செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023
திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,73,743. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2.87 இலட்சம் பேர்கள். இவர்களில் 50 சதவிகிதக் குழந்தைகள் இரத்தச்சோகை உடையவர்கள். 30.1 சதவிகிதக் குழந்தைகள் குள்ளமானவர்கள். 23.3 சதவிகிதக் குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற உடல் எடையற்றவர்கள். 26.6 சதவிகிதக் குழந்தைகள் வயதுக்கு ஏற்ற உடல் எடை இல்லாதவர்கள்.
எனவே, நமது குடும்ப நலத்துக்கு சரிவிகித உணவு மிகவும் அவசியமாகும். இந்தச் சரிவிகித உணவில் மாவுச்சத்து மிக்க தானியங்கள், புரதச்சத்துள்ள பயறு வகைகளுடன், தாதுப் பொருள்கள் மற்றும் உயிர்ச் சத்துகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.
சத்தியல் வல்லுநர்களின் பரிந்துரைப்படி, ஒவ்வொருவரும் நாள்தோறும் 120 கிராம் பழங்கள், 300 கிராம் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த 300 கிராம் காய்கறிகளில், 130 கிராம் கீரை வகைகளாக, 85 கிராம் வேர் மற்றும் கிழங்கு வகைகளாக, 85 கிராம் இதர காய்கறிகளாக இருக்க வேண்டும்.
கிராமப்புறப் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் சரிவிகித உணவுப் பழக்கம் மற்றும் காய்கறி, பழங்களில் உள்ள சத்துகளைப் பற்றிய புரிந்துணர்வு போதியளவில் இல்லை. பொருளாதார வசதியில்லாத மக்களிடம், வாங்கும் திறன் குறைவாக இருப்பதால், சத்துமிகு தாவரத் தோட்டத்தை அவர்கள் இடத்திலேயே அமைத்து, அதன் மூலம் சரிவிகித உணவு கிடைப்பதற்கான வழியை உருவாக்கித் தர முடியும்.
இதையும், கிராமப்புறப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும்; கிராமப்புற வீடுகளில் சத்துமிகு தாவரத் தோட்டம் அமைத்தல் என்னும் திட்டத்தை அமைப்பதில், திரூர் வேளாண்மை அறிவியல் நிலையம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மற்றும் உயிரித் தொழில் நுட்ப ஆராய்ச்சி உதவிக்குழு (BIRAC) ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அந்த ஒப்பந்தத்துடன் 2019 – 2020 முதல், உணவு அடிப்படையிலான ஊட்டச்சத்துப் பாதுகாப்புத் திறன் மேம்பாடு மற்றும் சத்துமிகு தாவரத் தோட்டங்களை நிறுவுதல் என்னும் திட்டமானது, திருவள்ளூர் மாவட்டம் திரூரில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.
திட்டக் குறிக்கோள் மற்றும் நோக்கம்
ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் செறிவூட்டிய தாவர இனங்கள் நிறைந்த தோட்டத்தை அமைத்தல் மற்றும் உயிரி காய்கறித் தோட்டத்தைப் பராமரித்தல்.
காய்கறி விதைகள் மற்றும் நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அளிக்கும் மையமாக, வேளாண்மை அறிவியல் நிலையம் செயல்படுதல். சத்துக் குறையைப் போக்க, கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
ஐநூறு பேர்களைத் தேர்வு செய்து 20 குழுக்களாகப் பிரித்து, அவர்களுக்குத் திறன் வளர்ப்புப் பயிற்சிகள் மூலம் சத்துகள் நிறைந்த மற்றும் செறிவூட்டிய தாவர இனங்களைப் பற்றிய அறிவை மேம்படுத்துதல்.
முதன்மைப் பயிற்சியாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சிளித்து, அவர்கள் மூலம் கிராமப்புறத்தில் நிறுவியுள்ள ஊட்டச்சத்துத் தோட்டங்களுக்கு ஆலோசனைகளை வழங்குதல்.
திட்டத்தின் செயல்பாடுகள்
திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 2.86 ஏக்கர் பரப்பில், சத்துமிகு தாவரத் தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கே, வைட்டமின்கள் ஏ, பி, சி, இ, கே மற்றும் இரும்பு, சுண்ணாம்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாலிப்டினம் போன்ற சத்துகளுக்கான தனித்தனிப் பிரிவுகளை அமைத்து, அந்தந்தச் சத்துகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன.
திருவள்ளூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், தாய் நாற்றங்காலை அமைத்து, அதன் மூலம் சத்துகள் நிறைந்த மற்றும் செறிவூட்டிய காய்கறி விதைகள் மற்றும் நாற்றுகளை உற்பத்தி செய்து, பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
சத்துக் குறைபாட்டை அகற்ற, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 545 ஆண்கள் மற்றும் பெண்களிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு குழுவில் 25 பேர்கள் வீதம் 20 குழுக்களை அமைத்து மொத்தம் 500 சுய உதவிக்குழு மகளிருக்குப் பயிற்சியளித்து, காய்கறி விதைகள் மற்றும் நாற்றுகள் வழங்கப்பட்டன.
ஊட்டச்சத்துத் தோட்டத்தை அமைக்கும் வகையில், முப்பது முதன்மைப் பயிற்சியாளர்களுக்கு 14.10.2020 அன்று பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் திட்ட இயக்குநர், நெல் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழக மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட மேலாளர் மற்றும் இளம் தொழில் நுட்ப வல்லுநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தா.ல.ப்ரீத்தி, ப.யோகமீனாட்சி, சி.அருள் பிரசாத், ம.செந்தில் குமார், வி.அ.விஜயசாந்தி, கே.சிவகாமி, ப.சாந்தி. சி.பானுமதி, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!