My page - topic 1, topic 2, topic 3

திமிங்கலம் மூலம் கிடைக்கும் ஆம்பர் கிரீஸ்!

ம்பர் கிரீஸ் என்பது, திமிங்கலத்தின் செரிமான மண்டலத்தில் இருந்து உருவாகும் ஒருவித மெழுகுத் தன்மையும், எரியும் குணமும் கொண்ட பொருளாகும். இது, கடலில் மிதக்கும் தங்கம் எனப் போற்றப்படுகிறது.

புதிதாக வெளியேறும் இப்பொருள் கெட்ட நாற்றத்துடன் இருக்கும். ஆனால், நாட்கள் ஆக ஆக நறுமணம் கொண்ட பொருளாக மாறும். இது, வாசனைப் பொருள்களில் நெடுநேரம் நறுமணத்தைத் தக்க வைக்கப் பயன்படுவதால், அதிக விலை மதிப்புள்ள பொருளாக விளங்குகிறது.

உருவாகும் விதம்

ஸ்பெர்ம் திமிங்கலத்தின் பித்த நாளங்களில் இருந்து, ஆம்பர் கிரீஸ் உருவாகிறது. பிறகு, இது திமிங்கல உடலிலிருந்து இயல்பாக வெளியேறிக் கடலில் மிதந்து, கரையோரங்களில் ஒதுங்குகிறது. சில நேரங்களில், இறந்து போன திமிங்கலங்களின் வயிற்றுப் பகுதியில் இருந்தும் எடுக்கப்படுகிறது.

தான் உண்ணும் கடினமான மற்றும் கூர்மையான பொருள்களை வெளியேற்றும் நோக்கில், இந்தப் பொருளை, திமிங்கலம் சுரப்பதாக அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஆம்பர் கிரீஸ் உருவாகப் பல ஆண்டுகள் ஆவதுடன், திமிங்கலத்தில் இருந்து வெளியாகி, ஆண்டுக் கணக்கில் கடலில் மிதந்து கரையோரத்தை அடைகிறது.

தென்னாப்பிரிக்கா, பிரேசில், மடகாஸ்கர், மாலத்தீவு, இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்கரைகளில் ஆம்பர் கிரீஸ் காணப்படுகிறது. பகாமாஸ் பகுதியில் இருந்து அதிகமாகக் கிடைத்து உள்ளது. அண்மையில் ஏமன் கடற்பகுதியில் இருந்து, 280 பவுண்ட் ஆம்பர் கிரீஸ் எடுக்கப்பட்டது.

பண்புகள்

ஒரு திமிங்கலம் 150 கிராமில் இருந்து 50 கிலோ வரை, ஆம்பர் கிரீஸை வெளியேற்றும். வெளியேறியதும் வெளிர் நிறம் மற்றும் கெட்ட வாடையுடன் இருக்கும். நாளடைவில், ஒளிச்சிதைவு மற்றும் ஆக்சிஜனேற்றம் காரணமாக, கறுப்பான மெழுகைப் போல மாறும்.

நாளான ஆம்பர் கிரீஸ் நறுமணம் மிக்கதாக இருக்கும். இந்த நிலையில், இது, 62 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், மஞ்சள் நிறக் கொழுப்பாக உருகும்; 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், வெள்ளை வாயுவாக மாறும்.

பயன்கள்

வாசனைப் பொருள்களைத் தயாரிக்க ஆம்பர் கிரீஸ் பயன்படுகிறது. மருத்துவ குணமிக்கதாக நம்பப்படுகிறது. பழங்காலத்தில், உணவு மற்றும் மது பானங்களில் பயன்பட்டு உள்ளது. காபியில் மணமூட்டியாக இருந்துள்ளது. ஐரோப்பாவில், தலைவலி, இருமல், வலிப்பு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தி உள்ளனர்.

திமிங்கலங்கள், 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அதிகளவில், எண்ணெய், எலும்பு மற்றும் ஆம்பர் கிரீசுக்காக அழிக்கப்பட்டதால், அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால், உலகின் பல்வேறு நாடுகள், திமிங்கலங்களைப் பிடிக்கவும், ஆம்பர் கிரீசை விற்கவும் தடை விதித்து உள்ளன.


த.சூர்யா, பா.சிவராமன், வெ.அலமேலு, இரா.ஷாலினி, ச.சுந்தர், உ.அரிசேகர், மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி – 628 008.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks