My page - topic 1, topic 2, topic 3

தேனீக்களை வளர்க்கும் முறை!

தேனீக்களுக்குத் தூய்மையான நீர் அவசியம். தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவநிலை நிலவும் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதிகக் காற்று, அதிவேகக் காற்று, அதிக வெய்யில், கனமழை ஆகியன, தேனீக்களைப் பாதிக்கும். இடம் சமதளமாக, போதிய வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.

தேனீப் பண்ணையைப் பொது இடங்களில் இருந்தும், போக்குவரத்துச் சாலையை விட்டும், குறைந்தது நூறு மீட்டர் தள்ளியே அமைக்க வேண்டும்.

வீட்டுக்கு அருகில் அமைக்க நேரிட்டால், குறைந்தது ஐம்பது மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஏனெனில், தேனீக்கள் போய் வரும் பாதையில் தடை இருக்கக் கூடாது.

தேனீக்களைப் பற்றிய அறிவு

தேனீக்களை வளர்க்க விரும்புவோர், தேனீக்களின் தன்மைகள், அவை வளரும் விதம், அவற்றின் வாழ்க்கை முறை, அவற்றின் வளர்ச்சியைப் பாதிக்கும் சூழ்நிலைகள், அவற்றைத் தாக்கும் எதிரிகள் மற்றும் அவற்றைக் கையாளும் முறையை அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

கூட்டங்களின் எண்ணிக்கை

தேனீ வளர்ப்பை முதலில் சிறியளவில் தொடங்கி, போதிய பயிற்சியும் அனுபவமும் பெற்ற பிறகு, சாதகமான சூழ்நிலைகள் உள்ள இடங்களில் வணிக நோக்கில் வளர்க்கலாம். முதலில், இரண்டிலிருந்து ஐந்து தேனீப் பெட்டிகளுடன் தேனீ வளர்ப்பைத் தொடங்கலாம்.

இனத் தேர்வு

அடுக்குத் தேனீ இனங்களை மட்டுமே செயற்கை முறையில் வளர்க்கலாம். வைரஸ் நோய் தாக்காத இந்திய தேனீக்கள் வளர்ப்புக்கு ஏற்றவை.

தேனீப் பண்ணை அமைவிடம்

பண்ணை அமையும் இடத்தைச் சுற்றி 1-1.5 கி.மீ. சுற்றளவில், மதுரம், மகரந்தம் தரும் பயிர்கள் அதிகளவில் இருக்க வேண்டும். அதிவேகக் காற்று தாக்காத இடத்தில் தேனீப் பெட்டியை வைக்க வேண்டும். நேரடியாக வெய்யிலும், மழையும் பெட்டியில் படக்கூடாது.

ஓடும் நீர் வசதி அவசியம். மேய்ச்சல் நிலம், அதிகளவில் பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் பயன்படுத்தப்படும் இடங்களைத் தவிர்க்க வேண்டும். இடம் சமதளமாகவும், போதிய வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

மக்கள் கூடும் பள்ளி, சந்தை, மதக்கூடம், மருத்துவமனை, மைதானம், சாலை போன்றவற்றில் இருந்து குறைந்தது நூறு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

புதிய பழத்தோட்டம் தேனீப் பண்ணை அமைக்கச் சிறந்தது. அடர்ந்த தோட்டத்தைத் தேர்வு செய்யக் கூடாது. ஏனெனில், கோடைக் காலத்தில் தோட்டத்துக்குள் போதிய காற்றோட்டம் இல்லாமல் வெப்பமாகவும் புழுக்கமாகவும் இருக்கும்.

தேனீப் பெட்டிகளை வைக்கும் இடம்

தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கைக்காக மட்டும் அல்லது சிறியளவில் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவோர், தென்னை, வாழை, மா, கொய்யா, முருங்கை, வேம்பு, புங்கை போன்ற தோட்டங்களில் ஏக்கருக்கு ஐந்து பெட்டிகள் வீதம் வைக்கலாம்.

வணிக நோக்கில் வளர்க்க விரும்பினால், பத்து ஏக்கர் ரப்பர் தோட்டத்தில், டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை 100 முதல் 1000 பெட்டிகள் வரை வைக்கலாம். ரப்பர் மரத்தின் இலைச் சுரப்பிகளில் இருந்து தேன் சேகரிக்கப்படும்.

அதன் பிறகு, மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை, சூரியகாந்தி, வாழை, முருங்கை, புங்கை, வேம்பு போன்ற பயிர்கள் அதிகமாக உள்ள இடங்களில் வைப்பது நல்லது.

இந்திய தேனீக்கள் இரண்டு கி.மீ. தூரம் வரை மட்டுமே சென்று திரும்பும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் தேனீப் பெட்டிகளை 1,500-2,000 அடிக்குள் பூக்கள் இருக்கும் இடங்களில் வைத்தால், பயன் மிகுந்த வகையில் தேனை உற்பத்தி செய்ய முடியும்.

பெட்டிகளை வைக்கும் போது, குறைந்தது பத்து சதம் பூக்கள் மலர்ந்து, மதுரம் மற்றும் மகரந்தம் தரும் நிலையில் இருக்க வேண்டும். சூப்பர் அறைகளில் எல்லா அடைகளும் தேனீக்கள் நிறைந்து இருக்க வேண்டும்.

தேனீக் கூட்டங்களைப் பெறும் வழிகள்

தேனீக்கள் வெளியே வரும் அதிகாலைப் பொழுதில் துணிப்பையைப் பயன்படுத்திக் கூட்டத்தைச் சேகரிக்கலாம். இராணித் தேனீயை அடையாளம் கண்டு சேகரிப்பது மிகவும் முக்கியமாகும்.

பிடித்த தேனீக்களை அந்த இடத்திலேயே மாலை வரை வைத்திருப்பது அவசியமாகும். ஏனெனில், வெளியே சென்றுள்ள தேனீக்கள் மாலையில் தான் அந்த இடத்துக்குத் திரும்பி வரும். தேனீப் பெட்டியைப் பயன்படுத்தும் முன், சிறியளவில் புகையை இடுவதன் மூலம் தேனீக்களைக் கட்டுப்படுத்த இயலும்.

இயற்கை நிலையில் பொந்துகளில் உள்ள தேன் அடையைக் கண்டதும், பொந்தினைப் பெரிதாக்கி, கத்தி அல்லது கையால் அடையைப் பிரித்து எடுத்து, மேல், கீழ்ப்பகுதி மாறாமல், தேனீச் சட்டத்தில் வாழை நாரால் கட்டலாம்.

கூட்டைப் பிரிப்பதற்கு முன், சிறியளவில் புகையைச் செலுத்துவது நலம். கூட்டை அகற்றிய பிறகு, பெட்டியை அதே இடத்தில் மாலை வரை வைத்திருந்து, பிறகு ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி வைப்பது நல்லது.

பிரிந்து செல்லும் தேனீக் கூட்டங்களை எளிதில் பிடித்து, தேனீப் பெட்டிகளில் அடைக்கலாம். இவற்றுக்கு, அடை அஸ்திவாரத் தாள் பொருத்தப்பட்ட சட்டங்களையும், சர்க்கரைப் பாகை உணவாகவும் கொடுத்து விரைவில் அடைகளைக் கட்டச் செய்யலாம்.

பிரிந்து செல்லும் தேனீக் கூட்டங்களை, காலித் தேனீப் பெட்டியின் உட்புறத்தில் உருக்கிய தேன் மெழுகைத் தடவி வைத்து ஈர்த்தும் பிடிக்கலாம். தேனீ வளர்ப்போரிடம் இருந்தும், அரசு தேன் நாற்றங்கால்களில் இருந்தும், தேனீக் கூட்டங்களைப் பெற்றுத் தேனீ வளர்ப்பைத் தொடங்கலாம்.

இருவேறு தேனீக் கூட்டங்களை இணைத்து வளர்த்தல்

அதிகளவில் தேனை எடுப்பதற்கு, தேனீக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். பெட்டியைத் திறந்து பார்க்கும் போது, தேனீ அறை முழுவதும் தேனீக்கள் நிறைந்திருக்க வேண்டும்.

தேனீக்கள் குறைவாக உள்ள பெட்டியிலிருந்து குறுகிய காலத்தில் தேனை எடுக்க இயலாது. இந்நிலையில், தேனீக்களை அதிகமாக்க, இரண்டு தேனீக் கூட்டங்களை இணைப்பது அவசியம்.

தேனீக்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி வாசனை உண்டு. எனவே, எந்தப் பெட்டியில் இராணித்தேனீயின் நடவடிக்கை நன்றாக உள்ளதோ, அந்தப் பெட்டியின் புழு அறைக்கு மேலே காகிதத்தைப் பரப்பி வைத்து, மாலை வேளையில், சேர்க்க வேண்டிய புழு அறையை எடுத்து, காகிதத்தின் மேலே வைத்து மேல் மூடியிட்டு மூடிவிட வேண்டும்.

ஓரிரு நாட்களில் இரண்டு புழு அறைகளுக்கு இடைப்பட்ட காகிதத்தை, தேனீக்களே நீக்கி விட்டுத் தாமாகவே இணைந்து விடும்.

பெட்டிகளைச் சேர்ப்பதற்கு முன், சிறியளவில் புகையை இட்டால், இருவேறு குடும்பங்கள் இணைவதற்கு ஏதுவாகும். காகிதம் இல்லாமல் புகையை மட்டுமே பயன்படுத்தியும் இரண்டு கூட்டங்களை இணைக்க முடியும் என்றாலும், காகிதத்தைப் பரப்பி வைத்து, தேனீக்களைத் தாமாகவே இணைய வைப்பதே சாலச் சிறந்தது.

தேனீக் குடும்பங்களை உற்பத்தி செய்யும் முறை

இயற்கை முறை 1: அதிகமாகத் தேனீக்கள் உள்ள பெட்டிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதிகமாக மகசூல் அளித்த பெட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நோயற்ற, நேர்த்தியான தேனீக் குடும்பமாக இருக்க வேண்டும். இராணித்தேனீ சீராக முட்டையிடும் தன்மையில் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுத்த பெட்டியில் நவம்பர் மாதத்தில் சூப்பர் அறைகளை அகற்றி விட்டு, புழு அறையை மூடி விட வேண்டும். அதிகளவில் தேனீக்கள் இருப்பதால் இட நெருக்கடி காரணமாக இராணித்தேனீ அறைகள் (2-7 அறைகள்) தானாகவே 3-4 நாட்களில் உருவாகத் தொடங்கி விடும். சிறியளவில் உள்ள இராணித்தேனீ அறைகளைக் கிள்ளிவிட வேண்டும். இராணித் தேனீயின் அறைகள் காம்பு வடிவில் இருக்கும்.

அறைகள் தோன்றி 10-12 நாட்களில் இராணித்தேனீ வெளிவந்து விடும். அது வெளியே வருமுன் பெட்டிகளைப் பிரிப்பது அவசியம். காம்புகளின் அடிப்பகுதி, கருமையாக மாறுவது, இராணித்தேனீ சில மணி நேரத்தில் வெளி வருவதை உணர்த்தும் அறிகுறியாகும்.

வெளிவரத் தயாராக இருக்கும் இராணித்தேனீ அறைகள் சேதமாகாமல், அறைகளுக்கு மேல் ஒரு செ.மீ. இடைவெளி விட்டு சதுர வடிவில் வெட்டியெடுத்த பிறகு, வெற்றுத் தீப்பெட்டியில் பஞ்சை வைத்து, அதனுள் இராணிக்கூட்டைப் பத்திரமாக வைக்க வேண்டும். எறும்புகள் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புழு அறை மட்டுமுள்ள புதிய தேன் பெட்டி ஒன்றைச் சுத்தமாகத் துடைத்து, சிறிது புகையிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இப்பெட்டியில் முட்டை, புழு, தேன், மகரந்தம் மட்டுமின்றி, தேனீக்களும் இருக்குமாறு மூன்று சட்டங்களைத் தேர்வு செய்து, தாய்ப் பெட்டியிலிருந்து எடுத்து வைக்க வேண்டும். மூடியை நன்கு பொருத்திய பிறகு, சுமார் ஒரு கி.மீ. தொலைவில் வைக்க வேண்டும்.

மீண்டும் பழைய இடத்துக்கே வந்து, தீப்பெட்டியில் உள்ள இராணித்தேனீக் கூட்டைப் பத்திரமாக, புதிய பெட்டிக்குள் இரண்டு புழு அறை சட்டங்களுக்கு இடையில் பொருத்தி விட வேண்டும்.

புதிய இராணித் தேனீயைக் கொடுப்பதற்கும், பெட்டிகளைத் தாய்ப் பெட்டியிலிருந்து பிரித்ததற்குமான காலம் குறைந்தது ஒரு மணி நேரமாவது இருப்பின், வெளிவரும் புதிய இராணித் தேனீயை இதர தேனீக்கள் எளிதில் ஏற்றுக் கொள்ளும்.

இயற்கை முறை 2: மேலே கூறியவாறு புதிய பெட்டிகளை ஒரு கி.மீ. தொலைவில் பிரித்து வைத்து, இராணித்தேனீக் கூட்டைக் கொடுக்காமலே உற்பத்தி செய்யலாம்.

இம்முறையில், ஒருநாள் வயதுள்ள புழுக்கள் (24-48 மணி நேரம்) புதிய பெட்டியின் புழு அறைகளில் இருப்பது முக்கியம். இம்முறையில், ஒருநாள் வயதுள்ள புழுவானது இராணித் தேனீயாக மாற்றப்படும். ஆனால், இம்முறையில் வெற்றி வாய்ப்புக் குறைவு.

செயற்கை முறையில் இராணித்தேனீ அறை

அச்சுத் தயாரிப்பு: இம்முறையில் முதலில் செயற்கையாக இராணித்தேனீ அறையைத் தயாரிக்க வேண்டும். தேன் மெழுகை இளக்கி, இராணித்தேனீ அறையை ஒத்த வடிவிலான குச்சியை மூன்று முறை முக்கியெடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் முக்கி எடுக்கும் போது 0.2 செ.மீ. தடிமன் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குச்சிகளை முதன் முதலில் மெழுகில் முக்குவதற்கு முன், நீரில் நனைத்துக் கொள்ள வேண்டும். இராணித்தேனீ அச்சுத் தயாரிப்பில் நிபுணத்துவம் பெறுவது அவசியம். இரண்டாவதாக மெழுகை உருக்கி ஊற்றி 1-15 ச.செ.மீ. அளவிலான துண்டுகளாகத் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, காலியாக உள்ள சட்டங்களைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு ஒரு சொட்டு மெழுகை இட்டுத் தயாரித்து வைத்த சதுர வடிவ மெழுகு அச்சுகளை ஒட்ட வேண்டும்.

பிறகு, அந்த அச்சின் மேற்பரப்பில் மெழுகைப் பயன்படுத்தி இராணித்தேனீக் குமிழ்களைப் (அறை) பொருத்த வேண்டும். அதாவது, குறைந்தது 1 செ.மீ. இடைவெளியில் பல குப்பிகளைப் பொருத்தி, இராணித்தேனீ உற்பத்தியை மேற்கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்ட தாய்ப் பெட்டியில் இருந்து இராணித் தேனீயை அகற்றிய பிறகு, ஒருநாள் வயதுள்ள புழுக்களை மெல்லிய தூரிகை அல்லது இதற்கென உள்ள ஊசியின் மூலம், செயற்கை முறையில் தயாராக உள்ள இராணித் தேனீக் குமிழுக்குள், ஒரு துளி அரச கூழைச் (Royal jelly) செலுத்திய பிறகு இட வேண்டும்.

ஒருமணி நேரம் கழித்து, செயற்கை இராணித் தேனீக் குமிழ்களை, இரண்டு புழு அறைகளுக்கு இடையில் வைக்க வேண்டும்.

ஒரு வாரம் கழித்துப் பார்த்தால், இராணித்தேனீ புழு மூடப்பட்டு இருக்கும். 10-11 நாளில் இராணித்தேனீ வெளிவரும் அறிகுறிகள் தென்படும். காம்பின் அடிப்பாகம் கருத்ததும், ஒவ்வொரு இராணித்தேனீக் கூண்டையும் அடித்தள மெழுகோடு சட்டத்திலிருந்து பிரித்து, இயற்கை முறையில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு கி.மீ. தொலைவில் புதிய பெட்டிகளை வைத்து, தேனீக் குடும்பங்களைச் சிறப்பாகப் பெருக்கலாம்.


முனைவர் ஜே.இராஜாங்கம், முனைவர் சே.சரஸ்வதி, முனைவர் செ.சுகன்யா கண்ணா, முனைவர் சு.முத்துராமலிங்கம், முனைவர் மு.உமா மகேஸ்வரி,

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks