My page - topic 1, topic 2, topic 3

சொட்டுநீர்ப் பாசன அமைப்பும் பயன்களும்!

சொட்டுநீர்ப் பாசன அமைப்பு என்பது, பயிருக்குத் தேவையான நீரை, குறைவான வீதத்தில், பயிரின் வேர்ப்பகுதியில் தினமும் தருவதாகும். இந்த முறையில், நன்கு திட்டமிட்டுக் குழாய்கள் மூலம் பாசனநீரை எடுத்துச் செல்வதால், நீர் வீணாவது இல்லை. பயிருக்குத் தேவையான அளவில், தேவையான நேரத்தில் நீர் கிடைப்பதால், பயிர் நன்கு செழித்து வளர்ந்து, நல்ல மகசூலைக் கொடுக்கிறது.

சொட்டுநீர்ப் பாசனத்தின் பயன்கள்

பயிர் விளைச்சல் 20 முதல் 50 சதம் வரையில் கூடுகிறது. வரிசையில் நடப்படும் எல்லாப் பயிர்களுக்கும் ஏற்றது. பயிர் வளர்ச்சிக்குத் தேவையான உரங்களை, தேவையான அளவில், பாசனநீர் வழியே அளிப்பதற்கு உதவுகிறது. உரம் பயன்படு திறன் இரு மடங்கு ஆவதால், உரத்தேவையில் 30 முதல் 45 சதம் வரையில் குறைகிறது. களை வளர்ச்சி முற்றிலும் கட்டுப்படுகிறது.

சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள்

நீரேற்றும் இயந்திரம், உரப்பாசன அலகு, வடிகட்டி, முதன்மைக் குழாய்கள், துணை முதன்மைக் குழாய்கள், பக்கவாட்டுக் குழாய்கள், சொட்டுவான்கள்.

நீரேற்றும் இயந்திரம்

கிணற்றுக்கு மைய விலக்கு (சென்ட்ரிப்யூகல்) இயந்திரமும், ஆழ்துளைக் கிணற்றுக்கு நீர்மூழ்கி (சப்மெர்சிபிள்) இயந்திரமும், சொட்டுநீர்ப் பாசனத்தை அமைக்க ஏற்றவை. காற்றழுத்த முறையில் நீரேற்றும் இயந்திரம் (கம்ப்ரெசர்) சொட்டுநீர்ப் பாசனத்தை அமைப்பதற்குப் பயன்படாது. இந்த இயந்திரம் மூலம் கிடைக்கும் நீரை, ஒரு தொட்டியில் சேமித்து, மைய விலக்கு நீரேற்றும் இயந்திரம் மூலம், சொட்டுநீர்ப் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம்.

சொட்டுநீர் உரப்பாசனம்

இது, பாசன நீருடன் உரங்களையும் கலந்து சமச்சீராகப் பயிருக்கு அளிக்கும் முறையாகும். இவ்வகையில், உரங்களை அளிக்கும் போது, நீரும் உரமும் பயிரின் வேருக்கு நேரடியாகச் செல்லும். இதனால், வேர் மூலம் கிடைக்கும் சத்துகளை, பயிர் எளிதாக எடுத்துக் கொள்ளும். இம்முறையில், உரத்தையும் நீரையும் துல்லியமாகக் கணக்கிட்டுத் தரலாம்.

உரமானது, அனைத்துப் பயிர்களுக்கும் நீருடன் கலந்து சீராகக் கிடைப்பதால், 25 முதல் 50 சதம் விளைச்சல் கூடும். உரப் பயன்பாட்டுத் திறன் 80 முதல் 90 சதம் வரையில் இருப்பதால், இட வேண்டிய உரத்தில் 25 சதம் வரையில் குறைத்து இடலாம். சொட்டுநீர்ப் பாசனத்தில் மட்டும் தான் நுண் சத்துகளைத் திறம்பட அளிக்க முடியும். நீர்ச் சேமிப்புடன், ஆள் செலவு, மின்சாரச் செலவு பெருமளவில் குறையும்.

சொட்டுநீர் உரப்பாசனக் கருவிகள்

வென்சுரி கருவி, உரதொட்டி, உரச்செலுத்தி ஆகிய மூன்று முக்கியக் கருவிகள் மூலம், சொட்டுநீர் உரப்பாசனம் செய்யப்படுகிறது.

வென்சுரி கருவி: இந்தக் கருவியை முதன்மைக் குழாய்க்கு இணையாக அமைக்க வேண்டும். செயல் திறனுள்ள இக்கருவியை எளிதாகப் பயன்படுத்தலாம். மலிவான விலையில் கிடைக்கும். சிறியளவில் பாசனம் உள்ள நிலங்களுக்கு ஏற்றது. இது, நீரின் அழுத்த வேறுபாட்டால் இயங்குகிறது.

இந்தக் கருவி மூலம், பயிர்களுக்கு உரத்தை அளித்த பிறகு, 10-15 நிமிடம் வெறும் நீரை மட்டும் விட வேண்டும். ஏனெனில், வென்சுரியில் அடைப்பு ஏற்படுவதை இதன் மூலம் தடுக்கலாம். இந்தக் கருவியால் மொத்த நீரோட்ட விரயம் அதிகமாவது தெரிய வந்துள்ளது. இதை அமைக்க 2,000 ரூபாய் செலவாகும்.

உரத்தொட்டி: இதை, முதன்மைக் குழாயில், வடிகட்டிகளுக்கு முன் இணைக்க வேண்டும். தேவையான உரத்தை இந்தத் தொட்டியில் இடும் போது, முதன்மைக் குழாயில் செல்லும் நீரானது, தொட்டியில் உள்ள உரத்தைக் கரைத்து, பயிர்களுக்கு எடுத்துச் செல்லும். இந்த உரத் தொட்டியில் திட உரங்களையும் இடலாம்.

இந்தத் தொட்டியில் ஏற்படும் மொத்த நீரழுத்த விரயம், வென்சுரியில் ஏற்படும் மொத்த நீரழுத்தத்தை விடக் குறைவாகும். இந்த உரத்தொட்டியின் விலை 3,00 முதல் 4,000 ரூபாய் வரை இருக்கும். 60 முதல் 160 லிட்டர் வரையுள்ள உரத்தொட்டிகள் சந்தையில் கிடைக்கும். இந்தத் தொட்டியைப் பயன்படுத்தும் போது, தொட்டியின் வாயை இறுக்கமாக மூடிவிட வேண்டும்.

உரச்செலுத்தி: இது, குழாயில் போகும் நீரின் அழுத்தம் மூலம் இயங்கும். உரக்கரைசலை எடுத்துச் செல்லும் அளவானது, பாசன நீரோட்டத்துக்கு ஏற்ப அமையும். இதனால், நீர் மற்றும் உரத்தின் விகிதம் எப்போதும் ஒரே சீராக இருக்கும். எனவே, ஒவ்வொரு செடிக்கும் தேவையான அளவு உரத்தைத் துல்லியமாக அளிக்க முடியும்.

இந்த உரச்செலுத்தியில், திரவ உரங்களை அல்லது நீரில் கரையும் உரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தக் கருவியை இணைப்பதால்,  பாசனக் குழாயில் செல்லும் நீரோட்ட அழுத்த இழப்பு மிகவும் குறைவாகும். நீரோட்ட அளவை, பிஸ்டனில் ஏற்படும் கிளிக்குகளை வைத்து அறியலாம். அதிகளவில் பாசனம் செய்ய இக்கருவி மிகவும் ஏற்றது. இதன் விலை 12,000- 15,000 ரூபாயாகும்.

வடிகட்டி: பாசன நீரில் நுண் மண், களிமண், நெகிழித் துகள்கள் கலந்து இருந்தால், வலை வடிகட்டி, திரை வடிகட்டியைப் பயன்படுத்த வேண்டும். இந்த வடிகட்டிகள், நெகிழி, வார்ப்பிரும்பு, முலாம் பூசப்பட்ட இரும்பு ஆகிய உலோகங்களில் கிடைக்கும்.

ஆற்றுநீர், தேக்கத்தில் இருந்து வரும் நீர் மற்றும் சுத்தப்படுத்திய கழிவு நீரைப் பயிர்களுக்கு விடும் போது, மணல் வடிகட்டி, வலை வடிகட்டி ஆகியவற்றைச் சொட்டுநீர்ப் பாசன அமைப்பில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். பக்கவழி அமைப்பும், உரப்பாசன அலகும், வடிகட்டிகளுக்கு முன் பொருத்தப்பட வேண்டும்.

மணல் பிரிப்புக் கருவி, முதன்மைக் குழாய், துணைக் குழாய்கள்: முதன்மைக் குழாய், வடிகட்டிகளில் இருந்து வெளிவரும் நீரை, நிலத்தில் உள்ள துணைக் குழாய்களுக்குப் பகிர்ந்தளிக்கும். 40 மி.மீ. முதல் 110 மி.மீ. வரையில் வெளி விட்டம், 4 கி.கி, செ.மீ. 2 முதல் 6 கி.கி, செ.மீ. 2 வரையிலான அழுத்தத்தைத் தாங்கும் குழாய்கள் உள்ளன. பக்கவாட்டுக் குழாய்கள், லேட்டரல் ஆகியன, துணைக் குழாய்களில் உள்ள நீரைச் சொட்டுவான்களுக்கு அளிக்கும். 12 மி.மீ., 16 மி.மீ. வரையுள்ள குழாய்கள் பயன்படும்.

சொட்டுவான்கள்: பக்கக் குழாய்களில் உள்ள நீரைப் பயிர்களின் வேர்களில் சொட்டுச் சொட்டாக விடும். மணிக்கு 2, 4, 8, 10 லிட்டர் வீதம் நீரைச் சொட்டும் சொட்டுவான்கள் உள்ளன. இவற்றை, 0.5 கி.கி, செ.மீ 2 முதல் 4 கி.கி, செ.மீ. 2 வரையிலான இயக்க அழுத்த அளவுகளில் பொருத்தலாம். பொருத்தும் இடத்தை வைத்து, குழாய் உள் சொட்டுவான், குழாய் வெளிச் சொட்டுவான் என இரண்டாகப் பிரிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: முதன்மை ஆராய்ச்சியாளர், துல்லிய வேளாண்மை மேம்பாட்டு மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்- 641 003. தொலைபேசி: 0422- 6611258.


முதன்மை ஆராய்ச்சியாளர், துல்லிய வேளாண்மை மேம்பாட்டு மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்– 641 003.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks