My page - topic 1, topic 2, topic 3

மாடித் தோட்டமும் மாசில்லாக் காய்களும்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே.

னித உடல் வளர்ச்சியில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றாட வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான கலோரிகள், தாதுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை, பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலமே பெற முடியும். எனவே, ஒவ்வொருவரும் அன்றாடம் குறைந்தது 250 கிராம் காய்கறிகள், 175 கிராம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி, மனித உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் காய்கறிகளையும் பழங்களையும் நிலத்தில் பயிரிட்டுத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்னும் அவசியமில்லை. நிலமில்லாதவர்கள், தங்களின் வீடுகளிலேயே இவற்றை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இப்படிச் செய்வதன் மூலம், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால் விளைவிக்கப்படாத, நஞ்சில்லாத காய்கள், கனிகள், கீரைகளைப் பெற முடியும். நாம் விரும்பும் காய்கறிகளை வீட்டின் மொட்டை மாடியிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம்.

மொட்டை மாடியில் காய்கறி உற்பத்திக்கு, உடைந்த நெகிழிக் குடங்கள், வாளிகள், நெகிழிப் பைகள், கோணிகள், இரும்பு டிரம்கள், அட்டைப் பெட்டிகள், பயன்படாத பாத்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இப்படிப் பாதுகாப்பான இடங்களில் உற்பத்தி செய்வதன் மூலம் நாம் சுத்தமான காய்கறிகளை அறுவடை செய்ய முடியும்.

இதற்குத் தேவையான மண் கலவையைத் தயார் செய்யும் முறையைப் பார்ப்போம். செம்மண், மணல், தொழுவுரம் ஆகிய மூன்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை முறையே 1:2:1 என்னும் விகிதத்தில் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையை, நாம் காய்கறி உற்பத்திக்காகத் தேர்வு செய்துள்ள பாத்திரத்திலோ, வாளியிலோ, நெகிழிக் குடத்திலோ, அட்டைப் பெட்டியிலோ போட்டு நிரப்பி, குறைந்தது ஒரு வாரம் வரை நீரைத் தெளித்து வர வேண்டும். பிறகு, நமக்குத் தேவையான காய்கறி நாற்றுகளை, விதைகளை நட்டு நீர் விட்டுப் பராமரிக்க வேண்டும்.

இந்தச் செடிகள் வளர்வதற்குத் தேவையான உரங்களாக, வீட்டில் கிடைக்கும் குப்பைகளையே மட்க வைத்து இடுவதன் மூலம் செலவில்லாமல் காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். மேலும், சுற்றுப்புறத்தையும் மாசில்லாமல் வைத்துக் கொள்ளலாம். மண்புழு உரம், மட்கிய தென்னை நார்க் கழிவு, வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றையும் செடிகளின் வளர்ச்சிக்குத் தேவையான உரங்களாகப் பயன்படுத்தலாம். வேப்பம் புண்ணாக்கையும் வேப்ப எண்ணெய்யையும் பயன்படுத்துவதன் மூலம், பெரும்பாலான பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். மேலும், பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் இயற்கைப் பூச்சிக்கொல்லியாகவும் விளங்கும் பஞ்சகவ்யாவையும் பயன்படுத்தலாம்.

மாடித் தோட்டத்தில், தக்காளி, கத்தரி, வெண்டை, பச்சை மிளகாய், வெங்காயம், பீன்ஸ், கிழங்குகள், கீரைகள் ஆகியவற்றையும், கோடைக் காலத்தில் விளையும் அவரை, பாகல், புடல், சுரை, பீர்க்குப் போன்ற காய்கறிகளையும் உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், கோடை வெய்யிலின் மூலம் படும் துன்பத்திலிருந்து விடுபடலாம். மேலும், கட்டடங்களின் மேற்கூரை சூடாகாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் இரவில் வீட்டில் தூங்குவதற்கும் குளிர்ச்சியாக இருக்கும். வாழை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற மரங்களையும், சற்றுப் பெரிய தொட்டிகள் அல்லது டிரம்களில் வளர்க்கலாம்.

நகரங்களில் வாழும் மக்களின் வேலையை எளிதாக்கும் வகையில், தென்னை நார்க்கழிவும் மண்ணும் கலந்து நிரப்பப்பட்ட நெகிழிப் பைகள் சந்தையில் கிடைக்கின்றன. மண், உரம், சாணம் ஆகியவற்றைத் தயார் செய்வதில் சிரமம் உள்ளவர்கள், இந்தப் பைகளை வாங்கிக் காய்கறி சாகுபடியை மேற்கொள்ளலாம். இந்தப் பைகளைத் தேவைக்கேற்ப இடமாற்றம் செய்து கொள்ளலாம்.

இப்படி, அவரவர் வீட்டு மாடியின் பரப்புக்கு ஏற்ப, காய்கறிகளை உற்பத்தி செய்வதன் மூலம் காய்கறிச் செலவைக் குறைப்பதுடன், நேரத்தையும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள முடியும்.


முனைவர் க.வேல்முருகன், இணைப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks