செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.
உணவு உற்பத்தியைப் பெருக்கும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதில் மத்திய மாநில அரசுகள் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. இதற்கெனப் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றன.
இவ்வகையில், மத்திய அரசு நிதி நிறுவனமான, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி எனப்படும் நபார்டு வங்கியானது, விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டங்களுக்குத் தாராளமாக நிதியுதவி செய்து வருகிறது.
இப்போது, தமிழகத்தில் விறுவிறுப்பாக இயங்கி வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நபார்டு வங்கியின் உதவி எவ்வகையில் உள்ளது என்பதைப் பற்றி, இந்த வங்கியின், தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலத் தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதனிடம் கேட்டோம்.
“விவசாயிகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள மத்திய அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர வேண்டுமானால், விளைபொருள் வணிகத்தில் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது, உற்பத்திப் பொருள்களுக்குச் சிறந்த விலை கிடைப்பதுடன் சந்தைகளைப் பற்றிய தகவல்கள் நிறையக் கிடைக்க வேண்டும், அருகிலுள்ள சந்தையில் முடிவு செய்யப்படும் விலையும், சந்தை நேரமும் விவசாயிகளுக்குத் தெரிய வேண்டும் என்னும் சீரிய நோக்கங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்த நோக்கங்களைச் செயல்படுத்தும் விதமாகத் தான், இந்திய விவசாயத் துறை, E-NAM என்னும் பெயரில் ஒருங்கிணைந்த இணைய வணிகத் தளத்தை அமைத்துள்ளது.
இந்த நோக்கங்களின் அடிப்படையில் தான், கடந்த 2014-15 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர், நபார்டு வங்கியில் உற்பத்தி நிதியென்று 200 கோடி ரூபாயை ஒதுக்கி, இந்தியா முழுவதும் இரண்டாயிரம் உற்பத்தி நிறுவனங்களை இரண்டு ஆண்டுகளில் தொடங்க வேண்டும் என்று அறிவித்தார்.
அதன்படி, உற்பத்தி நிதியை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் 29 மாநிலங்களில் சுமார் 2,000 உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் தொடங்கப் பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 6.20 இலட்சம் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், கிராமப்புற கைவினைஞர்கள் போன்றவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகள் அல்லது விவசாயிகள் அற்ற மற்றவர்களைக் கொண்டு அமைக்கப் படுகின்றன. இந்த நிறுவனங்கள் சட்டப்படி பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் உற்பத்தியாளர்களே பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களும் இவர்கள் தான். தங்களால் தயாரிக்கப்படும் முக்கியப் பொருள்களை வணிகம் செய்கின்றனர். உறுப்பினர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்புகள் வேலை செய்கின்றன. வணிகம் மூலம் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதி பங்குதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.
மீதமுள்ள தொகை, வணிகத்தை மேலும் வளர்ப்பதற்குப் பயன்படுகிறது. இப்படி, கிராம மக்களின் முன்னேற்றத்தை மையப்படுத்தியே இந்த அமைப்புகளின் நடவடிக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 169 உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களும், புதுவையில் ஒன்றும் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிறுவனங்களில் 1.25 இலட்சம் விவசாயிகள், உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவற்றில், தமிழ்நாட்டில் உள்ள 94 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், 2016-17 ஆம் நிதியாண்டில் நிகர இலாபத்தை ஈட்டியுள்ளன.
இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வணிகத் திட்டமிடல், தொழில் நுட்பங்கள் போன்றவற்றை, வல்லுநர்கள் நடத்தும் வகுப்பறைப் பயிற்சிகள், விவசாயப் பல்கலைக் கழகங்கள், வேளாண்மைக் காப்பீட்டு நிறுவனங்கள், தொழில்முறை நிறுவனங்கள் போன்றவற்றைப் பார்த்து வருதல் மூலம் பெறுகின்றனர். இதற்கு, நபார்டு வங்கி ஊக்கத்தொகை வழங்குகிறது. இதன் மூலம், விவசாயிகள் நேரடியாகப் பயன் பெறுகிறார்கள்.
மேலும், வணிக வங்கிகள், கிராமிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்குத் தேவையான கடன் வசதியை வழங்குவதற்கு, நபார்டு வங்கி, தனது துணை அமைப்பான NABKISAN மூலம் உதவி செய்கிறது.
நீர்வடிப்பகுதிக் குழுக்கள் போன்றவற்றின் உதவியுடன் இயற்கை வளங்களைக் கண்டறிதல், மக்களை ஒருங்கிணைத்தல், பயன்மிகு இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், சந்தைகளைப் பற்றி அறியச் செய்தல் போன்றவற்றின் மூலம், நபார்டு வங்கி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வை உண்டாக்குகிறது.
மேலும், நிறுவனங்களுக்கான விதிகளைத் தயாரித்தல், பதிவு செய்தல், தலைமை நிர்வாக அலுவலரை நியமித்தல் போன்ற பணிகளிலும் நபார்டு வங்கி, விவசாயிகளுக்குத் துணையாக இருக்கிறது’’ என்றார்.
மு.உமாபதி
சந்தேகமா? கேளுங்கள்!