My page - topic 1, topic 2, topic 3

வாஸ்து மீன் வளர்ப்பு!

மேசான் காடுகளின் நன்னீர்ப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஆசிய அரோவனா மீன், உலகிலேயே விலை உயர்ந்த, மிகப் பிரபலமான வண்ண மீன்களுள் ஒன்றாகும்.

தனது ஒளிரும் சிவப்பு நிறம், பெரிய காசைப் போலத் தோன்றும் செதில்கள், பெரிய வாய், வேகமாக நீந்தும் திறன் போன்ற பண்புகளால், அலங்கார மீன் வளர்ப்போரிடம் மிகவும் பிரபலமானது இந்த மீன்.

சீன டிராகன் மீனைப் போல இருப்பதால் இந்த மீன், டிராகன் மீன் எனவும் அழைக்கப்படும். இந்த மீன்கள் செல்வச் செழிப்பை, வலிமையைச் சேர்த்துக் கொண்டு வரும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

மேலும், இம்மீன்கள் தாம் இருக்கும் வீட்டுக்கு வரும் கெட்ட சகுனத்தை உணர்ந்து, அதைத் தம் வசம் எடுத்துக் கொண்டு, தொட்டியில் இருந்து வெளியே குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் தன்மை மிக்கவை எனவும் கருதப் படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் தொழில் சார்ந்த முக்கிய முடிவுகள், அரோவனா மீன்களின் செயல்பாட்டை வைத்தே எடுக்கப் படுகின்றன.

ஆழமாக மற்றும் மெதுவாகப் பாயக்கூடிய ஆறு, நன்னீர்க் குளம், ஆழமான ஏரி போன்ற இடங்களில் வாழும் இம்மீன்கள், மிகப் பழமையான மீனினங்களைக் கொண்ட Osteoglossidae என்னும் குடும்பத்தில் சேர்க்கப்பட்டு, Sclerophagus formosum என்னும் அறிவியல் பெயரால் உலகம் முழுவதும் அறியப் படுகின்றன.

அலங்கார மீன்கள், வணிக நோக்கில், உலகளவில் அதிகமாகப் பிடிக்கப் படுவதால், அரோவனா மீனினம் அழிவைச் சந்தித்து வருகிறது.

அரோவனாவைப் பாதுகாக்கும் பொருட்டு, அறுகி வரும் உயிரினங்கள் சார்ந்த வணிகங்களை நெறிப்படுத்தும், சர்வதேச அமைப்பின் (CITES) மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில், இம்மீன்களைச் சேர்த்துப் பாதுகாத்து வருகின்றனர்.

பண்புகள்

பெரிய செதில்களால் சூழப்பட்ட, நீந்துவதற்கு ஏற்ற நீளமான உடலைக் கொண்டுள்ள அரோவனா மீன்கள், தமது இயற்கை வாழிடங்களில் முரட்டுத் தனமாய் வேட்டையாடும் பண்புகளுடன், தனியாக அல்லது சிறு கூட்டமாக வாழும்.

கீழ்த் தாடையில் உள்ள மீசையைப் போன்ற இரு அமைப்புகள் (barbels) குறைந்த ஒளியிலும் இரையைக் கண்டறிய உதவும்.

மேல் தாடையில் உள்ள கூர்மையான பற்கள், இரையை நன்கு கடித்துச் சாப்பிடத் துணை செய்யும். வேட்டையாடி உண்ணும் அரோவனா மீனினம் மாமிச உண்ணி வகையைச் சார்ந்தது. நீர் நிலைகளை விட்டு மேலே குதித்து இரையை வேட்டையாடும்.

புழுக்கள், பூச்சிகள், இறால்கள், தவளைகள், பூரான்கள் போன்றவை, இந்த மீனினத்தின் இயற்கை உணவுகள் ஆகும். செயற்கை உணவுகளை விட, இத்தகைய இயற்கை உணவுகளையே விரும்பி உண்ணும் இம்மீன்கள், 7 கிலோ எடை மற்றும் 120 செ.மீ. நீளம் வரை வளரும்.

வகைகள்

இப்போது இருபதுக்கும் மேற்பட்ட நிறங்களில் கிடைக்கும் ஆசிய அரோவனா மீன்கள், அவற்றின் பிறப்பிடங்களைப் பொறுத்துப் பல்வேறு நிறங்களில் உள்ளன.

பச்சை நிற அரோவனா தென் கிழக்கு ஆசியாவிலும், பொன்னிற அரோவனா மேற்கு மலேசியாவிலும், சிவப்பு வால் பொன்னிற அரோவனா இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்திராவிலும் பரவலாக உள்ளன.

நிறங்களைப் பொறுத்தே அரோவனா மீன்களின் விலையும் இருக்கும். இந்தோனேசிய மேற்குக் களிமடன் பகுதியில் வாழும் சிவப்பு அரோவனா மீனின் விலை அதிகமாகும். பச்சை நிற மீன்களின் விலையைப் போல, சிவப்பு அல்லது பொன்னிற இனங்களின் விலை, 5-10 மடங்கு கூடுதலாக இருக்கும்.

உருவவியல் மற்றும் மைட்டோ கான்ட்ரியா DNA இன் இன வரலாறு phylogeny ஆய்வுகளின் அடிப்படையில், பொயாய்டு மற்றும் அவரது குழுவினர், 2003 ஆம் ஆண்டு, அரோவனா மீன்களை நான்கு வகைகளாகப் பிரித்து உள்ளனர்.

அதாவது, பச்சைநிற அரோவனா மற்றும் பொன்னிறக் குறுக்குவழி அரோவனா S.formosus எனவும், வெள்ளி நிற ஆசிய அரோவனா S.macrocephalus எனவும், சிவப்புவால் பொன்னிற அரோவனா S.aureus எனவும், சூப்பர் ரெட் அரோவனா S.legendri எனவும் பிரிக்கப்பட்டு உள்ளன.

ஆசிய அரோவனா மீன்களின் விலை, சில நூறு அமெரிக்க டாலரில் இருந்து, மூன்று இலட்சம் அமெரிக்க டாலர்கள் வரை உள்ளது.

2009 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட அக்குவாரமா சர்வதேச மீன் போட்டியில் (Aquarama International Fish Competition), திடீர் மாற்றமடைந்த அரிய வகை அல்பினோ அரோவனா, சீனாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரால், மூன்று இலட்சம் அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டு உள்ளது. இது, இம்மீனின் பெருமையைப் பறை சாற்றுகிறது.

பாலின வேறுபாடு

சிறிய அரோவனா மீன்களில் பாலின வேறுபாட்டைக் கண்டறிய இயலாது. 3-4 வயதுள்ள அரோவனா மீன்களில் தான் பாலின வேறுபாடுகள் தெரியும். இந்த வேறுபாடுகள், உடலமைப்பு மற்றும் வாயின் அளவைக் கொண்டு அறியப்படும்.

ஆண் மீனின் அடையாளங்கள்: பெரிய தலை மற்றும் வாய். பிரகாசமான மற்றும் சிறப்பான நிறம். குறுகிய, நீளமான உடலமைப்பு. மிகவும் முரட்டுத் தன்மை கொண்டது.

பெண் மீனின் அடையாளங்கள்: சிறிய தலை மற்றும் வாய். வெளிர் நிறம். அடர்த்தியான உடலமைப்பு. முரட்டு தன்மை குறைவு.

ஆண் அரோவனாவின் பெரிய வாயும், கீழ்த் தாடையும், முட்டைகளை அடை காக்க ஏதுவாக அமைந்து உள்ளன.

ஆசிய அரோவனா வணிக நிலை

1981 ஆம் ஆண்டு சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில், அரோவனாவில் செயற்கை முறை இனப்பெருக்கம் முதன் முதலில் வெற்றிகரமாகச் செய்யப் பட்டது. 2012 ஆம் ஆண்டு முதல், உலகளவில் அரோவனா வணிகம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருந்து வருகிறது.

அரோவனா உற்பத்தியில் முதல் நாடாக இந்தோனேசியா திகழ்கிறது. இரண்டாம் இடத்தில் மலேசியா உள்ளது.

இந்தியாவில் அரோவனா மீன்கள் இறக்குமதி மற்றும் உற்பத்தியில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. அரோவனா மீனின் விலை, இனத்தைப் பொறுத்து, சில ஆயிரம் முதல் 2.5 இலட்சம் வரை உள்ளது.

வண்ணமிகு ஃப்ளவர் ஹார்ன் வாஸ்து மீன்

ஃப்ளவர் ஹார்ன் (Flower Horn) மீன்கள், சிச்லிட் இனங்களில் மிகவும் பிரபலமான மீன்களாகும். இம்மீன்கள், தம்மை வளர்ப்போர்க்குச் செல்வத்தைத் தேடித் தரும் என நம்பப் படுகிறது. இவற்றின் அழகான நிறம், தலையில் இருக்கும் பந்தைப் போன்ற அமைப்பால் இவை ஃப்ளவர் ஹார்ன் மீன்கள் எனப்படுகின்றன. உண்மையில் இவை செயற்கையாக உருவாக்கப் பட்டவை.

நீல டிராகன் டைகர் என்னும் மீன் தான், ஃப்ளவர் ஹார்னின் முதல் தலைமுறையாகக் கருதப் படுகிறது. மற்ற மீன்களுடன் சண்டையிடும் இந்த ஃப்ளவர் ஹார்ன் மீன்கள், தம்மை வளர்க்கும் எஜமானரிடம் பாசமாகப் பழகும். மேலும், மற்ற வீட்டு விலங்குகளைப் போலவே தம்மை வளர்ப்போரிடம் நன்கு விளையாடும்.

குறிப்பாக, பின்னால் நீந்துவது, குதிப்பது, சுழல்வது என நன்றாக விளையாடும். முதன் முதலில், 1990 ஆம் ஆண்டில் மலேசியாவில் பிரபலமான இம்மீன்கள், பிறகு, உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் பிரபலமாகி, மக்களால் ஆர்வமாக வளர்க்கப் படுகின்றன.

தோற்றம் மற்றும் வரலாறு

1993 ஆம் ஆண்டு மலேசியா மற்றும் தைவான் மக்களிடம், பெரிய தலை மீன்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. மலேசியாவில் 1994 இல், மத்திய அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, சிவப்பு வால் சிச்சிலிட் (Amphilophus labiatus) மற்றும் டிரைமக் சிச்சிலிட் (Amphilophus trimaculatus) மீன்களை, தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிலட் பாரொட் மீன்களுடன் சேர்த்து இனப் பெருக்கம் செய்ததில் உருவான மீன் தான் ஃப்ளவர் ஹார்ன் மீன்.

மேலும், 1995 இல் பிலட் பாரொட் மீன்களையும், மனித முகமுள்ள சிவப்பு கோட் ஒஃப் ஃபொர்டியுன் மீன்களையும் சேர்த்து இனப் பெருக்கம் செய்ததில் உருவானது தான் ஐந்து நிறமுள்ள கோட் ஒஃப் ஃபொர்டி மீன்.

பிறகு, மத்திய அமெரிக்காவில் இருந்து, ஏழு நிறமுள்ள பச்சை கோல்ட் டைகர் மீன்களையும், தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜின் கங்க் பிலட் பாரொட் மீன்களையும் சேர்த்து இனப் பெருக்கம் செய்ததில் உருவானது லுஹான்ஸ் ஃப்ளவர் ஹார்ன் மீன்.

அதன் பிறகு, பல்வேறு ஃப்ளவர் ஹார்ன் இனங்கள் உருவாக்கப் பட்டன. முதன் முதலில் அமெரிக்கச் சந்தையில், நான்கு இனங்கள் விற்கப்பட்டன. அவை, சாதாரண ஃப்ளவர் ஹார்ன், பியர்ல் ஃப்ளவர் ஹார்ன், கோல்டன் ஃப்ளவர் ஹார்ன் மற்றும் ஃபேடெர்ஸ். 2000-2001 ஆம் ஆண்டில் கம்ஃபா இனம் அறிமுகம் செய்யப் பட்டது.

இம்மீன்கள், வைஜா என்னும் இனத்தைச் சேர்ந்த ஏதேனும் இரண்டு ஃப்ளவர் ஹார்ன் மீன்களைச் சேர்த்து இனப் பெருக்கம் செய்ய வைத்து உருவாக்கப் படுகின்றன. சிறிய வாய், குழி போன்ற கண்கள், அழகான வால் மற்றும் பெரிய தலை ஆகியன இவற்றின் சிறப்புகளாகும்.

வகைகள்

செயற்கை இனப் பெருக்கம் மூலம் உருவான மீன்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான வகைகள், கம்ஃபா, ஜென் ஜுயு, கோல்டன் மன்கி, ஃபேடெர்ஸ், கோல்டன் டிரைமக்.

கம்ஃபா (Kamfa) : இவ்வினம், லுஹான்ஸ் இனத்தில் இருந்து உருவானது. இவ்வகை மீன்களுக்கு, மஞ்சள் அல்லது வெள்ளை நிறக் கண்களும், விசிறி போன்ற வாலும் இருக்கும். தலை வண்ண மயமாக இருக்கும். உதடு சிறியதாக இருக்கும். இவற்றுள் இன்னொரு வகையான ஜென் ஜுயு மீன்கள் குழி போன்ற கண்கள் மற்றும் சதுரமான உடலுடன் இருக்கும்.

ஜென் ஜுயு (Zhen Zhu): இவ்வினம், ஃப்ளவர் ஹார்ன் மற்றும் லுஹான்ஸ் இனத்தில் இருந்து உருவானது. கம்ஃபா வகைக்கு அடுத்து வந்தது. ஜென் ஜுயு ஃப்ளவர் ஹார்ன் இனம், பியர்ல் ஃப்ளவர் ஹார்ன் எனவும் அழைக்கப் படும்.

இம்மீன்கள், பெரிய தலை, பெரிய வாய், சிவப்பான கண்கள் மற்றும் வட்டமான வாலுடன் இருக்கும். இம்மீன்கள் பிரபலமாகக் காரணம், இவற்றின் உடலில் உள்ள வண்ணக் கோடுகளே ஆகும்.

கோல்டன் மன்கி (Golden Monkey): இவ்வினம் மிகவும் அரிதானது. இதை நல்ல அதிர்ஷ்டம் (Good Fortune) என்றும் அழைப்பர். இவ்வினத்தை, மலேசியாவைச் சேர்ந்த லம் சீய, லம் சூன் ஆகியோர், செயற்கை இனப் பெருக்கம் மூலம் உருவாக்கினர்.

2001 இல், மூன்றாம் தலைமுறை ஃப்ளவர் ஹார்ன் உருவான போது, அனைத்து ஃப்ளவர் ஹார்ன்களும் உலகிலுள்ள சிறந்த வண்ண மீன் அருங்காட்சியகத்துக்கு விற்கப் பட்டன. அவற்றுள் உண்மையான லுஹான்ஸ் இனத்தில் இருந்து உருவாக்கப் பட்ட கோல்டன் மன்கி ஃப்ளவர் ஹார்ன், 2009-இல் மலேசிய கண்காட்சியின் போது, ஆறு இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது.

கோல்டன் இனங்கள்

கோல்டன் இனங்களுள் ஃபேடெர்ஸ், கோல்டன் டிரைமக் ஆகியன முக்கிய மானவை. ஃபேடெர்ஸ் வகை மீன்களில், இளம் பருவம் முதல் உடலிலுள்ள நிறங்கள் மறையத் தொடங்கும். ஒரு கட்டத்தில் உடல் முழுவதும் கறுப்பு நிறமாக மாறும்.

இந்த நிறமும் சில காலம் வரை மட்டுமே இருக்கும். பிறகு, சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறும். இந்த நிற மாற்றம் மூலம், ஃபேடெர்ஸ், கோல்டன் டிரைமக் ஆகியவற்றை அடையாளம் காணலாம்.

ஃப்ளவர் ஹார்ன் மீன்களுக்கு வரும் நோய்கள்

வெண்புள்ளி நோய்: மீன்களின் உடல் முழுவதும் உப்பைப் போன்ற வெண் புள்ளிகள் இருப்பது இந்நோயின் அறிகுறி. மேலும், மீன்கள் சோர்வாக இருப்பது, உண்ணாமல் இருப்பது, தொட்டி, கற்கள் மேல் உரசுவது ஆகியனவும் இதன் அறிகுறிகள் ஆகும். இந்நோய்க்கான முக்கியக் காரணி Ichthyophithirius multifilis (Ich) என்னும் புரோட்டோ சோவா ஆகும்.

தீர்வு: தொட்டியில் 50% நீரை மாற்றுவது, அக்வரிசொல் மற்றும் உப்பைச் சேர்த்து நீரில் கொடுப்பது, நீரின் வெப்ப நிலையை 28.80 செல்சியசில் இருந்து சற்று உயர்த்துவது போன்றவை, இந்த நோயிடம் இருந்து மீன்களைக் காப்பாற்றும்.

தலையில் துளை நோய்: இது ஆபத்தான நோயாகும். சரியான நேரத்தில் சரி செய்யா விட்டால் மீன்கள் இறக்க நேரிடும். தலையில் துளை ஏற்படக் காரணம், ஹெக்சமிட்டே என்னும் புரோட்டோ சோவா ஆகும்.

முதலில் சிறிய குழி அல்லது பருவைப் போலத் தோன்றும். பிறகு, அது வளர்ந்த நிலையில் அதிலிருந்து சாம்பல் நிறப் புழுக்கள் வெளிவரும். இந்த நோய்க்கு உள்ளான மீன்களின் உடல் எடை குறையும், மீன்கள் உண்ணாமல் இருக்கும், வால் இறுக்கமாக இருக்கும்.

தீர்வு: தொட்டியில் 75% நீரை மாற்றுவது, 30 லிட்டர் நீருக்கு 250 மி.கி. மெட்ரோனிடசொல் வீதம் கொடுப்பது. 2-3 நாளுக்கு ஒருமுறை ஊசி மூலம் மீன்களுக்கு உணவு கொடுப்பது ஆகியவற்றின் மூலம் நோயைத் தடுக்கலாம்.

பூஞ்சை நோய்: இது, மீன்களின் வாய், உடல், வால் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட மீன்களின் உடலில் சிறிய வெண் பூஞ்சை இருக்கும். இந்நோய்க் காரணி, ஃபெலக்சிபேக்டர் பாக்டீரியா ஆகும். மீன்கள் உண்ணாமல் இருப்பது, வாலும் துடுப்பும் சுருங்கி இருப்பது ஆகியன இதன் அறிகுறிகளாகும்.

தீர்வு: நோயுற்ற மீன்களை, நல்ல மீன்களிடம் இருந்து பிரித்து வைக்க வேண்டும். மெத்திலின் புளு, அக்ரிஃப்லவின் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, நீரின் வெப்ப நிலையை 26 டிகிரி செல்சியசில் வைப்பது, மூன்று நாளுக்கு ஒருமுறை தொட்டி நீரை 30% மாற்றுவது ஆகியன, நோயிடமிருந்து மீன்களைக் காப்பாற்றும்.

ஃப்லுக் நோய்: இதற்குச் செவிள் ஃப்லுக் நோய் என்னும் பெயரும் உண்டு. நோயுற்ற மீன்களின் செவிளில் புழுக்கள் இருக்கும். மேலும், கற்களில் உராய்வது, செவிள் மூடிய நிலையில் மூச்சு விடச் சிரமப் படுவது ஆகியன இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

தீர்வு: தொட்டி நீரை 75% மாற்றுவது, நீர்ச் சுத்தகரிப்பானைச் சுத்தம் செய்வது ஆகியன, இந்த நோயிலிருந்து மீன்களைக் காப்பாற்றும்.

டிராப்சி: இந்நோய், மீன்களின் உடலுக்குள் பாக்டீரிய தொற்று ஏற்படுவதால் வருகிறது. மீன்களின் உடலில் அதிகளவில் திரவம் சுரப்பது, நீரில் மிதப்பது, கண்களும் செவிள்களும் வீங்கியிருப்பது இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

தீர்வு: தொட்டி நீரை 75% மாற்றுவது, நீர்ச் சுத்தகரிப்பானைச் சுத்தம் செய்வது ஆகியன, இந்த நோயிலிருந்து மீன்களைக் காப்பாற்றும்.

தீவன மேலாண்மை

அரோவனா, ஃப்ளவர் ஹார்ன் ஆகிய இரண்டும் சிறப்புப் பண்புகளைக் கொண்ட மீன்கள். இவற்றை அதிக விலைக்குத் தான் வாங்கி வைத்திருக்க வேண்டும்.

எனவே, இவற்றுக்குச் சிறந்த உணவை அளித்தால் தான், நலமாக, நல்ல நிறத்துடன் இருக்கும். அதிலும், ஃப்ளவர் ஹார்ன் மீன்கள் பந்தைப் போன்ற தலையுடன் வளர்பவை. இந்த மீன்களுக்கான சத்துமிகு உணவுகள் கடைகளில் கிடைக்கும்.

அரோவனா மீன்களுக்குக் குச்சித் தீவனம் அதிகப் புரதத்துடன் கிடைக்கும். அதில், 45% க்குக் குறையாமல் புரதம் இருக்கும் உணவை வாங்க வேண்டும். மேலும், ஒரே வகை உணவைத் தராமல், உலர்ந்த இறால், ஆர்டீமீயா, உலர்ந்த கணவாய்ச் சதை போன்ற மற்ற புரத உணவுகளையும் அளித்தால், மீன்கள் நலமாக, அழகிய நிறத்துடன் இருக்கும்.

மேலும், வாரம் ஒருமுறை உயிருள்ள மீன்களையும் உணவாக அளிக்கலாம். அதாவது, சிறிய களை மீன்களை எடுத்து உயிருடன் தொட்டியில் இட்டால், அவை இயற்கையில் கிடைப்பதைப் போலப் பிடித்து உண்ணும்.

ஃப்ளவர் ஹார்ன் மீன்கள், அவற்றின் தலை அமைப்புக்காகவே வளர்க்கப் படுகின்றன. அதனால், இந்த மீன்களுக்கான சிறப்பு உணவுகள் கிடைக்கின்றன.

இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து கொடுத்தால், தலைப்பகுதி அதிகமாக வளர்ந்து, மீன்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தலாம், நோயும் உண்டாகலாம். அதனால், அரோவனாவுக்குக் கொடுப்பதைப் போலவே, இதற்கும் வெவ்வேறு உணவுகளை மாற்றிக் கொடுக்க வேண்டும்.

உயிர் உணவையும் கொடுக்கலாம். மேலும், ஃபிளவர் ஹார்ன் மீன்களின் நிறத்தை அதிகமாக்க, கரோட்டின் நிறைந்த சிறப்பு உணவுகளும் கிடைக்கின்றன. அவை நிறத்தையும் நலத்தையும் தரும். அடுத்து, எவ்வளவு உணவைக் கொடுக்க வேண்டும் என்பது முக்கியமானது.

நாம் இந்த மீன்களுக்கு அருகில் எப்போது போனாலும் அவை ஆரவாரம் செய்யும். அது உணவுக்காக அல்ல; மகிழ்ச்சியின் வெளிப்பாடு. மீன்களுக்கு உணளிப்பதில் கட்டுப்பாடு அவசியம். வீட்டில் இருப்போரில் யாராவது ஒருவர் மட்டுமே உணவளிக்க வேண்டும். அன்றாடம் இருமுறை தர வேண்டும். கொடுத்த உணவு சில நொடிகளில் தீருமளவில் மட்டும் இட வேண்டும்.

உணவை அதிகமாகக் கொடுத்தால் எச்சம் அதிகமாகும். அதனால், நீர் விரைவாகக் கெட்டு விடும். அதுவே நீரை அடிக்கடி மாற்றக் காரணமாகும். அடிக்கடி நீரை மாற்றினால், மீனுக்கும் ஓர் அழுத்தம் ஏற்படும். எனவே, உணவை அளவாக இடுவதே நல்லது.

அதிர்ஷ்ட மீன்

அரோவனா மற்றும் ஃப்ளவர் ஹார்ன் மீன்கள் வீட்டில் வளர்க்க ஏற்றவை. ஏனெனில், இவை எதிர்மறை ஆற்றலை ஒழித்து, நேர்மறை ஆற்றலைச் சேமிக்கும் திறன் மிக்கவை. இந்த வண்ண மீன்கள், வளர்ப்போர்க்கு மகிழ்வைத் தருகின்றன.

இந்த மீன்கள் வீட்டில் இருத்தால் செல்வச் செழிப்பு, அதிர்ஷ்டம், மகிழ்ச்சி ஆகியன, வீட்டிலுள்ள அனைவருக்கும் கிடைக்கும் என நம்பப் படுகிறது. நம்பிக்கையே நாம் வெற்றியை அடைவதற்கு வேண்டிய மன வலிமையைத் தரும்.

நம் வீட்டில் இந்த மீன்கள் சிறப்பாக இருப்பதைப் பார்த்தால், நமக்கு அதிக நம்பிக்கை வரும். அதாவது, நாம் வளர்க்கும் மீன்கள், நாம் அறியாமலே நம் நம்பிக்கையை உயர்த்தி, வாழ்வில் எளிதாக வெற்றி பெற வைக்கும். ஆகவே, இத்தகைய ஆற்றலுள்ள மீன்களை வீட்டில் வளர்த்து நாமும் நம் குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.


முனைவர் சா.ஆனந்த், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks