My page - topic 1, topic 2, topic 3

அன்னாசி என்னும் அருமைப் பழம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017.

புறங்கண்டு இகழாதே
அகங்கண்டு களி
பழம் அன்னாசி கண்டு பயமேன்
அதன் சுவைப்பயன் கண்டு களி!

ம் அன்றாட உணவுப் பயன்பாட்டில் கீரை, காய்களுக்கு அடுத்து, இயற்கை உணவுப் பொருள்களில் ஒன்றான பழங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இந்தப் பழங்கள் நம் உடலை மேம்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பாற்றலையும் தருகின்றன. இத்தகைய பழங்களில் ஒன்று தான் பூந்தாழம் பழம் என்னும் அன்னாசிப் பழம்.

கடினமான சிறுசிறு முட்களால் ஆன அன்னாசிப் பழத்தின் புறப்பகுதி, அந்தப் பழத்துக்கு இயற்கையளித்த கடினக் கவசக்கொடை எனலாம். பரங்கியர்களால் இப்பழம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, கிழக்குக் கடற்கரை ஓரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது என்பர். வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில், தோட்டங்களில், வேலிகளில், உணவுக்காக, வணிகத்துக்காக அதிகளவில் பயிரிடப்படுகிறது. அதனால், அன்னாசிப்பழம் நமது சுதேசித் தாவரம் என்று சித்தர் இலக்கியம் கூறுகிறது.

வெப்ப நாடுகளின் அரசி

இந்தப் பழத்தின் முடியில் தாழையைப் போன்ற இலைகள் இருப்பதால், இது பரங்கித் தாழை, செந்தாழை எனவும் அழைக்கப்படும். Bromeleaceae தாவரக் குடும்பத்தில் Ananascomosus Merrill என்னும் தாவரப் பெயரைக் கொண்டது அன்னாசிப் பழம். இப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை அதற்கே உரித்தான கோடைக்காலத்தில் மிகுதியாகக் கிடைக்கும். எனவே தான், இதை வெப்ப நாடுகளின் அரசி என்று, சித்த மருத்துவம் கூறுகிறது.

சேமிக்க இயலாது

பிற பழவகைகளைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவதைப் போல, அன்னாசியை எவ்வகையிலும் பக்குவமாகச் சேமித்து வைக்க இயலாது. இதன் இயல்பு கெட்டுவிடும் என்பதால், விளையும் காலத்தில் மட்டும் பயன்படுத்துவதே சாலச் சிறப்பாகும்.

பழங்களை உண்ணும் காலம்

பொதுவாகப் பழங்களை உணவுடன் அல்லது உணவுக்குப் பிறகு உண்பதை விட, உணவுக்குச் சிலமணி நேரத்துக்கு முன்பு உண்பதே நலந்தரும். நன்கு பழுத்த பழங்களைக் கடித்து மென்று உண்ண வேண்டும். சிறியோர் முதல் பெரியோர் வரை விருப்பமுடன் உண்பதற்கு ஏற்ற உணவு பழங்களே. அந்த வகையில், நார்ச்சத்து மிகுந்த அன்னாசிப் பழம், உண்ட உணவைச் செரிக்கச் செய்யும்; மலச்சிக்கலை, நுண் புழுக்களை நீக்கும்; குடலைத் தூய்மையாக்கி அதற்கு வலுவைத் தரும். மேலும், பொட்டாசியச் சத்தும் இதில் உள்ளதால், நீர் எரிச்சலைப் படிப்படியாகக் குறைக்கும்.

அன்னாசியின் பயன்கள்

அன்னாசிப் பழம் இனிப்பு, புளிப்புச் சுவையுடன் விறுவிறுப்பும் குளிர்ச்சியும் மிக்கது. சீரண நிலையிலும் இனிப்புச் சுவை மிகுவதால், உடலின் வெப்பத்தைத் தணித்து, நீரையும் வியர்வையையும் பெருக்கும். மூக்கு வறட்சியைப் போக்கும்; குருதியைத் தூய்மையாக்கும். இந்தப் பழச்சாற்றில் சர்க்கரையும் கொழுப்பும் குறைவாக உள்ளதால், உடல் பருமனைக் குறைக்கும்.

அன்னாசிப் பழச்சாற்றை வெதுப்பி மிதச்சூட்டில் தினம் மூன்று வேளை வீதம், பத்து நாட்கள் பருகி வந்தால், கால்சியம், மக்னீசியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம், செம்பு போன்ற உடலின் தாதுப்பொருள்கள் பற்றாக்குறை நீங்கும். இதனால், நரம்புகளின் உணர்வுகள் தூண்டப்பட்டு உடல் வீரியமாகும்.

செரியாமை அகல

புத்தம்புது அன்னாசிச் சாற்றிலுள்ள புரதச் சத்துகள், தொழுநோய்க்கும், யானைக்கால் நோய்க்கும் சீரான புறமருந்தாகும். அன்னாசிச்சாறு 200 மில்லி, இஞ்சிச்சாறு 50 மில்லி, ஓமம் 10 கிராம், தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து வெதுப்பிச் சூடாக்கி ஆற வைத்து, 60 மில்லி முதல் 100 மில்லி வரையில், காலை, மாலை, இரவில் குடித்து வந்தால், செரியாமை, மாந்தம், வயிற்றுப்புண் குணமாகும்; மலச்சிக்கல் வராது.

குழந்தைகளுக்கு 2 தேக்கரண்டி அன்னாசிச் சாறுடன் தேனைக் கலந்து கொடுத்து வந்தால், வயிற்றுப் பொருமல், மாந்தம், அள்ளு மாந்தம், நுண் கிருமிகள், சீதக்கழிச்சல் ஆகியன குணமாகும்; குழந்தைகள் நோயின்றி வளர்வர்.

விக்கல் அகல

அன்னாசிச்சாறு 300 மில்லி, சர்க்கரை 200 கிராம், வறுத்து அரைத்த சீரகத்தூள் 20 கிராம் ஆகியவற்றை ஒன்றாக்கிக் காய்ச்சி, குழம்புப் பதம் வந்ததும் இறக்கி ஆற வைக்க வேண்டும். இதை மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை 50 மில்லி வீதம் உண்டால், விக்கல் நீங்கும்; புளியேப்பம் அகலும். குழந்தைகளுக்கு இதை ஒரு தேக்கரண்டி அளவில் எடுத்து, இத்துடன் வசம்பு சுட்டகரி ஒரு சிட்டிகை கலந்து கொடுத்தால் விக்கல் நிற்கும்; மாந்தம், சுவாச உறுப்புச் சிக்கல்கள் குணமாகும்.

மாத்திரை

அன்னாசி இலைச்சாறு 200 மில்லி, அன்னாசிப் பழச்சாறு 300 மில்லி, திரிகடுகத் தூள் 150 கிராம், திரிபலாப் பொடி 100 கிராம் ஆகியவற்றை அம்மியில் இட்டு நன்கு அரைத்து, இலந்தைப்பழ அளவில் மாத்திரைகளாக்கி நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். பிறகு, இந்த மாத்திரைகளைக் காலை, மதியம், இரவில் 2 மாத்திரைகள் வீதம், 60 நாட்களுக்கு ஆறிய நீரில் அருந்தி வந்தால், கொசுவினால் உண்டாகும் யானைக்கால், தொழுநோய்க்குத் தடுப்பு மருந்தாகச் செயல்படும்.

அன்னாசி சர்பத்

அன்னாசிப் பழச்சாறு 800 மில்லி, நன்னாரித் தூள் 10 கிராம், அதிமதுரம் 10 கிராம், சர்க்கரை தேவையான அளவில் எடுத்துப் பாத்திரத்தில் இட்டுக் காய்ச்சிப் பதமாக இறக்கி வைக்க வேண்டும். பிறகு, 200 மில்லி நீருக்கு 30 மில்லி வீதம் கலந்து குடித்து வந்தால், சிறுநீர் எரிச்சல், வியர்வை நாற்றம், உடல் வெப்பம் நீங்கி உடலும் மனமும் புத்துணர்வைப் பெறும்.

பெண்களுக்கு

அன்னாசிப் பழச்சாறு 800 மில்லி, எள் 20 கிராம், நீரில் கழுவிய கற்றாழைச் சோறு 20 கிராம், கருஞ்சீரகம் 10 கிராம், பெருங்காயம் 10 கிராம், வெங்காயச் சாறு 20 மில்லி, பூண்டுச்சாறு 20 மில்லி, சுக்கு, மிளகு, திப்பிலித்தூள் வகைக்கு 10 கிராம், சர்க்கரை தேவையான அளவில் சேர்த்துப் பாத்திரத்தில் இட்டுக் காய்ச்சி, இளம்பாகு பதத்தில் இறக்கி ஆற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நாளைக்கு மூன்று வேளை 30 மில்லி வீதம் மூன்று நாளைக்கு அருந்தி வந்தால், மாதவிலக்கு நாளில் உண்டாகும் வலி நீங்கி, குருதிப்போக்கு இயல்பாகும்.
சிறப்புத் தகவல்

மழைக்காலத்திலும், குளிர் காலத்திலும் அன்னாசிப் பழங்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும். மூலம், அல்சர் என்னும் வயிற்றுப்புண் உள்ளவர்கள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அன்னாசிப் பழத்தை உண்ண வேண்டாம். அன்னாசிப் பழம் அதிகச்சூடு, வயிற்றுவலி, சீதபேதியை உண்டாக்கும் என்பது தவறான கருத்து. பிற பழங்களில் உள்ள வெப்பமான 14 கலோரியே அன்னாசிப் பழத்திலும் உள்ளது. நாம் தினமும் பயன்படுத்தும் புளியின் வெப்ப அளவு 82 கலோரியாகும்.

புத்தம் புது அன்னாசிப் பழச்சாற்றை மேல்பூச்சாகப் பூசி வந்தால், தொடக்கநிலை தொழுநோய் குணமாகும் என்னும் சித்தர்களின் அனுபவக் குறிப்பு ஆய்வுக்கு உரியது.


மரு.ப.குமாரசுவாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks