வயலோர வளையில்தான் எலிகள்பல வசித்திடும்
எலியின்சிறு நீரில்தான் நோய்க்கிருமி கோடி வாழ்ந்திடும்
சேறுகொண்ட நீரிலே சுருள் கிருமிதனும் பரவிடும்
வீறுகொண்ட கிருமியும் விரைந்து பெருகக் கண்டிடும்
கரும்புநெல்லு பயிரிட விவசாயி கால்பதிக்க இருந்திடும்
கால்மாதம் கழிந்தபின் காய்ச்சல் காண நேரிடும்
குடிநீரும் தீவனமும் திறந்து நாமும் வைத்திட
சிறுநீரும் பட்டுவிட்டால் சுருள்கிருமி தொற்றிடும்
கால்வலி தலைவலி பின் அடிமுதுகுவலிக் கூடிடும்
காலம்சிறிது கடந்திடக் காமாலையும் சேர்ந்திடும்
சிலபல நாள்களும் சிவந்து கண்கள் இருந்திடும்
சிகிச்சையற்றுப் போனால்தான் சிறுநீரகமும் வீங்கிடும்
வயிற்றுவலிக் கண்டிட வாந்திகூட வந்திடும்
மூளைஅழற்சிக் கண்டிட மூச்சும் சமயம் முடங்கிடும்
காய்ச்சல் கண்ட மாடும்கூடக் காமாலையைக் கண்டிடும்
காபி போன்ற நிறத்திலேயே சிறுநீரும் சிந்திடும்
மடிவீக்கம் இல்லாமல் மடிநோயும் வந்திடும்
மறுபடியும் மறுபடியும் சிவந்த பாலைச் சுரந்திடும்
கணிசமான பாலை மட்டும் கரிசனமாய்க் கறந்திடும்
கால்கடுக்க நடந்திடும் மூட்டு உறைஅழற்சி கண்டிட
சினைமாடாய் இருந்துவிட்டால் சிதைந்த கரு தள்ளிடும்
சிலமாதம் ஆனபின்தான் சினை மீண்டும் தங்கிடும்
தீவனத்தைக் கண்டுவிட்டால் தீட்டுப்போல ஒதுங்கிடும்
தீவிரமாய் நோயைக் கண்டால் இறப்புக்கூட நேரிடும்
நாயுடனும் நாமும்தான் கவனமாகப் பழகணும்
நாயின் சிறுநீரிலும் சுருள்கிருமி வந்து பரவிடும்
சுரம்கண்ட நாயும்பின் வாந்திபேதிக் கண்டிடும்
சிறுநீரகம் சிவந்திடும் கல்லீரல்கூடக் கனத்திடும்
சோறுநீரைச் சுத்தமாகக் காய்ச்சி தினமும் பருகணும்
சேறுநீரில் கால் பதிக்குமுன் காலணியால் காக்கணும்
சுரமின்றி வாழ்ந்துவிடச் சுற்றுபுற எலிகளைத்தான் விரட்டணும்
சுகாதாரம் பேணிவிடத் தடுப்பூசி நாய்க்கு அளிக்கணும்
முனைவர் சு.சரவணன், பேராசிரியர், கால்நடைப் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், நாமக்கல் – 637 002.
சந்தேகமா? கேளுங்கள்!