பிக்ஸா ஓரெல்லானா என்னும் வருக மஞ்சள், பல்லாண்டுப் புதர் வகை மரமாகும். இதன் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். மேலும், இந்த வருக மஞ்சளானது மெக்ஸிகோ, நியூ கிரானாடா, கயானா, பிரேசில், தென்கிழக்கு ஆசியா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பரவிக் காணப்படுகிறது.
இது, 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, இதன் விதைகளிலிருந்து பெறப்படும் சாயத்துக்காக, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் வணிக நோக்கில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது.
உலகளவில் வருக மஞ்சள் உற்பத்தியில் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களிலும், ஆசிய நாடுகள் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
வருக மஞ்சள் மரம் 6 முதல் 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மேலும், இதற்கு 20-40 செல்சியஸ் வெப்பம் மற்றும் ஆண்டுக்கு 1250-2000 மி.மீ. மழை, வளமான மற்றும் நீரைத் தேக்கி வைக்கக்கூடிய மண்ணும் தேவை. இதன் இலைகள் நீள்வட்ட வடிவில், 5 முதல் 25 செ.மீ. நீளம் மற்றும் 4 முதல் 16 செ.மீ. அகலத்தில் இருக்கும்.
இந்த இலைகளில் இருந்து பெறப்படும் சாறானது, நுண்ணுயிரித் தொற்றை எதிர்க்கவும், சில மருத்துவப் பயன்களுக்கும் உதவுகிறது. இதன் பூங்கொத்து வெள்ளை அல்லது நீலநிறத் தண்டில் 5 செ.மீ. நீளத்தில், கிளைகளின் நுனிகளில் காணப்படும்.
இதன் பழங்கள், கோள வடிவில், நீள்வட்ட விதைப் பெட்டகத்துடன் கொத்தாகவும், பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் சிறு முட்களுடனும் காணப்படும். இதன் முற்றிய விதைப் பெட்டகத்தில் இருக்கும் விதைகள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு கலந்த நிறத்தில் காணப்படும்.
ஒவ்வொரு விதைப் பெட்டகமும் 4-5 மி.மீ. நீளமுள்ள விதைகளைக் கொண்டிருக்கும். இந்த விதைகளில் இருந்து பெறப்படும் சாயமானது, அன்னாடோ எனப்படும்.
எனவே, இத்தாவரத்தைப் பெரும்பாலும் அன்னாடோ எனவும் அழைக்கிறார்கள். இந்த அன்னாடோ சாயத்தில் அதிகளவில் கரோட்டினாய்டும், 80 சதவீத பிக்ஸின், அதாவது, சிவப்பு நிறமி மற்றும் நார் பிக்ஸின், அதாவது, மஞ்சள் நிறமியும் அடங்கியிருக்கும்.
இதன் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய்யில், டோக்கோடிரையினால்ஸ், பீட்டா கரோட்டின், நிறைவுறா மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், பிளேவனாய்டு மற்றும் வைட்டமின் சி-யும் அதிகமாக இருக்கும்.
இந்த அன்னோடா நிறமியானது, காரநீர், தாவர எண்ணெய் அல்லது இயற்கைக் கரைப்பான்கள் மூலம் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. மேலும் இந்த நிறமி, உலகப் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.
இது ஓர் இயற்கைச் சாயமூட்டியாக, பெரும்பாலும் உணவு வகைகள், அழகுப் பொருள்கள் மற்றும் மருத்துவ மூலப்பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
மேலும், முக்கியச் சாயமூட்டியாக, ஐஸ்கிரீம், கறி, நெய், வெண்ணெய், பன்னீர் போன்ற பால் பொருள்கள் மற்றும் வாசனைத் திரவியங்களிலும் பயன்படுகிறது. இந்தியாவில் இது, சமஸ்கிருதத்தில் சிந்தூரி எனவும், ஹிந்தியில் சிந்தூரியா எனவும், கன்னடத்தில் ரங்மாலே எனவும், தமிழில் வருக மஞ்சள் எனவும் அழைக்கப்படுகிறது.
இது, இந்தியாவில் கர்நாடகாவிலுள்ள மைசூரு, கொரமண்டல் கடற்கரைப் பகுதியிலுள்ள கேரளம், மராட்டியம், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய பகுதிகளிலும் விளைகிறது. விதைகள், 8-10 நாட்களில் முளைக்கும். மேலும், நடவுக்கான நாற்றுகள் 20 செ.மீ. உயரம் இருக்க வேண்டும்.
நடவுக் குழிகள், 30 செ.மீ. ஆழத்திலும், செடிக்குச் செடி இடைவெளி 4.5×4.5 மீட்டரும் இருக்க வேண்டும். பருவமழை பொழிவதற்கு முன் நாற்றுகளை நட வேண்டியது அவசியமாகும்.
இப்படி நட்ட நாற்றுகள், முதல் அல்லது இரண்டாம் ஆண்டில் பூக்கத் தொடங்கும். அப்போது அந்தப் பூக்களைக் கிள்ளி விட்டுச் செடிகளின் வளர்ச்சியை நன்றாக ஊக்கப்படுத்த வேண்டும். அன்னாடோ செடிகள் மூன்றாம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை நல்ல பொருளாதார மேம்பாட்டைத் தரும்.
பூக்கள், ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து அக்டோபர் மாதத்தின் பாதி நாட்கள் வரை இருக்கும். பூத்த பூக்களில் 30 நாட்களுக்குப் பிறகு விதைப் பெட்டகம் உருவாகும்.
முதிர்ந்த விதைப் பெட்டகங்கள் 90 நாட்களில், அதாவது, ஜனவரியில் கிடைக்கும். இவற்றைச் சணற் பைகளில் சேகரித்து வெய்யிலில் உலர்த்தி விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். மூன்றாண்டு மரத்திலிருந்து அரை முதல் ஒரு கிலோ விதைகள் வரை கிடைக்கும். அதற்குப் பிறகு விதைகளின் அளவு கூடும்.
எனவே, வருக மஞ்சளானது எதிர்வரும் காலங்களில் செயற்கைச் சாயமூட்டிகளுக்கு மாற்றாகவும், சிறந்த இயற்கைச் சாயமூட்டியாகவும் பயன்படும். இதன் முதிராத விதைப் பெட்டகங்களை, கால்நடைகளுக்குத் தீவனமாகவும், மருத்துவக் குணங்களைக் கொண்ட இலை, தண்டு, வேர், விதை ஆகியவற்றை, பல்வேறு நுண்ணுயிர்த் தொற்றுகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
மேலும், இந்த அன்னாடோ சாயம், உணவுப் பொருள்கள், அழகுப் பொருள்கள் மற்றும் மருத்துவ மூலப்பொருள்கள் தயாரிப்பில் அதிகமாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
முனைவர் ச.கவிதா,
கி.அருள்மூர்த்தி, வே.மனோன்மணி, இரா.விக்னேஸ்வரி,
விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்துர் – 641 003.
சந்தேகமா? கேளுங்கள்!