My page - topic 1, topic 2, topic 3

சத்துள்ள சோயாவைப் பயன்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர்.

சோயாவில் புரதம் அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளன. தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து, பால், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தை விடக் குறைவாகவே உள்ளது. ஆனால், இதற்கு மாறாகச் சோயாவிலிருந்து கிடைக்கும் புரதம், அசைவப் புரதத்துக்கு நிகராக உள்ளது. எனவே, சோயா மொச்சை முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இந்தச் சோயாவில் இருந்து என்னென்ன உணவுகளைத் தயாரிக்கலாம் என்பதைப் பற்றி இங்கே காணலாம்.

சோயா மொச்சை, பயறு வகைகளில் முக்கியமானது. பயறு வகைகள் புரதச்சத்து நிறைந்தவை. ஆனால், சோயாவில் காணப்படும் புரதம் இன்னும் அதிகம். மற்ற பயறுகளில் உள்ள புரதம் 25 சதம். சோயாவிலுள்ள புரதம் 40 சதம். சோயாவில் உள்ள குறை, இதில், டிரிப்ஸின் இன்ஹிப்டர், ஹீமக்குளுட்டினின் என்னும் வேண்டாத பொருள்கள் இருப்பது தான்.

இவை, சோயாவிலுள்ள புரதம் மற்றும் இதரச் சத்துகள் முழுவதையும் நம் உடலுக்குக் கிடைக்க விடாமல் தடுத்து, செரிக்கும் சக்தியைக் குறைக்கின்றன. ஆனால், சோயாவைப் பதப்படுத்தி உண்ணும் போது, வேண்டாத தன்மைகள் நீங்கி விடுகின்றன.

எனவே, சோயாவை முளைக் கட்டுதல், நொதித்தல், ஊற வைத்தல், பொரித்தல், அதிக வெப்பத்தில் பதப்படுத்துதல், அதாவது, ஆட்டோகிளேவ் முறையில் 14 பௌன்ட் அழுத்தத்தில் 30 நிமிடம் வேக வைத்தல் போன்ற முறைகளில் பதப்படுத்தி உணவுக்குப் பயன்படுத்தலாம்.

நூறு கிராம் சோயாவில் உள்ள சத்துகள்

புரதம் 43.2 கிராம், சுண்ணாம்பு 240 மி.கி., மாவுச்சத்து 20.9 கிராம், பாஸ்பரஸ் 690 மி.கி., நார்ச்சத்து 3.7 கிராம், இரும்புச்சத்து 10.4 மி.கி., கொழுப்பு 19.5 கிராம், கரோட்டின் 426 மை.கிராம், தயாமின் 0.73 மி.கி., ஈரப்பதம் 8.1 கிராம், ரைபோபிளேவின் 0.39 மி.கி., நியாசின் 3.2 மி.கி.

சோயாவில் 17-20 சதம் வரை எண்ணெய்ச் சத்து உள்ளது. இதில் நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. உயிர்ச் சத்துகளான இ, கே, டி மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவையும் அதிகமாக உள்ளன. எண்ணெய் எடுக்கப்பட்ட சோயா மாவில் தரமான புரதம் 50 சதம், கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, உயிர்ச்சத்து பி போன்றவை நிறைந்துள்ளன. சோயாப் புரதத்தில் உடல் நலத்துக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் உள்ளன. சோயாப் புரதம் நன்கு செரிக்கும்.

சோயாவை உண்பதால் உண்டாகும் நன்மைகள்

மொத்தச் சோயா உற்பத்தியில் 85 சதம், எண்ணெய் மற்றும் எண்ணெய் நீக்கப்பட்ட மாவைத் தயாரிக்கவும், 10 சதம் விதைக்காகவும், 5 சதம் மட்டுமே நேரடி உணவுப் பொருளாகவும் பயன்படுகின்றன. கொலஸ்ட்ரால் மற்றும் குறைந்த அடர்வுள்ள கொழுப்புப் புரதங்களின் அளவைக் குறைத்து, நன்மை செய்யும் கொழுப்புப் புரதங்களின் அளவைக் கூட்டுவதன் மூலம், இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.

அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகின்றன. சுண்ணாம்புச் சத்து அதிகமாகக் கிரகிக்கப்படுவதால், கால்சிய இழப்புக் குறைகிறது. இதனால் எலும்புகள் வலுவடைகின்றன. குறைந்தளவு மாவுச்சத்தும், அதிகளவு நார்ச்சத்தும் சோயாவில் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த புரதமாக உள்ளது. பால் ஒவ்வாமை உடையவர்கள், சோயாவைச் சிறந்த மாற்றுணவாகக் கொள்ளலாம்.

அன்றாட உணவில் சோயாவைப் பயன்படுத்தும் முறை

எண்ணெய் எடுக்கப்பட்ட சோயாமாவைச் சப்பாத்திக்கான கோதுமை மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம். சோயாமாவில் தயாரிக்கப்படும் மீல்மேக்கர் என்னும் பொருளைச் சைவப் பிரியாணியைத் தயாரிக்கப் பயன்படுத்தலாம். முழுச் சோயாவை முளைக்கட்டி உடைத்துப் பருப்பாகப் பயன்படுத்தலாம். முழுச் சோயாவில் இருந்து, சோயாப் பால், தயிர், பாலாடைக் கட்டி போன்ற உணவுகளையும் தயாரிக்கலாம்.

வணிக நோக்கில் சோயாவைப் பயன்படுத்துதல்

சோயா மொச்சையை ஊற வைத்து அதிக வெப்பமுள்ள மணலில் பொரித்து, தோலை நீக்கி விட்டுப் பருப்பாக உடைத்து, கடலை உருண்டையைப் போன்ற உருண்டைகளைத் தயாரிக்கலாம். இப்படிப் பொரித்த சோயாவில் 35 கிராம் புரதமும், 345 கிலோ கலோரி சக்தியும் அடங்கியுள்ளன. இது, குறைந்த செலவில் தயாரிக்கக் கூடிய சத்துள்ள உணவாகும்.

சோயாமாவை வைத்து, அடுமனைப் பொருள்களாகிய, பிஸ்கட், பிரட், பன் மற்றும் நூடுல்ஸ், இடியாப்பம் போன்றவற்றைத் தயாரிக்கலாம். அடுமனைப் பொருள்கள் தயாரிப்பில் 20 சத சோயாமாவைச் சேர்த்து, உணவில் புரதத்தின் தரத்தை உயர்த்தலாம். அப்பளத் தயாரிப்பில், உளுந்து மாவுடன் 25 சதவீதச் சோயாமாவைச் சேர்த்து இலாபமடையலாம்.

சோயா மொச்சையை ஊறவைத்து முளைக்கட்டி, வணிக நோக்கிலான உணவுகளைத் தயாரிக்கலாம். சோயாப்பாலைத் தயாரித்து நொதிக்க வைத்து, பழ வாசனைகளைச் சேர்த்து, யோகர்ட் மற்றும் ஸ்ரீரிகந்த்தைத் தயாரித்தால், சோயா மொச்சையின் வாசம் தெரிவதில்லை.

சோயாப் பால்

தயாரிப்பு முறை: ஒரு கிலோ சோயாவை 8 முதல் 12 மணிநேரம் வரை ஊற வைத்து நன்றாக அரைக்க வேண்டும். பிறகு, இந்த மாவை 100 சென்டிகிரேட் வெப்ப நிலையில், பத்து நிமிடம் வைத்து எடுத்து, குளிர வைத்து வடிகட்ட வேண்டும். இப்படித் தயாரித்த சோயாப் பாலில் பாதாம், ரோஸ்மில்க் எஸன்ஸ் போன்ற வாசனைப் பொருள்களைக் கலந்து பருகலாம். அல்லது சம அளவில் பசும்பாலைக் கலந்தும் பருகலாம்.

சோயாப் பன்னீர்

தேவையான பொருள்கள்: சோயாப்பால் 1 லிட்டர், எலுமிச்சைச் சாறு 60 மில்லி.

தயாரிப்பு முறை: சோயாவை 8 முதல் 12 மணிநேரம் வரை ஊற வைத்து அரைக்க வேண்டும். பிறகு, இந்த மாவை 10 நிமிடம் அடுப்பில் கொதிக்க வைத்த பின், குளிர வைத்து வடிகட்ட வேண்டும். ஆறிய சோயாப்பாலில் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து மறுபடியும் கொதிக்கவிட வேண்டும்.

அப்போது, பால் திரிந்து அதிலுள்ள கட்டியான பொருள் மட்டும் பிரிந்து வரும். இந்தப் பாலை மல் துணியில் வடிகட்டி இரண்டு மணிநேரம் வைக்க வேண்டும். பிறகு, தேவையான அளவுகளில் வெட்டி உணவுக்குப் பயன்படுத்தலாம்.

இப்படி, சோயாவைப் பயன்படுத்தி, சோயாப்பொரி, சோயா கலந்த பருப்புப்பொடி, இட்லிப்பொடி, பக்கோடா, முறுக்குப் போன்றவற்றைத் தயாரிக்கலாம். இதனால் சோயாவில் உள்ள தரமிக்க புரதத்தை முழுமையாகப் பெறலாம்.


PB_Thenmozhi

முனைவர் பெ.க.தேன்மொழி, முனைவர் சு.செந்தூர் குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை – 630 206.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks