நாய்களுக்கு ஏற்ற இனச்சேர்க்கைக் காலம்!

நாய் Smallest Dog Breeds

மக்குத் தோழனாக, நம் வீட்டுக் காவலனாக விளங்குவது நாய். நாய்களை வளர்ப்பாளர்களில் பலருக்கு, அவற்றின் சினைப்பருவச் சுழற்சி பற்றிய விழிப்புணர்வு போதியளவில் இல்லாததால், அவற்றைச் சரியான முறையில் இனச்சேர்க்கை செய்ய முடிவதில்லை. இதனால், அவர்களுக்குப் பெரியளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே, நாய்களின் சரியான இனச்சேர்க்கை நேரத்தைக் கணக்கிடும் முறைகளை இங்கே பார்க்கலாம்.

சினைப்பருவச் சுழற்சி நிலைகள்

முன்சினைப் பருவம் என்பது, ஒன்பது நாட்கள் இருக்கும். சினைப்பருவம் என்பது, ஒன்பது நாட்கள் இருக்கும். பின்சினைப் பருவம் என்பது, அறுபது முதல் நூறு நாட்கள் இருக்கும். சினைப்பருவம் இல்லாமை என்பது, நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை இருக்கும்.

தகுந்த இனச்சேர்க்கை நேரத்தை மதிப்பிடுதல்

பால் நடத்தை அடிப்படையில். பிறப்புறுப்புச் செல் பகுப்பாய்வு முறையில். நாளமில்லாச் சுரப்புநீரை அளவிடுதல் முறையில். அதாவது, கருக்கட்டி ஊக்கக் கணநீரை அளவிடுதல் மற்றும் சினை விலங்கின் இயக்கநீரை அளவிடுதல். பிறப்புறுப்பு உள்நோக்குதல் முறையில். சினைமுட்டை நுண்ணொலி அலை வரைபட முறையில். கருப்பைவாய்ப் பிறப்புறுப்புச் சுரப்புநீரை ஆராய்தல் முறையில்.

பால் நடத்தை அடிப்படை: பெண் நாயானது ஆண் நாயை இனச்சேர்க்கை செய்ய அனுமதிக்கும். ஈஸ்ட்ரோஜென் கணநீரின் அளவு குறையத் தொடங்கும் போது, பெண் நாய், சினைப்பருவ அறிகுறியை வெளிப்படுத்தும். ஈஸ்ட்ரோஜென் கணநீரின் குறையும் அளவானது, கருமுட்டையின் முதிர்வைக் குறிக்கும்.

பிறப்புறுப்புச் செல் பகுப்பாய்வு: இது, ஒவ்வொரு சினைப்பருவக் காலத்துக்கும் வேறுபடும். பிறப்புறுப்புப் பகுபாய்வில், பேராபேசல் செல், இடைநிலைச் செல், மேலாக உள்ள இடைநிலைச் செல், மேலாக உள்ள செல்கள், உட்கரு இல்லாத செல்கள் ஆகியன காணப்படும்.

பேராபேசல் செல் என்பது, சிறிய பிறப்புறுப்புச் செல். இது, வட்டமாக, பெரிய உட்கருவுடன் இருக்கும். இடைநிலைச் செல் என்பது, பேராபேசல் செல்லைக் காட்டிலும் இரண்டு மடங்கு பெரியது. இதன் முட்டை, வட்டம் மற்றும் ஒழுங்கற்ற வட்டமாக இருக்கும். பேராபேசல் செல்லைக் காட்டிலும் சிறிய உட்கருவைக் கொண்டிருக்கும்.

மேலாக உள்ள இடைநிலைச் செல் என்பது, தட்டை, கோணல், கூரிய செல்கூழ் ஆகிய எல்லைகளைக் கொண்டது. இதன் உட்கரு நீர்ப்பையைப் போலிருக்கும். மேலாக உள்ள செல் என்பது, பிறப்புறுப்பின் மிகப்பெரிய செல்லாகும். கூரிய மற்றும் கோணலான செல்கூழ் எல்லையைக் கொண்டது. இதன் உட்கரு சிறியதாக இருக்கும். உட்கரு இல்லாத செல் என்பது, பெரிய மற்றும் இறந்து போன ஒழுங்கற்ற பிறப்புறுப்புச் செல்லாகும். இச்செல்லில் உட்கரு இருக்காது.

முன்சினைப் பருவம்: இதில், பேராபேசல் செல்கள், இடைநிலைச் செல்கள், இரத்தச் சிவப்பணுக்கள் ஆகியன இருக்கும்.

சினைப்பருவம்: இதில், 80-90 சதம், மேலாக உள்ள செல்கள், உட்கரு இல்லாத செல்கள் ஆகியன இருக்கும்.

பின்சினைப் பருவம்: இதில், 50-80 சதம், பேராபேசல் செல்கள் மற்றும் இடைநிலைச் செல்கள் இருக்கும்.

சினைப்பருவமின்மை: இதில், பேராபேசல் செல்கள், இடைநிலைச் செல்கள் மிகுதியாக இருக்கும்.

நாளமில்லாச் சுரப்புநீரை அளவிடுதல்: கருக்கட்டி ஊக்கநீரை அளவிடுதல்: அதிகமாகும் கருக்கட்டி ஊக்கக் கணநீரானது, கருமுட்டை வெளிப்படுவதைத் தீர்மானிக்கும். கருக்கட்டி ஊக்கக் கணநீர் எழுச்சியின் நான்கு மற்றும் ஆறு நாட்களில் இனச்சேர்க்கையைச் செய்ய வேண்டும்.

புரோஜெஸ்டிரோனை அளவிடுதல்: புரோஜெஸ்டிரோனின் அளவானது, நானோகிராம்/ மி.லி. அல்லது நானோமோல்/ மி.லி. குறியீட்டில் குறிக்கப்படும். ஒரு நானோகிராம் என்பது 3.17 நானோமோல்/ லிட்டராகும். இரத்த புரோஜெஸ்டீனின் அளவானது, பத்தை விட அதிகமாக இருக்கும் போது, இனச்சேர்க்கை செய்யலாம். கருமுட்டை வெளிப்படுதலில் 5-8 நானோகிராம்/ மி.லி. இருக்கும். கருக்கட்டி ஊக்கக் கணநீர் எழுச்சியின் போது, 1.5-2.5 நானோகிராம்/ மி.லி. இருக்கும்.

பிறப்புறுப்பு உள்நோக்குதல்: பிறப்புறுப்பின் உட்சவ்வை உள்நோக்குக் கருவி மூலம் ஆராய்தல். இது, பிறப்புறுப்பு உட்சவ்வின் திரவத்தைப் பொறுத்து அமையும். இச்செயலை மாற்று நாட்களில் செய்து, உட்சவ்வில் கோணல் எதுவும் இல்லாத போது மேற்கொள்ள வேண்டும். கோணல் எதுவும் இல்லாத நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு மற்றும் 48 மணி நேரம் கழித்து இனச்சேர்க்கையைச் செய்ய வேண்டும்.

சினைமுட்டை நுண்ணொலி வரைபடம்: இம்முறையில், கருமுட்டையை ஆய்வு செய்து, கருமுட்டை வெளியாவதை அறியலாம். இம்முறையில், கருமுட்டைச் சுரப்புப் பையானது, கறுப்பாகவும் வட்டமாகவும் இருக்கும். இந்தப் பையானது, இடை பின்சினைப் பருவத்தில் 2.3 மி.மீ. விட்டம், கடைசி முன்சினைப் பருவத்தில் 5 மி.மீ. விட்டம், ஊக்கக் கணநீர் எழுச்சியின் போது 7-10 மி.மீ. விட்டம் என அதிகரித்துக் காணப்படும்.

கருப்பை வாய்ப் பிறப்புறுப்புச் சுரப்புநீரை ஆராய்தல்: பிறப்புறுப்புத் திரவத்தில் உள்ள குளுக்கோசின் அளவு, இனச்சேர்க்கைக்கான சிறந்த நேரமாகும். ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும் போது, முன் பிறப்பு உறுப்பிலிருந்து எடுக்கப்படும் கோழை, படர் செடியைப் போல நுண்ணோக்கியில் தெரியும்.

இதுவரை கூறியுள்ள அறிவியல் முறைகள் மூலம், நாய்களின் சரியான இனச்சேர்க்கை நேரத்தைக் கண்டறிந்து இனச்சேர்க்கை செய்யலாம். இதனால், நாய்களை வளர்ப்போர்க்கும் மற்றும் நாய்களுக்கும் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.


நாய் R RUTHRA KUMAR

இர.ருத்ரகுமார், கு.சத்திரியன், இ.ல.அருணேஸ்வரன், ரா.பார்த்தசாரதி, இரா.ஸ்ரீரஞ்சனி, வெ.வருதராஜன், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading