கடல் உணவிலுள்ள நுண் நெகிழிகளும் அவற்றின் விளைவுகளும்!

நுண் நெகிழி fish

ந்த உலகில் 1960களில் இருந்து, ஆண்டுதோறும் நெகிழி உற்பத்தியானது சுமார் 8.7% வீதம் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் எட்டு மில்லியன் மெட்ரிக் டன் நெகிழிகள் பெருங்கடல்களில் சேர்கின்றன.

மேலும், 5.25 டிரில்லியன் நெகிழித் துகள்கள் தற்போது கடல் மேற்பரப்பு நீரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 5 மி.மீ. அளவைவிடச் சிறிய நெகிழித் துகள்கள் நுண்நெகிழி என்று குறிப்பிடப்படும். அவை நச்சுத்தன்மை கொண்டவை.

மேலும், அவை வளர்ந்து வரும் ஆபத்தான அசுத்தங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. முன்பு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருளாக மட்டுமே கருதப்பட்ட நுண்நெகிழி, இப்போது உணவை மாசுபடுத்தும் பொருளாகக் கருதப்படுவதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடலில் நெகிழியின் மூலங்கள்

கடலில் நுண்நெகிழி இருப்பதற்கு இரண்டு முக்கிய ஆதாரங்கள் உள்ளன. அது, நிலங்களில் இருந்து மேற்பரப்பு ஓட்டங்கள் வழியாக அல்லது நெகிழிச் சிதைவின் மூலம் கடலில் சேர்கிறது. கடல்சார் நடவடிக்கைகள் மூலமும் கடல்களில் நெகிழி நுழைகிறது.

இதில், 80% நிலம் சார்ந்த மூலங்களில் இருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

கடலில் போடப்படும் குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் காற்று அல்லது அலைகள் மூலம் நெகிழியானது கடலில் கலக்கப்படுகிறது. நெகிழிச் சிதைவானது பாலிமரின் வகை, வானிலை, வெப்பநிலை, கதிர்வீச்சு மற்றும் கார அமிலத் தன்மை போன்ற காரணிகளைப் பொறுத்தது.

பெருங்கடலில் உள்ள நெகிழி வகைகள் மற்றும் வடிவங்கள்

கடலோரப் பகுதிகளின் வண்டலில் கண்டறியப்பட்ட பாலிமர்களின் ஆதிக்க வகைகள் பாலி எத்திலீன் (PE), பாலிப்ரோப்பிலீன் (PP), பாலிஸ்டிரின் (PS), பாலி எத்திலீன் டெரெப்தாலேட் (PET) மற்றும் பாலி அமைடு (PA) ஆகும். PE, PP, PA ஆகியன, ஆடைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களில், அதாவது, கயிறுகள், வலைகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுகின்றன.

கடலில் ஆதிக்கம் செலுத்தும் நெகிழியின் வடிவங்கள், துண்டுகள், படலங்கள் ஆகும். துகள்கள், மணிகள், கயிறுகள், நூல்கள், செதில்கள் போன்ற வடிவங்களைக் கொண்ட நெகிழிகள் குறைவாகவே உள்ளன.

உணவுச் சங்கிலியில் நுண் நெகிழிகள்

கடல் சூழலில் நுழையும் நுண் நெகிழியை, கடல் உயிரினங்கள் உண்ணுகின்றன. மிதவை வாழிகள், அரித்துண்ணிகள், முதுகெலும்பு இல்லாத சிறிய கடல் விலங்குகள் ஆகியன, நுண் நெகிழியை உணவெனத் தவறாகக் கருதி அதை உண்ணுகின்றன.

இந்த நெகிழி, இந்த உயிரினங்களின் செரிமானப் பாதை மற்றும் திசுக்களில் சேர்கிறது. இந்த நுண் நெகிழி, மற்ற பொருள்களைப் போல எளிதில் உடைவதில்லை.

எனவே, அது உயிரினத்தின் உடலில் நிலைத்திருக்கும். சிறிய கடல் உயிரினங்கள் நுண் நெகிழியை உண்பதால், அது, உணவுச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாறும். பெரிய மீன்கள், ஓட்டு மீன்கள் மற்றும் கடல் பாலூட்டிகள் உள்ளிட்ட வேட்டையாடும் உயரினங்கள்,

இந்த உயிர்க் குவிப்பு (பயோ அக்குமுலேசன்) அடைந்த உயிரினங்களை உண்பதால், உணவுச் சங்கிலியில் நுண் நெகிழி நுழைகிறது.

நுண் நெகிழி உயிர்க் குவிப்பானது உயிர்வழிப் பெருக்கத்துக்கு வழி வகுக்கும். வேட்டையாடும் பெரிய உயிரினங்கள், உயிர்க்குவிப்பு அடைந்த சிறிய உயிரினங்களை உண்பதால், அவற்றின் உடலில் நுண் நெகிழியின் அளவானது, சிறிய உயிரினங்களை விட அதிகமாக இருக்கும். இது, உயிர்வழிப் பெருக்கம் எனப்படும்.

மட்டி மீன்களில் நுண் நெகிழிகள்

மனித நுகர்வுக்காக விற்கப்படும் மட்டி, கணவாய் மற்றும் நண்டு வகைகளின் திசுக்களில் நுண் நெகிழி இருப்பது அறியப்பட்டுள்ளது. மட்டி மீன்களின் திசுக்களில் உள்ள நுண் நெகிழிகள் மனித நலத்தைப் பாதிக்கும் வாய்ப்புக் குறைவு என்றாலும், எதிர்காலத்தில் கடல் உணவுப் பாதுகாப்பில், சாத்தியமான அச்சுறுத்தலாக நுண் நெகிழி இருக்கலாம்.

மேலும், கடல் உணவு வணிகத்தால் நுண் நெகிழி நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சிப்பிகள் மற்றும் மட்டிகள் போன்ற அரித்துண்ணிகள் அதிகளவில் நுண் நெகிழியைத் திசுக்களில் குவிப்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில், அவை உணவுக்காக அதிகளவு நீரை வடிகட்டுகின்றன. இப்படி உண்ணும் போது நுண் நெகிழியும் அவற்றின் திசுக்களில் சேரும்.

நுண் நெகிழி சேர்ந்துள்ள மீன்களை உண்பதால், மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்த ஆய்வுகள் பெருமளவில் இல்லை.

கருவாட்டு மீன்களில் நுண்நெகிழி

நெத்திலி மற்றும் மத்தி மீன்கள் கருவாடாக மக்களால் உண்ணப்படுகின்றன. இம்மீன்களும் அரித்துண்ணி வகைகள் தான். இவை, கடல்நீரை வடிகட்டி அதிலுள்ள மிதவை உயிரிகளை உணவாகக் கொள்கின்றன. இதனால், இம்மீன்களின் உடல்களில் நுண் நெகிழி சேர்கிறது.

நெத்திலி மற்றும் மத்தி மீன்களின் உடல் முழுவதையும் மக்கள் உண்பதால், நுண் நெகிழி மனிதர்களின் உடல்களில் உயிர்வழிப் பெருக்கம் அடையும். ஆனால், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தகவல்கள் போதியளவில் இல்லை.

நுண் நெகிழிகளை மதிப்பிடுவதன் அவசியம்

குறிப்பாகக் கடலோரச் சமூகங்களுக்குக் கடல் உணவு, முக்கிய உணவு ஆதாரமாக இருப்பதால், நுண் நெகிழியால் ஏற்படும் ஆபத்துகளை மதிப்பிட வேண்டும். மீனை உண்பதன் மூலம் நுண் நெகிழியை உண்பதை மதிப்பிடுவது சிக்கலானது.

ஏனெனில், மீன்களில் காணப்படும் நுண் நெகிழித் துகள்கள் பெரும்பாலும் செரிமான மண்டலத்தில் காணப்படுகின்றன. செரிமான மண்டலம் நிராகரிக்கப்படுவதால், நுண் நெகிழிகளின் நேரடி வெளிப்பாடானது குறையும்.

மேலும், மீன் திசுக்களில் காணப்படும் நுண் நெகிழியைப் பற்றிய தகவல்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. நுண் நெகிழித் துகள்கள் பெரும்பாலும் மீன் குடலில் காணப்படுகின்றன. பொதுவாக நாம் மீன் குடல்களை உணவாகக் கொள்வதில்லை.

ஆனால், மட்டி, சிறிய இறால் மற்றும் சிறிய மீன்களான நெத்திலி, மத்தி ஆகியவற்றை முழுமையாக உண்கிறோம்.

எனவே, மீன்களின் செரிமானப் பாதையில் காணப்படும் நுண் நெகிழியின் மதிப்பீடு மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாகக் கடல் உணவுகள் மற்றும் பிற உணவுப் பொருள்களில் நுண் நெகிழியைக் கண்டறிதல் இன்னும் தொடக்க நிலையில் தான் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மீன்கள் மற்றும் அவற்றின் எலும்புகள், உள்ளுறுப்புகள்; கோழி, மீன்கள் போன்ற விலங்குகளின் தீவனங்களில் மூலப்பொருளாகப் பயன்படுவதால், கால்நடைத் தீவனப்பாதை வழியாக நுண்நெகிழி, மறைமுகமாக மனிதர்களை அடையும் வாய்ப்பும் உள்ளது.

நுண் நெகிழியால் மக்களுக்கு ஏற்படும் விளைவுகள்

நுண்நெகிழி சேர்ந்த மீன்களை உணவாகக் கொள்ளும் போது, அந்த நுண்நெகிழி மனிதர்களின் உடலை அடைகிறது. அது, இரைப்பைக் குழாயில் எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இது, செரிமானச் சிக்கலுக்கு வழி வகுக்கும்.

நுண்நெகிழி நச்சுத் தன்மைக்கும் வழிவகுக்கும். குறிப்பாக, நுண் துகள்கள், இரைப்பைக் குழாயில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்படலாம். இது, வீக்கத்தையும் மற்றும் திசுக்களுக்குச் சேதத்தையும் விளைவிக்கும்.

நுண் நெகிழியானது உடலிலுள்ள ஹார்மோன் அமைப்புகளைச் சீர்குலைத்து, இனப்பெருக்கம் மற்றும் பிற ஹார்மோன் செயல்களைப் பாதிக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நுண் நெகிழியிலுள்ள சில இரசாயனங்கள் மனிதர்களுக்குப் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என, சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது, கவலைக்குரியதாக இருந்தாலும், பெரும்பாலான ஆராய்ச்சிகள் இன்னும் தொடக்க நிலையில் தான் உள்ளன.

நுண்நெகிழி, கடல் உணவுச் சங்கிலியில் ஊடுருவியுள்ளது. சிறிய கடல் மீன்கள் பெரும்பாலும் முழுவதுமாக உண்பதால், நுண்நெகிழி வெளிப்பாட்டின் எதிர்பாராத ஆபத்து நுகர்வோர் மத்தியில் நிலவுகிறது.

நுண் நெகிழியுடன் தொடர்புள்ள ஆபத்துகளைக் குறைக்க, நெகிழி மாசுபாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். முறையான கழிவு நிர்வாக நடைமுறைகளைச் செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

மேலும், மனித நலத்தில் நுண் நெகிழியின் நேரடித் தாக்கம், சிக்கலான மற்றும் தொடர்ச்சியான விசாரணைப் பகுதியாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

கூடுதலாக, மனித நலத்தில் நுண் நெகிழியின் தாக்கங்களின் அளவை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கும், சிக்கலைத் தீர்ப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை உருவாக்கவும் கூடுதல் ஆராய்ச்சித் தேவைப்படுகிறது.


நுண் நெகிழி MASILAN

க.மாசிலன், வே.சந்தியா, நா.முரளிதரன், நிமிஷ் மோல் ஸ்டீபன், கோகுல் பிரசாந்த், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading