அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு வழங்குவதில், மீன் வளத்துக்கும் முக்கியப் பங்குண்டு. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புரத உற்பத்தியில் மீன் வளத்தின் பங்கு 50% க்கும் கூடுதலாக வளர்ந்து உள்ளது.
பண்ணைக் குளத்தில் அதிக மீன் உற்பத்தி, உணவு, நோய் நிர்வாகம் ஆகியவற்றை, நீர்த் தரக் காரணிகள் தீர்மானிக்கின்றன. குளத்தில் உள்ள மீன்களின் வளர்ச்சியும் நலமும், நீரின் தன்மையைப் பொறுத்தே அமைகின்றன. அதாவது, மீன்களின் வளர்ச்சியில், நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குளத்தின் நீர்த் தரக் காரணிகளான, வெப்பநிலை, உயிர்வளி, நீரின் கலங்கல் தன்மை, கடினத் தன்மை, கார அமில நிலை, அம்மோனியா, நைட்ரைட், ஒளி ஊடுருவல் ஆகியவற்றை அறிந்து, அதற்கேற்ப, மீன் குளங்களைப் பராமரித்து வந்தால் உறுதியாக அதிக மகசூலைப் பெறலாம். இவ்வகையில், மீன் குளத்தில் ஏற்படும் பொதுவான சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைப் பற்றிப் பார்க்கலாம்.
வெப்பநிலை
மீன், சூழல் வெப்பக் குருதி விலங்காகும். அதாவது, குளத்தின் வெப்பநிலை மாறினால், மீனின் உடல் வெப்பமும் மாறும். அதனால், மீனின் உடலியக்கக் காரணிகள் பெரிதும் மாறுபடும்.
கெண்டை மீன் வளர்ப்புக் குளங்களில், 24-30 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்க வேண்டும். உவர்நீர் மீன் வளர்ப்புக் குளங்களில், 25-32 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்க வேண்டும்.
நீரின் வெப்பநிலை உயரும் போது, நீர்த் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சுவாச விகிதம் அதிகமாகும். அதனால், குளத்தில் உயிர்வளிக் குறை ஏற்படுவதுடன், அம்மோனியா, நைட்ரைட் போன்ற விஷ வாயுக்களின் அளவும் கூடும். எனவே, வெய்யில் காலத்தில் குளத்தின் வெப்ப நிலையைச் சரியான அளவில் வைத்திருக்க வேண்டும்.
தீர்வுகள்: குளக்கரையில், வாழை, தீவனப் பயிர்கள், கறிவேப்பிலை, பழ மரங்கள் ஆகியவற்றை வளர்த்து, வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆக்ஸிஜன் ஏற்ற எந்திரங்களை இயக்கினால், நீர்ச் சுழற்சி ஏற்பட்டு, நீரின் வெப்பம் சீராகும்.
அல்லது குளத்தின் நீரில் பாதியை மாற்றலாம். அப்போது, நீரானது ஏதாவது ஒரு கல் மீது பட்டுத் தெறித்து விழுமாறு செய்ய வேண்டும். இதனால், வெப்பம் குறைவதுடன், உயிர்வளியும் கூடும்.
குறைவாக நீருள்ள காலத்தில், ஓர் இறைப்பான் மூலம் குளத்து நீரை இறைத்து, அதே குளத்தில் விட்டால் வெப்பம் கட்டுப்படும்.
கலங்கல் தன்மை
குளத்தில் சூரியவொளி சரியான அளவில் ஊடுருவும் போது, நச்சு வாயுக்கள் உருவாவது தடுக்கப்படும். குளத்தில் உள்ள மிதவை நுண்ணுயிர்கள், சேறு, கனிமக் கழிவுகள் ஆகியன சிதைவதால் கலங்கல் தன்மை ஏற்படுகிறது.
குளத்தில் இறங்கி உள்ளங்கை தெரிவதைப் போலக் கையைக் கொண்டு செல்லும் போது, உள்ளங்கை மறையும் ஆழம் தான் நீரின் கலங்கல் தன்மையைக் குறிக்கும்.
பொதுவாக, ஓரடி ஆழம் வரை உள்ளங்கை தெரிய வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் கலங்கல் தன்மை அதிகமாகும். நீரின் மொத்த ஆழத்தில், முதல் 30-40 செ.மீ. தெளிவாக இருந்தால், மீன் மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.
தீர்வு: கலங்கல் அதிகமாக இருக்கும் போது, சுண்ணாம்பு மற்றும் ஜிப்சத்தை 200 கி.கி./100 மீ.2 அளவில் தெளிக்க வேண்டும். இதனால், கலங்கல் தன்மை குறைந்து விடும்.
நீரின் நிறம்
நீரின் நிறத்தை வைத்துக் குளத்தின் தரத்தை அறிந்து கொள்ளலாம். குளத்து நீர், நீலப்பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். கரும் பச்சை அல்லது பழுப்பு நிறமாக இருப்பது, மிதவை நுண்ணுயிர்கள் அதிகளவில் இருப்பதைக் குறிக்கும்.
இந்தப் பாசிகள் நிறைய இருப்பதால் மீன்களுக்குப் பாதிப்பு ஏதும் இல்லை. எனினும், நீரில் சத்து அதிகமாக உள்ளதை இதன் மூலம் அறியலாம். மீன் குளத்தில் இறங்கும் போது, மண்ணிலிருந்து காற்றுக் குமிழ்கள் மற்றும் அழுகிய முட்டை வாசம் வந்தால், ஆழ்குளத்தில் உயிர்வளிப் பற்றாக் குறையால், நைட்ரஜன் சல்பைட் உருவாகிறது எனத் தெரிந்து கொள்ளலாம்.
தீர்வு: குளத்தின் அடியில் உயிர்வளிக் குறை ஏற்படுவதால், அம்மோனியா உருவாகிப் பாசி வளர்கிறது. ஆகவே, உயிர் வளியைக் கூட்ட வேண்டும். இதற்கு, குளத்து நீரில் பாதியை மாற்றலாம். அல்லது காற்றுப் புகுத்தியை அமைக்கலாம்.
கடினத்தன்மை
நீரின் கடினத் தன்மை என்பது, நீரிலுள்ள அலுமினியம், மக்னீசியம், ஹைட்ரஜன் ஆகிய அயனிகளால் தீர்மானிக்கப்படும். குளத்து நீரிலுள்ள கால்சியம், மக்னீசியம் ஆகியன, மீன்களின் எலும்பு மற்றும் செதில் உற்பத்திக்கு உதவுகின்றன.
கெண்டை மீன் குளத்தில் நீரின் கடினத் தன்மை, ஒரு லிட்டர் நீருக்கு 30-80 மி.கி. வீதம் இருக்க வேண்டும். கிணற்று நீர் அல்லது ஆழ்துளைக் கிணற்று நீரின் கடினத் தன்மை, ஒரு லிட்டர் நீருக்கு 200 மி.கி. வீதம் இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால், நீரிலுள்ள தாது அயனிகளால் ஏற்படும் கடினத் தன்மையைக் குறைப்பது கடினமாகும்.
தீர்வு: மழைக் காலத்தில் மழைநீர் நேரடியாகக் குளத்தில் சேரும் வசதியை ஏற்படுத்தலாம். அலங்கார மீன் பண்ணைகளில் நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்களை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
குளத்தில் உயிர்வளிக் குறைபாடு நிகழும் போது, உரம் மற்றும் சாணத்தை இடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆக்ஸிஜன் ஏற்றக் கருவிகள் மூலம் குளத்தில் உயிர்வளியைக் கூட்டலாம்.
பொதுவாக, அதிகாலையில் மீன்கள் மேலே வந்து நெடுநேரம் காற்றைச் சுவாசிப்பது, இரவில் உயிர்வளிக் குறைவாக இருப்பதை உணர்த்தும். இந்த நேரத்தில், நீரேற்று எந்திரம் மூலம் குளத்து நீரை, குளத்துக்கு உள்ளேயே பீய்ச்சி அடிக்கலாம்.
அம்மோனிய வாயு
இது, வீணாகும் தீவனம், மீன் கழிவு, இறந்த தாவர மிதவை நுண்ணுயிரிகள் சிதைவதால் ஏற்படும். அயனிகள் இல்லாத அம்மோனியா வாயு நச்சு மிக்கது. அயனியுடன் கூடிய அம்மோனியா வாயு நஞ்சற்றது.
ஒரு லிட்டர் நீரில் 0.1 மி.கி. வீதம் அம்மோனியா வாயு இருக்கும் போது, மீன்களின் செதில், நரம்பு மண்டலம், சிறுநீரகம் ஆகியன பாதிக்கப்படும்.
தீர்வு: ஆக்ஸிஜன் ஏற்றக் கருவியைப் பொருத்த வேண்டும். குளத்தில் புதிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அதிகளவில் மீன் இருப்பு மற்றும் அறுவடைக் காலத்தில், குளத்தில் அம்மோனியா அதிகமானால், சான்று பெற்ற புரோ பயோடிக்கை வாங்கிப் பயன்படுத்த, நல்ல பயன் கிடைக்கும். நீரானது குறைவாக இருக்கும் போது இந்த புரோபயோடிக்கைப் பயன்படுத்தலாம்.
நைட்ரைட்
இது, நைட்ரஜனேற்றம் மூலம் நைட்ரோ சோமோனஸ் பாக்டீரியாவால் உருவாகிறது. நைட்ரைட் என்பது, மீன்களின் இரத்த அணுக்களில் உள்ள இரும்பு மூலக்கூறில் மாற்றம் செய்து மெத்தியோ குளோபினாக மாறி விடுகிறது. இதனால், இரத்தம் முழுத் திறனுடன் உயிர்வளியை எடுத்துச் செல்வது தடைபடுகிறது.
எனவே, மீனின் செதில், நரம்பு மண்டலம், சிறுநீரகம், நுரையீரல் ஆகியன பாதிக்கப்படும். எனவே, குளத்தில் ஒரு லிட்டர் நீருக்கு 0.2 மி.கி. நைட்ரைட்டுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
தீர்வு: குளத்தில் அளவுக்கு அதிகமாக மீன்களை இருப்பு வைக்கக் கூடாது. மீன்கள் அதிகமாக இருந்தால் அறுவடை செய்து விட வேண்டும். ஆக்ஸிஜன் ஏற்றக் கருவியை இயக்க வேண்டும்.
குளத்து நீரை அவ்வப்போது அருகிலுள்ள அக்குவா ஒன் சென்டர் அல்லது நீர் ஆய்வகத்தில் சோதிக்க வேண்டும். நீர்த்தரச் சிக்கல்கள் பெரும்பாலும் கோடையில் தான் ஏற்படும். அப்போது குளத்தில் மீன்கள் இருந்தால், இத்தகைய ஆய்வுகளைச் செய்து நீரைத் தரமாக மாற்றுவதன் மூலம் மீன் மகசூலைக் கூட்டலாம்.
முனைவர் பா.இளங்கோவன், இணை இயக்குநர், நீர் மேலாண்மைப் பயிற்சி நிலையம், திருச்சி.
சந்தேகமா? கேளுங்கள்!