வெறிநாய்க்கடி தடுப்பூசியின் அவசியம்!

வெறிநாய் Rabies

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களில், குறிப்பாகச் செல்லப் பிராணியான நாயின் மூலம் பரவும் ரேபீஸ் எனப்படும் வெறிநோய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இறப்பது உறுதி. இந்தியாவில் ஆண்டுதோறும் 20,000 பேர் இந்நோயால் இறக்கின்றனர். அதாவது, உலகளவில் இந்நோயால் இறக்கும் நூறு மனிதர்களில், ஏறத்தாழ 35 பேர் இந்தியர்கள். உலகச் சுகாதார நிறுவன அறிக்கைப்படி, இந்தியாவில் அரைமணி நேரத்துக்கு ஒருவர் இந்நோயால் இறக்கிறார். இத்தகைய கொடிய நோயைப் பற்றி இங்கே காணலாம்.

வெறிநாய்க்கடி நோய்

ரேபீஸ் எனப்படும் வெறிநோய், இந்நோயால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சில் மூலம் மனிதர்களுக்குப் பரவும் கொடிய வைரஸ் நோயாகும். வெறிநாய்க்கடி நோய்க்கான அறிகுறிகள், மனித உடலில் எந்தப் பகுதியில் நாய் கடித்தது என்பதைப் பொறுத்து, இரண்டு வாரங்களில் தொடங்கி ஆறு மாதங்களில் வெளிப்படும். தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கடிபட்டிருந்தால், நோயின் தாக்கம் விரைவாக இருக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள், ஹைட்ரோபோபியா எனப்படும் நீரைக் கண்டு பயப்படும் தன்மையைப் பெற்றிருப்பார்கள். அதாவது, அவர்களுக்குத் தாகம் இருந்தாலும், அவர்களால் நீரைக் குடிக்க இயலாது. எனவே, அவர்கள் நீரைக் கண்டு வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

மேலும், அவர்கள் ஏரோபோபியா எனப்படும் காற்றை வெறுக்கும் தன்மையையும், போட்டோபோபியா எனப்படும் வெளிச்சத்தை வெறுக்கும் தன்மையையும் பெற்றிருப்பார்கள். நோயின் தாக்கம் அதிகமாகும் போது, நரம்பு மண்டலமும் மூளையும் பாதிக்கப்படுவதால் உயிரிழப்பு ஏற்படும். தகுந்த தடுப்பூசியைச் சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால், இந்நோயை முழுமையாகத் தடுக்க இயலும்.

வெறிநாய்க்கடி தடுப்பூசி

கால்நடைகளுக்காகக் கண்டறியப்பட்ட தடுப்பூசிகளில், வெறிநாய்க்கடி தடுப்பூசி முக்கியமானது. ஏனெனில், இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இறப்பது உறுதியென்றாலும், தடுப்பூசியைத் தக்க நேரத்தில் போட்டு விட்டால், முற்றிலும் இறப்பைத் தடுக்க முடியும். இந்தத் தடுப்பூசி, நாய் கடிப்பதற்கு முன்பு, நாய் கடித்த பின்பு என, இரண்டு முறைகளில் போடப்படுகிறது.

நாய் கடிப்பதற்கு முன்பு

நாய்களைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பவர்கள், நாய்களுக்குப் பயிற்சி அளிப்பவர்கள், கால்நடை மருத்துவர்கள், ஆய்வக உதவியாளர்கள் ஆகியோரை, இந்நோய் தாக்கும் வாய்ப்பு அதிகமென்பதால், இவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதைப் போல, குழந்தைகளுக்கும் இந்நோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நலம். இந்தத் தடுப்பூசி, தசையில் அல்லது தோலுக்கடியில் போடப்படுகிறது.

தசையில் போடப்படும் தடுப்பூசி: வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி 1 மி.லி. அல்லது 0.5 மி.லி. பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகையைப் பொறுத்து, தசையில் 0, 7, 21, 28 ஆகிய நாட்களில் போடப்பட வேண்டும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குக் கையிலும், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தொடையின் முன்பக்கப் பக்கவாட்டிலும் இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது. பொதுவாக, இத்தடுப்பூசி இடுப்புப் பகுதியில் போடப்படுவதில்லை. ஏனெனில், இப்பகுதியில் உள்ள கொழுப்புப் பொருள்கள் உடலில் போதுமான தடுப்பாற்றலை உருவாக்குவதில்லை.

தோலுக்கடியில் போடப்படும் தடுப்பூசி: 0.1 மி.லி. வெறிநாய்க்கடி தடுப்பூசி தோலுக்கடியில், 0, 7, 21, 28 ஆகிய நாட்களில் போடப்படுகிறது. இந்தத் தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டால், இரண்டாம் தவணை வெறிநாய்க்கடி தடுப்பூசியை எடுக்கத் தேவையில்லை. எனினும், வெறிநாய்க்கடி பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் பணி புரிவோர், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இவ்வகைத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

நாய் கடித்த பின்பு

வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் காயங்களைப் பொறுத்து, தடுப்பு நடவடிக்கைகள் இருக்கும். காயங்களின் தன்மையைப் பொறுத்து, பாதிக்கப்பட்ட மனிதர்கள் மூன்று பிரிவாகப் பிரிக்கப்படுகிறார்கள். முதல் வகை: வெறிநாயைத் தொடுபவர்கள் மற்றும் அதனால் நக்கப்படுபவர்கள். இரண்டாம் வகை: தோலில் கீறல் மற்றும் இரத்தப்போக்கு இல்லாத சிறிய காயங்கள் உள்ளவர்கள். மூன்றாம் வகை: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காயங்கள், அதிக இரத்தப்போக்கு மற்றும் காயப்பட்ட இடங்களில் நாய் நக்குதல்.

இவற்றில், முதல் வகையில் வரும் மனிதர்களுக்கு, தடுப்பூசி தேவையில்லை. இரண்டாம் வகையில் வரும் மனிதர்கள் உடனே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். மூன்றாம் வகையில் வரும் மனிதர்கள் உடனே தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதுடன், உடனடியாக ரேபீஸ் நோயெதிர்ப்புப் புரதத்தை, காயப்பட்ட இடங்களைச் சுற்றிச் செலுத்த வேண்டும். தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதற்கு முன், கடிபட்ட இடங்களில் நிறைய நீரை ஊற்றி, சோப்பின் மூலம் நன்கு கழுவ வேண்டும். அயோடின் கலந்த கரைசல் இருப்பின், அதைக் கொண்டு காயப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.

கடித்தது வெறிநாயில்லை எனத் தெரிய வந்தால், அல்லது கடித்த நாளிலிருந்து பத்து நாட்கள் வரை அந்நாயின் உடல் நலத்தில் சந்தேகப்படும்படி மாற்றம் எதுவும் இல்லை என அறிந்தால், எடுத்துக் கொண்டிருக்கும் தடுப்பூசியை உடனே நிறுத்தி விடலாம். இவ்வகைத் தடுப்பூசியும் தோலுக்கடியில் அல்லது தசையில் போடப்படுகிறது.

தசையில் போடப்படும் தடுப்பூசி: தசையில் போடப்படும் தடுப்பூசி முறையில் இரு வகைகள் பின்பற்றப்படுகின்றன. 1) ஐந்து முறை போடப்படுவது. 2) நான்கு முறை போடப்படுவது. ஐந்து முறை போடப்படும் தடுப்பூசி முறையே, 0, 3, 7, 14 மற்றும் 28-ஆம் நாளில் போடப்படுகிறது. நான்கு முறை போடப்படும் தடுப்பூசி, 0-ஆம் நாளில் இரண்டு கைகளில் இரண்டு ஊசிகள், அதைத் தொடர்ந்து 7 மற்றும் 14-ஆம் நாளில் ஒருமுறை போடப்படும். பொதுவாக, இந்தியாவில் ஐந்து முறை போடப்படும் தடுப்பூசி முறையே பின்பற்றப்படுகிறது.

தோலுக்கடியில் போடப்படும் தடுப்பூசி: கையிலும் தொடையிலும் இத்தடுப்பூசி 0, 3, 7, 28 ஆகிய நாட்களில் போடப்படுகிறது. இம்முறை பெரும்பாலும் மூன்றாம் வகைக் காயம் கொண்ட மனிதர்களுக்குப் பின்பற்றப்படுகிறது. பொதுவாக, 0 நாள் என்பது, தடுப்பூசி போடத் தொடங்கும் நாளாகும். இது, நாய் கடித்த நாளைக் குறிப்பதில்லை. எனினும், நாய் கடித்த உடனேயே தடுப்பூசி முறையைப் பின்பற்றுவது நலம்.

வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட மனிதர்கள், ஏற்கெனவே முழுமையான தடுப்பூசி முறையை எடுத்திருந்தால், அவர்களுக்கு 0 மற்றும் 3-ஆம் நாளில் மட்டும் தலா ஒன்று வீதம் இரண்டு தடுப்பூசிகள் போதும். மேலும், அவர்கள் இம்யூனோகுளோபுலின் என்னும் நோயெதிர்ப்புப் புரதத்தை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

இந்தியாவில், அந்தமான், நிக்கோபர் மற்றும் இலட்சத் தீவுகளைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் வெறிநாய்க்கடி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்நோய் பெரும்பாலும் ஏழை மக்களிடம் தான் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, அவர்களுக்குத் தகுந்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சையை அளித்து, இந்நோயைத் தடுப்பதற்கான அமைப்பை, இந்திய அரசு 1998-இல் உருவாக்கியது. 2020-க்குள் ரேபீஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க, இவ்வமைப்பு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் செப்டம்பர் 28-ஆம் நாள், உலக வெறிநாய்க்கடி நோய் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் வேளையில், இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.


மரு.ச.இராஜா சொக்கப்பன், கால்நடை உதவி மருத்துவர், மேலக்கிடாரம், மரு.தி.தீபக், கால்நடை உதவி மருத்துவர், விஷமங்கலம், மரு.க.பிரேம்குமார், கால்நடை உதவி மருத்துவர், எட்டிப்பட்டி, மரு.வ.பா.இராகவேந்திரன், உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, கிள்ளிக்குளம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading