் தடுத்தல்
பொதுவாக நார்ச்சத்து, உணவுக் கழிவுகளை நெடுநேரம் குடலில் தங்க விடுவதில்லை. இவ்வகையில், பெருங்குடலில் புற்றுநோயை உண்டாக்கும் மூலக்கூறுகளை வெளியேற்றி, பெருங்குடல் புற்று நோய் வராமல் காக்கிறது.
உடல் எடைக் கட்டுப்பாடு
நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை மெல்லுவதற்கு நீண்ட நேரம் தேவைப்படுவதால், கொஞ்சம் போலச் சாப்பிட்டாலும் நிறையச் சாப்பிட்ட உணர்வு தோன்றும். இவ்வகையில், உண்ணும் உணவு குறைவதால், உடல் கனமாவது தடுக்கப்படுகிறது.
இரத்தச் சர்க்கரையைக் குறைத்தல்
கரையும் நார்ச்சத்தை உணவில் எடுத்துக் கொள்ளும் போது, அது இரத்தத்தில் சர்க்கரையை உறிஞ்சும் வேகத்தைக் குறைக்கிறது. இவ்வகையில், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால், நீரிழிவு நோய் கட்டுப்படுகிறது.
இரத்தக் கொழுப்பைக் குறைத்தல்
கரையும் நார்ச்சத்து, பித்த நீருடன் இணைந்து கொழுப்பை அகற்றுகிறது. இதனால், இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைந்து, இதயம் சார்ந்த நோய்கள் வராமல் உடம்பு காக்கப்படுகிறது.
எனவே, பெரியவர்களுக்கு அன்றாடம் 25 கிராம் நார்ச்சத்தும், குழந்தைகளுக்கு, அவர்களுக்கு எத்தனை வயதோ அதைப் போல இன்னொரு மடங்கும் தேவை. எ.காட்டு: ஐந்து வயதுக் குழந்தைக்கு 5+5=10 கிராம் உணவு மூலம் கிடைக்க வேண்டும்.
நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருள்கள்
தானிய வகைகள்: சிவப்பரிசி, ஓட்ஸ், முழுத் தானிய ரொட்டி. காய்கறிகள்: நூற்கோல், பூசணி வகைகள், கீரை வகைகள். வேர்க்காய்கறிகள்- கிழங்குகள்: உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு.
பழ வகைகள்: கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, வாழைப்பழம். பருப்பு வகைகள்: பாதாம், முந்திரி, வேர்க்கடலை.
பயறு வகைகள்: தட்டைப்பயறு, சிவப்புப்பயறு.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
நார்ச்சத்தை, நார்ச்சத்து மாவு, நார்ச்சத்து மாத்திரை, நார்ச்சத்து மருந்து என எடுத்துக் கொள்வதை விட, உணவுகள் மூலம் எடுத்துக் கொள்வதே சிறந்தது. நார்ச்சத்து மிகுந்த ஒவ்வொரு உணவுப் பொருளும் வெவ்வேறு விதமான செயல்களைக் கொண்டுள்ளது.
எனவே, நார்ச்சத்து மிகுந்த வெவ்வேறு உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். பெரும்பாலும், காய்கறிகள் மற்றும் பழ வகைகளைத் தோலுடன் உண்ண வேண்டும். அதன் மூலம் அதிக நார்ச்சத்தைப் பெறலாம்.
பழங்களைச் சாறாகக் குடிப்பதை விடப் பழமாகச் சாப்பிடுவதே நல்லது. ஏனெனில், சாறாக மாற்றப்படும் போது நார்ச்சத்து சிதைந்து விடும்.
நார்ச்சத்து நிறைய நீரை உறிஞ்சுவதால், அதன் செயலைச் சீராக்க, குறைந்தது 5-8 தம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். நார்ச்சத்தை உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு முறையான உடற்பயிற்சியைச் செய்தால் நலமாக வாழலாம்.
ரா.ஜெயந்தி, கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை – 600 007, ம.பூபதிராஜா, கால்நடை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி – 627 358.
சந்தேகமா? கேளுங்கள்!