அறுகம்புல்லின் மருத்துவப் பயன்கள்!

அறுகம்புல் Untitled BMQqOJa80 transformed 2

றுகம்புல், நம் வாழ்வியலின் ஓர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்ல, முதன்மை மூலிகையும் ஆகும். நம் முதல் சித்தர் ஈசன். அவன் பிள்ளை கணபதி. அவனே முழு முதல் கடவுள். அவனுக்குரிய மூலிகை அறுகம்புல்.

ஆகவே, இது மூலிகைகளில் முதன்மை யானது. பசுஞ் சாணத்தில் கணபதியை வடிவமைத்து அறுகு சார்த்தி, நம் பணிகள் சிக்கலின்றித் தொடருவதற்கான எளிய வழிபாடு செய்மரபு இன்றும் நம் வாழ்வியல் சார்ந்தது அல்லவா?

அறுகு, வாத, பித்த, கபம் என்னும் முத்தாதுகளில் ஏற்படும் வினைகளை நீக்கி, நோய்க் கூட்டங்களைக் களையும். இதனால், முத்தாதுகள் நோய் நீங்கித் தன்னிலையில் இயல்பாய் (Equilibrium) இயங்கி, உடலுக்கு வளம் சேர்க்கும். தேரையர் என்னும் சித்தர் தன் வெண்பாவில் கூறும் கருத்து இது.

வகைகள்: அருகம்புல், அறுகம்புல் இரண்டும் ஒன்றே. அறுகு பதம், மூதண்டம், தூர்வை, மேகாரி என்று, வேறு பெயர்களும் இதற்கு உண்டு. புல், வேர் என இரண்டும் மருத்துவத்தில் பயன்படும். இதன் சுவை இனிப்பு. தட்ப வீரியம் கொண்டு பிரிவில் இனிப்பாகச் செயல்படும்.

புல்வகை மொத்தம் நாற்பத்து ஐந்து. அவற்றில் ஒன்று தான் அறுகு என்னும் அருகன்புல். இது ஏழு வகைகளைக் கொண்டது. அவை முறையே, உப்பறுகு, கூந்தலறுகு, சிற்றறுகு, புல்லறுகு, பேரறுகு, பனையறுகு, வெள்ளறுகு என்று, நம் மருத்துவ அகராதியில் உண்டு.

புல் குடும்பமான Poaceae-ல் அறுகம்புல் தரையில் படரும் பூண்டின் இனம் சார்ந்த ஒரு சிறு செடி. Cynodon Dactylonpers என்பது இதன் தாவரப் பெயர்.

பண்புகள் : நாம் வாழ்வாங்கு வாழ, நம் பெற்றோர்கள் நம்மை, ஆல் போல் பெருகி அறுகு போல் வேரோடி என்று உளமார வாழ்த்துவது பண்பாடு. ஆல் தன் வேரை, விழுதுகளாக வெளியே விட்டுப் பரவி வளம் பெறுவதைப் போல, அறுகு நிலத்தின் அடியில் நாம் காண இயலாத அளவில் வேர்களைப் பரப்பி வளம் காணும்.

அதுபோல், இருவேறு நிலைகளில் நாமும் புற அக வாழ்வில் வளம் பெறவே இவ்வாழ்த்து எனலாம்.

ஓரிடத்தில் ஒருமுறை இந்த அறுகம்புல் முளைத்து விட்டால் எந்தச் சூழ்நிலையிலும் அழியாது. நீர் வசதியுள்ள இடங்களில் விரைந்து படர்ந்து காடாகும். வெய்யில் காலத்தில் அறுகு காய்ந்து விட்டாலும், மழைத்துளி பட்டதும் பசுமையாகத் துளிர்க்கும்.

சுற்றுச்சூழலைக் காப்பதிலும், நோய்களைத் தீர்ப்பதிலும், பயன்படும் புற்கள் இரண்டு. அதில் ஒன்று நாணல் புல். இதற்கு ஆற்றங் கரையைக் காக்கும் வல்லமை உண்டு. இன்னொன்று அறுகம்புல். நம் உடலைக் காக்க வல்லது.

நலம்பேண : மாலையில் ஆதவன் மறைவுக்குப் பின், அறுகம்புல் தரையில் பத்து நிமிடங்கள் பாதம் பதித்து நடந்து செல்ல, நம் உடலிலுள்ள பித்தச்சூடு சீரடையும்.

கண் பார்வையும் தெளிவாகும். இதெல்லாம் அறுகம்புல் இலைப் பச்சயத்தில் மிகுதியாக உள்ள கரோட்டி னாய்டுகளின் வேலையாகும். இனி, நோய்களைக் குணமடையச் செய்வதில் அறுகம் புல்லின் பங்கைப் பற்றிப் பார்ப்போம்.

கண்ணொளி பெற, தோல் நோய் நீங்க: தேவையான அளவு அறுகம் புல்லை எடுத்துச் சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், இந்தப் புல் முழுதும் நனையும் வரையில் சுத்தமான நல்லெண்ணெய்யை ஊற்ற வேண்டும். அடுத்து, மெல்லிய தூய மல் துணியால் பாத்திரத்தின் வாயை மூடி, சூரிய வெப்பத்தில் ஒரு வாரம் வைத்து எடுத்துப் பதமாகப் பத்திரப்படுத்த வேண்டும்.

இந்தத் தைலத்தை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து, அதாவது, ஆண்கள் புதன் அல்லது சனிக்கிழமை, பெண்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை, வெந்நீர், சிகைக்காயால் குளித்துவர, கண்கள் ஒளி பெறும். தலைப்பொடுகு, செதில் உதிர்தல், பிற தோல் நோய்கள் நீங்கி உடல் நலம் பெறும்.

சொறிசிரங்கு, தேமல், அரிப்பு, கட்டி, சேற்றுப்புண் நீங்க: அறுகம் புல்லைச் சுத்தம் செய்த பின், சிறிது மஞ்சளைச் சேர்த்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விழுதைச் சொறி சிரங்கு, தேமல், அரிப்பு, கட்டி, சேற்றுப்புண் ஆகியன மீது தடவி, மூன்று மணி நேரம் கழித்து இளம் வெந்நீரில் பயத்தம் மாவால் சுத்தம் செய்துவர நாளடைவில் குணம் பெறலாம்.

இரத்தமூலம் தணிய: 35 கிராம் அறுகம் புல்லை நீர் விட்டு அரைத்து, அதை 200 மில்லி பசும்பாலில் கலந்து, காலையில் பல் துலக்கியதும் 3 நாட்கள் தொடர்ந்து அருந்தினால் இரத்த மூலம் குணமாகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க: 200 மில்லி நீரில் ஒரு பிடி அறுகம்புல், சீரகம் 5 கிராம், தோல் நீக்கிய இஞ்சித் துண்டு 1 ஆகியவற்றை நசுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, கற்கண்டைச் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட்டு வர, வலிப்பு, நரம்புத் தளர்ச்சி குணமாகும். இந்த அறுகம்புல் குடிநீர் பழைய அனுபவ முறையாகும்.

பெண்களுக்கு அதிகமாகப் போகும் இரத்தப்போக்கு நீங்க: சுத்தமான அறுகம்புல் சமூலம் (இலை, தண்டு, வேர்) 20 கிராம், மாதுளைத் தளிர் 20 கிராம் எடுத்து, 3 டம்ளர் நீர் விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதைக் காலை, மதியம், மாலை என 3 வேளை 3 நாட்கள் அருந்த, அதிக மாதவிலக்கு (இரத்தப்போக்கு) இயல்பாகும்.

போதைப் பழக்கம் ஒழிய: கணுக்களை நீக்கிச் சுத்தம் செய்த பச்சை அறுகம்புல் இரண்டு கைப்பிடி எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து, 200 மில்லி நீரில் கலக்கி வடிகட்டி அரைத் தேக்கரண்டித் தேன் சேர்த்து, அதிகாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.

இந்தச் சாற்றைக் குடித்து 2 மணி நேரத்துக்கு வேறு எதையும் சாப்பிடக் கூடாது. வாரம் இருமுறை புதன், சனிக் கிழமையில் அறுகன் தைலத்தைத் தேய்த்துச் சிகைக்காய், வெந்நீரில் தலைமுழுக வேண்டும். தலை முழுகும் நாளில் அறுகம்புல் சாற்றை அருந்த வேண்டாம்.

பெருச்சாளிக்கடி விடம் முறிய: தேவையான அளவு அறுகம்புல் வேரைப் பறித்துச் சுத்தம் செய்து அம்மியிலிட்டு விழுதாக அரைத்து, காலையில் மட்டும் வெறும் வயிற்றில் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, நாளடைவில் பெருச்சாளிக்கடி விடம் முறியும்.

குறிப்பு: கடலை எண்ணெய், கடுகு, பூசணி, கத்தரிக்காய், தக்காளி, குளிர்ச்சியான காய்கறிகள், பாகற்காய், லாகிரிப் பொருள்களைத் தவிர்க்க வேண்டியது பழைய அனுபவ முறையாகும்.

பிற: நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் அறுகம் புல்லை உண்டு, தங்களின் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும். விடத்தை நீக்குவதில் நிகரற்றது அறுகு என்பதைக் கீரி நிரூபிக்கிறது.

நல்ல பாம்பைக் கடித்துக் கொன்ற பின், கீரி விரைவாக ஓடி, பசுமையாக அடர்ந்து கிடக்கும் அறுகம் புல்லின் மேல் விழுந்து உருண்டு புரண்டு தன் உடலிலுள்ள நாகத்தின் விடத்தை நீக்கிக் கொள்கிறது.

காயகற்ப முறை: வேருடன் சேகரித்து, கணுக்களை நீக்கி நீரில் அலசிச் சுத்தம் செய்த 35 கிராம் அறுகம் புல்லை, அம்மியில் வைத்து நைய அரைத்து, அத்துடன் 35 கிராம் பசு வெண்ணெய்யைக் கலந்து காலை, மாலையென ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் சாப்பிட வேண்டும்.

இப்படிச் செய்தால், தளர்ந்த உடல் உறுதி பெறும். இதனால் தான் அறுகுக்கு ஆனை பலம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

புல்லும் மரமும் ஓரறிவு உயிர் என்று தொல்காப்பியம் கூறும். ஓரறிவு உயிரான அறுகம்புல், ஆறறிவு உயிரான மனிதனுக்கு மிகுந்த பயனைத் தரும் மாமருந்து எனச் சித்தர்கள் இனங் கண்டு நமக்களித்த பேற்றினைப் போற்றிப் பயன் பெறுவோமாக!

சித்தர் தந்த காய கற்பம், சிறார் முதல் சான்றோர் வரை, சீராட்டும் தலைமுறை நலனைக் காண, சீராய்த் தேடு அருகம்புல்லை!


அறுகம்புல் Dr.Kumarasamy

மரு.ப.குமாரசாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு,

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading