கொரங்காடு பாரம்பரிய மேய்ச்சல் நிலம்!

கொரங்காடு korangadu scaled

கொரங்காடு என்பது, மேற்குத் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளான காங்கேயம், வெள்ளக் கோயில், பல்லடம், தாராபுரம் மற்றும் கரூர் பரமத்திப் பகுதியில் காணப்படும் பாரம்பரிய மேய்ச்சல் நிலமாகும். இப்பகுதிகளில் மழைப்பொழிவு மிகவும் குறைவு.

எனவே, இப்பகுதி விவசாயிகள் கொரங்காட்டில் கால்நடைகளை மேய்ப்பதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். கொரங்காட்டில் முக்கியமாகக் காணப்படுவது கொழுக்கட்டைப் புல்லாகும். இதைக் காங்கேய மேய்ச்சல் நிலம் என்றும் கூறுவர்.

கொரங்காட்டின் தோற்றம்

கொரங்காடு கொங்குப் பகுதியில் காலங் காலமாக இருந்து வருகிறது. புவியியல் அமைப்பில் இப்பகுதி மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு உள்ளது. பருவமழைக் காலங்களில் கூட இங்கே பெருமளவில் மழை பெய்வதில்லை.

அமராவதி, காவேரி, பவானி ஆகிய ஆற்றுப் பாசனப் பகுதிகளில் மட்டும் விவசாயம் நடைபெறும். மற்ற பகுதிகள் வானம் பார்த்த பூமியாக வறண்டு கிடக்கும்.

கொழுக்கட்டைப் புல் வறட்சியைத் தாங்கும் தன்மை மிக்கது. பாலக்காட்டுக் கணவாயால் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் தென்மேற்குப் பருவக்காற்று அதிவேகத்தில் வீசும். அப்போது இப்புல் விதைகள் மற்ற பகுதிகளுக்குப் பரவி, அங்கே பெய்யும் சிறிதளவு மழையிலேயே வளர்ந்து விடும்.

பரப்பளவு

கொரங்காடு மேய்ச்சல் நிலம் 3,841 ச.கி.மீ. பரப்பில் விரிந்துள்ளது. இது, தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பில் 2.9% ஆகும்.

இன்றைய திருப்பூர் மாவட்டத்தின் வெள்ளக் கோயில், தாராபுரம், மூலனூர், பல்லடம், பொங்கலூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பரமத்தி, அரவக்குறிச்சிப் பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது. கோவை, ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கொரங்காட்டைக் காணலாம்.

கொரங்காட்டின் அமைப்பு

கொரங்காட்டில் முக்கியமான மூன்று தாவர வகைகள் உள்ளன. அவை, வேலமரம், கிளுவை, கொழுக்கட்டைப் புல் ஆகியன. கொரங்காடு முழுவதும் இந்தப் புல் முளைத்திருக்கும். அதற்கு நடுநடுவே வேல மரங்கள் இருக்கும்.

கொரங்காட்டு வேலி, கிளுவை முள்ளால் ஆனது. இந்த வேலி உயிர்ப்புடன் இருப்பதால் தனிச் சிறப்பைப் பெறுகிறது. இவற்றைத் தவிர, ஆவாரை, கொளுஞ்சி, குப்பைமேனி, கீழாநெல்லி, நாயுருவி, பூளைப்பூச்செடி, மின்னமரம் போன்றவையும் இருக்கும்.

மேய்ச்சல் முறை

ஓராண்டில் 5-6 மாதங்கள் வரை தீவன ஆதாரமாகக் கொரங்காடு இருக்கும். அடுத்து, மழை பொழிந்ததும் மீண்டும் கொழுக்கட்டைப் புல் வளர்ந்து விடும். இப்பகுதிக்கு மூன்று பருவங்களில் மழை கிடைக்கும்.

அதாவது, தென்மேற்குப் பருவமழை மூலம் ஆனி- ஆவணிக் காலத்தில் 191 செ.மீ. மழை; வடகிழக்குப் பருவமழை மூலம் புரட்டாசி- கார்த்திகைக் காலத்தில் 330 செ.மீ. மழை; மாசி- வைகாசிக் காலத்தில் பெய்யும் கோடைமழை மூலம் 145 செ.மீ. மழையென, ஆண்டுக்கு 666 செ.மீ. மழை கிடைக்கும்.

பொதுவாகக் கால்நடைகளைக் காலையிலேயே கொரங்காட்டில் விட்டு விடுவார்கள். அங்குள்ள தாழிகளில் அவற்றுக்குத் தேவையான குடிநீரை நிரப்பி விடுவார்கள். இப்படிப் பகல் முழுதும் அங்கே மேயும் கால்நடைகளை மாலையில் கொட்டிலுக்கு அழைத்து வந்து கொஞ்சம் அடர் தீவனம் கொடுப்பார்கள்.

கொரங்காட்டுக் கால்நடைகள்

கொரங்காடு, காங்கேய மாடுகளின் இனவிருத்திக்குப் பேர் போனது. இந்த மாடுகள் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை மிக்கவை. மேலும், இங்கு மேச்சேரி, மயிலாம்பாடி செம்மறி ஆடுகளும் காணப்படும்.

தாண்டுகாலிட்டுக் கிளுவை வேலியை மேய்ந்து விடும் என்பதால், இப்பகுதி மக்கள் வெள்ளாட்டு வளர்ப்பைத் தவிர்க்கின்றனர். ஓர் எக்டர் நிலத்தில் 2 மாடுகள் மற்றும் 25 ஆடுகளை வளர்க்கலாம். கொரங்காட்டின் தீவனச்சத்து மதிப்பைக் கூட்டுவதற்காக, நரிப்பயறு மற்றும் கொள்ளு விதைகளை விதைப்பார்கள்.

இன்றைய நிலை

தொடர்ந்து வறட்சி நிலவினால், கிளுவை வேலியில் சிதைவு ஏற்படும். எனவே, மழைக்காலம் வருமுன் அதைச் சீரமைக்க வேண்டும். இதனால் சிலர் கம்பிவேலியை அமைக்கின்றனர். ஆனால், இதனால் கொரங்காட்டின் இயற்கை அமைப்பு மாறிவிடும்.

சில விவசாயிகள் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துக் கொரங்காடுகளை விளை நிலங்களாக மாற்றுகின்றனர்.

திருப்பூர் போன்ற வணிகம் செறிந்த பகுதியில் இருக்கும் கொரங்காடு நிலங்கள் ஆலைகளாக மாறி வருகின்றன. பணம் என்னும் இலக்கைத் தாண்டி, பல சிறப்புகளைக் கொண்ட கொரங்காட்டைக் காத்தால் தான், இப்பகுதியில் இருக்கும் நாட்டு மாடுகள், ஆடுகள் போன்ற பாரம்பரிய விலங்குகளைப் பாதுகாக்க முடியும்.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா, தி.மகேஷ், கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading