தேனீக்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு குணங்களை வெளிப்படுத்தும். அவை இனப்பெருக்கம், கூட்டம் பிரிதல், உணவைச் சேகரித்தல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். தேனீக் கூட்டத்தைச் சிறப்பாக மேலாண்மை செய்வதற்கு, அவற்றின் குணங்களை அறிந்திருத்தல் அவசியமாகும்.
கூட்டம் பிரிதல் (Swarming)
கூட்டம் பிரிதல் என்பது, ஒருவகை இனப்பெருக்க முறையாகும். அதாவது, தேனீக் கூட்டத்தின் ஒருபகுதி புதிய இடத்தில் புதிய கூட்டத்தை உருவாக்க இடம் பெயர்ந்து செல்லும். இதற்கான தொடக்கம், ஒரு கூட்டம் தேவையான தேனீக்களைப் பெற்று, புதிய கூட்டத்தைத் தோற்றுவிக்கத் தேவை ஏற்படும் போது உண்டாகும்.
கூட்டம் பிரிதலுக்கான முதல் நிலை, ஆண் முட்டைகளை இட்டு ஆண் தேனீக்களை உருவாக்கி, புதிய இராணித் தேனீயுடன் புணரச் செய்வது. ஆயினும், கூட்டம் பிரிதலுக்கான முதல் அறிகுறி புழுவறையின் கீழ்ப்குதியிலும், ஓரங்களைச் சுற்றியும், இராணித்தேனீ அறைகள் தோன்றுவதாகும்.
இராணித் தேனீயின் வயது முதிர்வால் போதியளவு இராணிப்பொருள் சுரப்புக் குறையும் போது, அதாவது, வேலைக்கார தேனீக்கள், இராணித் தேனீயின் உடலிலிருந்து எடுத்து, மற்ற வேலைக்கார தேனீக்களுக்கும் கொடுக்கும் இராணித்தேனீ சுரப்புப் பொருள் குறையும் போது, வேலைக்கார தேனீக்கள் இராணி அறையைக் கட்டத் தூண்டப்படும்.
இராணிப் பொருளின் உற்பத்தியானது குறிப்பிட்ட அளவுக்குக் கீழே போனாலோ அல்லது அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டாலோ, புதிய இராணித் தேனீயை உருவாக்கும் நேரம் வந்து விட்டது என்பதை, வேலைக்கார தேனீக்கள் அறிந்து கொள்ளும்.
வேலைக்கார தேனீக்கள் புதிய இராணி அறையைக் கட்டத் தொடங்கும் போது, தாய் இராணித் தேனீயின் முட்டையிடும் திறன் குறைந்து விடும். இராணி அறையில் உள்ள ஒரு புழு ழுழுமையாக வளர்ந்து அறைகள் மூடப்பட்டால், முதிர்ந்த இராணித்தேனீ ஒரு கூட்டம் தேனீக்களுடன் கூட்டை விட்டுப் பெரும் இரைச்சலுடன் பிரிந்து செல்லும். கூட்டம் பிரிதலுக்கு 2-3 நாட்களுக்கு முன்னதாக, சாரணப்படைத் தேனீக்கள் (scout bees) தகுந்த உறைவிடத்தைத் தேட வெளியே செல்லும்.
பிரிந்து சென்று, மரத்தில் தற்காலிகமாகக் கூடியிருக்கும் கூட்டத்துக்குச் சாரணப்படைத் தேனீக்கள், பொதுவான நடனத்தின் மூலம் புதிய தங்குமிடத்தை அறிவிக்கும். முதிர்ந்த இராணித் தேனீயின் தலைமையிலான முதல் கூட்டம் முக்கியமான கூட்டமாகும்.
பழைய கூட்டில் உருவான புதிய இராணித் தேனீயானது, தனது வேலைக்கார தேனீக்கள் மூலம், மற்ற இராணி அறைகளிலுள்ள இராணித் தேனீக்களைக் கொல்லச் செய்யும். அதாவது, வெளியே வந்த இராணித்தேனீ அதிகச் சத்தத்தை எழுப்பும் போது, மற்ற அறைகளுக்குள் இருக்கும் இராணித் தேனீக்கள் மெதுவான சத்தத்தை உண்டாக்கும்.
இந்த பதிலின் மூலம் வெளியே இருக்கும் இராணித்தேனீ, இதர இராணி ஈக்களை அடையாளம் கண்டு அறைகளை உடைத்து அவற்றைக் கொன்று விடும். வெளியே இருக்கும் இராணித் தேனீயை, அறைகளில் இருக்கும் இராணி ஈக்கள் கொல்ல, வேலைக்கார தேனீக்கள் விடுவதில்லை.
இப்படிப்பட்ட நேரங்களில் வெளியிலுள்ள இராணித்தேனீ, உள்ளிருக்கும் இராணித் தேனீக்களின் அறைகளை மெல்லிய சத்தத்துடன் அழுத்தி விட்டு, இன்னொரு கூட்டத் தேனீக்களுடன் வெளியே சென்று, அடுத்த கூட்டத்தை உருவாக்கும்.
இத்தகைய கூட்டம் பிரியும் தன்மை, வேலைக்கார தேனீக்கள் ஒரு இராணித் தேனீயை ஏற்றுக் கொண்டு, மற்ற எல்லா இராணித் தேனீக்களையும் கொல்ல அனுமதிக்கும் வரை அநேக தடவைகள் நடைபெறும். கூட்டம் பிரிதலைத் தவிர்க்க, வேலைக்கார தேனீக்களே இராணித் தேனீக்களைக் கொலை செய்வதுண்டு. இராணி அறைக்குள் இருக்கும் தேனீக்களைக் கொலை செய்வது, கூட்டத்தை ஒரு இராணித் தேனீயே ஆட்சி செய்ய அனுமதிப்பதாகும்.
ஆனால், கூட்டம் பிரியும் நேரத்தில், முதலில் வெளிவந்த இராணித்தேனீ பிரிந்து சென்று விட்டால், வேலைக்கார தேனீக்கள் அறைகளில் இருக்கும் இராணித் தேனீக்களைப் பாதுகாத்து அவற்றில் ஒன்றைக் கொண்டு; கூட்டம் பிரிந்த பிறகு மீதமுள்ள கூட்டத்தை நிர்வாகம் செய்யும்.
புதிய இராணித் தேனீயின் தேவை
இராணித்தேனீ ஒரு கூட்டத்துக்குத் தேவையான முட்டைகளை இடும் தன்மையை இழக்கும் போதே அல்லது அதிகளவில் ஆண் முட்டைகளை இடும்போதே, மாற்று இராணி தேவைப்படுவது உறுதியாகி விடும். இராணிப்பொருள் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று வேலைக்கார தேனீக்கள் உணரும் போது, அதை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு, அதற்குப் பதிலாக இராணி அறைகளைக் கட்டத் தொடங்கும்.
இவை 2-3 இராணி அறைகளைக் கட்டுமே தவிர, கூட்டம் பிரிதலைப் போல, நிறைய அறைகளைக் கட்டுவதில்லை. இங்கே தேன் கூட்டின் நடுவில் இராணி அறை கட்டப்படும். ஒரு இராணித் தேனீயைத் தவிர, இதர இராணித் தேனீக்கள் கொல்லப்படும். முதிர்ந்த இராணித் தேனீயுடன் கூட, புதிய இராணித் தேனீயும் முட்டையிடத் தொடங்கும். ஆனால், முன்னதாக முதிர்ந்த இராணித்தேனீ காணாமல் போய் விடும்.
அவசர இராணி (Emergency Queen)
இராணித்தேனீ இறந்து விட்டாலோ, இராணிப் பொருள் இல்லாமல் போனாலோ, அவசர இராணியை உருவாக்கும் நிலைக்கு வேலைக்கார தேனீக்கள் தள்ளப்படும். வேலைக்கார தேனீ அறையிலுள்ள முட்டைகள் அல்லது தேனீப்பால் வழங்கப்படும் இரண்டரை நாட்களுக்குக் கீழுள்ள புழுக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் அறைகளைக் கீழ்நோக்கி விரிவுபடுத்தி, இராணித் தேனீக்கு வழங்கப்படுவதைப் போன்ற உணவை அளித்து அவசரத் தேனீக்கள் உருவாக்கப்படும்.
இவற்றுள் வழக்கம் போல ஏதேனும் ஒன்று மட்டும் உயிரோடு வாழ்ந்து புணர்ந்து முட்டையிட்டு, பழைய அல்லது இறந்த தேனீயின் வேலைகளைச் செய்யும். நான்கு வகையான இராணி அறைகள் கட்டப்படும்.
அதாவது, சாதாரண இராணி அறைகள் ஆண் மற்றும் வேலைக்கார தேனீக்களின் அறைகளுடன் கட்டப்படுவது;ஒதுக்கி வைத்து விட்டதற்குப் பதிலாக 2-4 இராணி அறைகள் கூடுகளின் நடுவில் கட்டப்படுவது; கூட்டம் பிரிதலுக்கான இராணி அறைகள் கூட்டம் பிரியும் சமயங்களில் கூட்டின் கீழும் ஓரங்களிலும் கட்டப்படுவது மற்றும் அவசரத்தேனீ அறைகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் தனித்தனியாகக் கட்டப்படுவது.
ஓடிப் போதல் (Absconding)
தேன் கூட்டை மொத்தமாகத் தள்ளிவிட்டுச் செல்வது ஓடிப்போதல் ஆகும். நீர்ப் பற்றாக்குறை, உணவுத் தட்டுப்பாடு, தேன் கூட்டில் அதிகச் சூடு நிலவுதல், பூச்சிகளின் தாக்குதல் மற்றும் இயற்கை எதிரிகளின் தாக்குதல் முதலியன, தேனீக் கூட்டம் ஓடிப் போவதற்கான அடிப்படைக் காரணிகளாகும். ஓடிப் போதலுக்கு முன், தேனீக்கள் கூட்டிலுள்ள தேனைக் குடித்து விட்டு அடைகளை வெறுமையாய் விட்டுவிட்டு இடம் பெயர்ந்து விடும்.
ஓடிப் போதலைத் தடுப்பதற்கு, வேனிற் காலத்தில் நீர் மற்றும் சர்க்கரைப் பாகைத் தேனீப் பெட்டிக்கு அருகில் வைக்க வேண்டும். அனுபவமுள்ள தேனீ வளர்ப்பாளர்கள், ஓடிப் போதலால் ஏற்படும் இழப்பைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதைச் செய்வார்கள். இடம் பெயர்ந்து செல்லும் தேனீக்கள், இவற்றைப் போல வேறு கூடுகளில் இருந்து பிரிந்து வரும் தேனீக்களுடனும் ஒன்று சேரக்கூடும்.
இரண்டு கூட்டங்களும் சில நேரங்களில் அமைதியாக ஒன்று சேரும் அல்லது அவற்றுக்குள் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தி, ஒன்று மற்றொன்றை ஏற்கவோ அல்லது உதறித் தள்ளவோ செய்யும். இப்படி ஓடிப்போன கூட்டத்தை எளிதில் கூடுகளில் அடைத்து, உணவளித்து வளர்க்க முடியும். ஆனால், இரண்டு கூட்டம் ஒன்று சேர்ந்து அதில் ஒரு இராணிக்கு மேல் இருந்தால், ஒரு இராணியாகக் குறையும் வரை கூட்டில் அடைக்க முடியாது.
நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் வெளியேறும் தேனீக்கூட்டம், இவற்றைத் தேடி அலைந்து திரியும் கூட்டம், உணவின்மையால் வலிமையின்றி, உணவு அருகில் இருப்பினும் சேகரிக்க இயலாமல் பசியால் வாடிக் கீழே விழுந்து செத்து விடும். ஆயினும், இந்தக் கூட்டத்தைத் தேனீப் பெட்டிக்குள் அடைத்துச் சர்க்கரைப் பாகைத் தெளித்தால், தேனீக்கள் எழுந்து உணவு சேகரிப்பில் ஈடுபடும்.
குளிருள்ள இடங்களில் வசிக்கும் இத்தாலிய தேனீக்கள் ஓடிப் போவதில்லை. ஆனால், கூட்டில் இருந்து கொண்டே பசியால் செத்து விடும். சில வேளைகளில், ஓடிப்போன கூட்டம் ஓர் இடத்தைத் தேர்வு செய்து தங்கிய பிறகு, மீண்டும் சில மணி நேரங்களில் அல்லது நாட்களில் ஓடிப்போய் விடும்.
மதுரம், நீர், மகரந்தம், பிசின் சேகரித்தல்
மதுரம், நீர் மற்றும் மகரந்தம், தேனீக்களின் உணவாகவும், பிசின் அறைகளை மூடுவதற்கும் பயன்படும். மதுரத்தையும் நீரையும், உறிஞ்சு குழல் அல்லது நாக்கு மூலம் உள்ளே எடுக்கும். மதுரத்தை மதுரச் சுரப்பிகளில் இருந்தும், நீரை ஆறு, குளம் போன்றவற்றில் இருந்தும் எடுக்கும். தேனை இரைப்பையில் சுமந்து வரும். கூட்டுக்கு வந்ததும் இரைப்பையிலுள்ள தேனைத் தேனறைகளிலும், நீரை, தாகமுள்ள புழுக்களுக்கும் என வாய்வழியே கக்கும்.
தேனீக்களின் கால்கள் மகரந்தத்தைச் சேமிக்கும் வகையில் அமைந்துள்ளன. மகரந்தத்தை எடுத்து வரும் தேனீக்கள், கூட்டுக்கு வந்ததும் தமது நடுக்காலால் மகரந்தத்தை, காலியாக உள்ள மகரந்த அறையில் தள்ளி விடும். தேன் கூட்டில் இருக்கும் பிற தேனீக்கள் அதை உடைத்து அவற்றின் உடனடி தேவைக்கெனப் பாதுகாக்கும்.
தேனீக்கள், வைட்டமின் மற்றும் தாதுப்புகளை, மதுரத்திலிருந்து கிடைக்கும் தேனிலிருந்தும், புரதத்தை மகரந்தத்தில் இருந்தும் எடுத்துக் கொள்ளும். புரதச்சத்தானது அரச கூழை உற்பத்தி செய்யவும், இராணித்தேனீ முட்டையிடவும் தேவைப்படும். தேனீக் கூட்டத்தில் மகரந்தம் அதிகளவில் இருக்கும் போது புழு வளர்ப்பு நடைபெறும். மெழுகு சுரப்பிகள் சரிவர இயங்கவும் மகரந்தம் தேவைப்படும்.
முனைவர் ஜே.இராஜாங்கம், முனைவர் சே.சரஸ்வதி, முனைவர் செ.சுகன்யா கண்ணா, முனைவர் சு.முத்துராமலிங்கம், முனைவர் மு.உமா மகேஸ்வரி,
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்.
சந்தேகமா? கேளுங்கள்!