முன் குளிரூட்டும் முறை என்பது, அறுவடை செய்த விளைபொருள்கள் பாதுகாப்பில் பயன்படும் முக்கியத் தொழில் நுட்பமாகும். இது, குளிர் சங்கிலியின் முதல் செயலாகும். பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் வீணாகக் கூடியவை என்பதால், அவற்றைப் பாதுகாக்க, முன் குளிரூட்டல் மிகவும் அவசியம். அதற்கு இந்தத் தொழில் நுட்பம் உதவும்.
புதிதாக அறுவடை செய்த பொருள்களின் வெப்ப நிலையை விரைவாகக் குறைக்கவும் மற்றும் அறுவடைக்குப் பிறகு உடனடியாகக் கெட்டுப் போவதைக் தடுத்து அந்தப் பொருள்களின் ஆயுட்காலத்தைக் கூட்டவும் செய்கிறது. குளிர்ப்பதன முறையில் விளைபொருள்கள் முன் குளிரூட்டம் செய்யப்பட்டாலும், இந்த முன் குளிரூட்டல் முறை, குளிர்ப்பதனச் சேமிப்பிலிருந்து வேறுபடுகிறது. குளிர்ப்பதனச் சேமிப்பகத்தில், முன்பே தீர்மானிக்கப்பட்ட குறைந்த வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.
குளிர்ப்பதனக் கிடங்கு வசதியை, முன்கூட்டிக் குளிரூட்டும் வசதியாக இரட்டிப்பாக்க வேண்டுமெனில், அதிகக் குளிர்ப்பதனத் திறன் தேவைப்படுவதோடு, விளைபொருள்களை முன்கூட்டியே குளிரூட்டுவதற்கும் கையாளுவதற்கும் தகுந்த ஏற்பாடுகளும் தேவை. முன் குளிரூட்டும் முறையின் முக்கியப் பயனாளிகள் விவசாயிகள் தான், ஏனெனில், அது விளைபொருள்களைத் தரம் குறையாமல், மிகச் சரியான நேரத்தில், நல்ல விலைக்கு விற்க வழி வகுக்கிறது.
முறையான முன் குளிரூட்டலின் நன்மைகள்
நீரிழப்பைப் தடுக்கிறது. எத்திலீன் உற்பத்தியைக் குறைக்கிறது. சிதைவை உருவாக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. நொதி மற்றும் சுவாசச் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது.
முன் குளிரூட்டும் முன் கருத்தில் கொள்ள வேண்டியவை
அறுவடையின் போது, குறிப்பாக, வெதுவெதுப்பான மாதங்களில், காற்றின் வெப்பநிலை, குளிரூட்டும் செயல் திறனைப் பாதிக்கச் செய்கிறது. அறுவடைக்கும் முன் குளிரூட்டலுக்கும் இடையே உள்ள நீண்ட இடைவெளி, சீரழிவை துரிதப்படுத்துகிறது, எனவே, இரண்டுக்கும் இடையேயான கால அளவு முக்கியமானது. விரைவில் கெட்டுப் போகக்கூடிய பொருள்களுக்கு, உடனடியாக முன் குளிர்ச்சித் தேவைப்படுகிறது.
பயிர் மற்றும் குளிரூட்டும் ஊடகத்துக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாட்டால், முன் குளிரூட்டும் செயல் திறன் பாதிக்கப்படும். ஒரு பயிரின் வெப்ப நிலையைக் குறைக்கும் திறன், குளிரூட்டும் ஊடகத்தின் தன்மை மற்றும் வேகத்தைப் பொறுத்தது. நீர்ப்புகா, காற்றோட்டம் உள்ள பெட்டிகளைப் பயன்படுத்துவது அல்லது பேக்கேஜிங் பொருள்களை மெழுகுடன் சிகிச்சை செய்வது, முறையான காற்றுச் சுழற்சியை எளிதாக்கவும், குளிர்ச்சிக்கு முந்தைய செயல் திறனை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.
முன் குளிரூட்டல் வகைகள்
அறைக் குளிரூட்டல்: இந்த முறையானது, விளைபொருளை குளிர்ந்த அறையில் அதன் தேவையான அளவுக்கு குறைக்கும் வரை வைப்பதாகும். மற்ற முறைகளுடன் ஒப்பிடும் போது இது மெதுவாக இருந்தாலும், ஆற்றல் மிக்கது. ஆப்பிள், பூசணிக்காய், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்றவற்றுக்கு, அறைக் குளிரூட்டல் ஏற்றது.
காற்றின் மூலம் குளிரூட்டல்: காற்றின் மூலம் முன்குளிரூட்டும் முறையின் செயல் திறனை அதிகரிக்க, காற்றாடிகள் மற்றும் முறையான தடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், குளிர்ந்த காற்று விளைபொருள்கள் வழியாக கடந்து செல்வதால், வெப்பம் குறைந்து பொருள்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. இம்முறை, நீரின் மூலம் குளிரூட்டல் முறையை விட 4-5 மடங்கு நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால், வெற்றிடக் குளிரூட்டல் முறையை விட ஐந்தில் ஒரு பங்கு நேரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
நீரின் மூலம் குளிரூட்டல்: இம்முறை, ஆங்கிலத்தில் ஹைட்ரோ கூலிங் எனப்படுகிறது. அனைத்து முறைகளிலும் ஹைட்ரோ கூலிங் மிகவும் திறமையான ஒன்றாகும். அறுவடை செய்த பொருள்கள், தொட்டி போன்ற அமைப்பில் தேக்கி வைத்துள்ள நீரில் மூழ்க வைக்கப்படுவதன் மூலம் அல்லது நகரும் கன்வேயரில் தெளிப்பான் மூலம் குளிர்விக்கப்படும். ஸ்வீட்கார்ன், பீச் அல்லது கேண்டலூப் போன்ற பருமனான பொருள்களுக்கு, ஹைட்ரோ கூலிங் முறை சிறந்தது.
வெற்றிடக் குளிரூட்டல் முறை: இம்முறையில், காற்றுப்புகாத கொள்கலனில் விளைபொருள்கள் அடைத்து வைக்கப்படும். கொள்கலனில் உள்ள ஈரப்பதமும் காற்றும் உறிஞ்சிப்பட்டு வெற்றிடமாக்கப்படும். இந்த முறையில், காற்றின் வெப்பநிலையை, குறிப்பிட்ட வெப்பநிலை வரை மட்டுமே குறைக்கலாம். ஒரு பம்பைப் பயன்படுத்தி, காற்றை அகற்றுவதன் மூலம் விரைவாகக் குளிர்விக்கும். இதனால் மேற்பரப்பில் உள்ள நீர் விரைவாக ஆவியாகும்.
இம்முறை பயனுள்ளதாக இருந்தாலும், வெப்ப நிலையில் ஒவ்வொரு 5-6 டிகிரி செல்சியஸ் குறைப்புக்கும் பயிர் எடை 1 சதம் குறைய நேரிடும். வெற்றிட அறைகளின் அளவு, மிகப் பெரியது முதல் வயலுக்கு எடுத்துச் செல்லக்கூடிய சிறிய அலகுகள் வரை மாறுபடும். இம்முறை, இலை, கீரைகள் போன்ற அதிக மேற்பரப்பு மற்றும் தொகுதி விகிதத்தைக் கொண்ட, லெட்டூஸ் போன்ற விளைபொருள்களுக்கு ஏற்றது.
பனிக் குளிரூட்டல்: ஐஸ் கூலிங் என்பது பழமையான குளிரூட்டும் முறைகளில் ஒன்றாகும். ஐஸ் வாட்டரை குழம்பு நிலைக்கு மாற்றி, பேக்கேஜிங்கில் செலுத்துவதன் மூலம் நேரடியாகக் குளிர்விக்கும். இது, அஸ்பாரகஸ், ப்ரோக்கோலி, ஸ்வீட்கார்ன் போன்ற காய்கறிகளுக்கு ஏற்றது. ஐஸ் பேக்கிங் செய்ததும், அவற்றை, குளிரூட்டப்பட்ட சேமிப்பு அலகு அல்லது போக்குவரத்து வாகனத்தில் வைக்க வேண்டும். பனி உருகும் போது, பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களைச் சுற்றி நீர்க்கசிவு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கொள்கலன்கள் வாட்டர்புரூப்பாக இருத்தல் அவசியம்.
பனிக் குளிரூட்டல் முறைக்கான பொது விதி என்னவெனில், ஒரு விளைபொருளை 95 முதல் 35 பாரன்ஹீட் வரை குளிர்விக்கத் தேவைப்படும் பனியின் எடை, உற்பத்திப் பொருளின் எடையில் 38%க்குச் சமமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பேக் செய்யப்படும் அட்டைப் பெட்டிகள் இந்தளவு பனிக்கட்டியைச் சேர்க்கப் போதுமான இட வசதியுடன் இருத்தல் அவசியம். குடிநீரிலிருந்து தயாரிக்கப்படும் தரமான பனிக்கட்டிகளை மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது.
முனைவர் வி.சங்கீதா, ச.கோகிலவாணி, முனைவர் வெ.எ.நேதாஜி மாரியப்பன், ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் மையம், வாலிகண்டபுரம், பெரம்பலூர்.
சந்தேகமா? கேளுங்கள்!