எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

எலி rat Copy e1611946125231

லிகள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியவை. பல்வேறு சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் தன்மை மிக்கவை. கிடைக்கும் எந்த உணவையும் உண்ணும். இனப் பெருக்கத்தில் சிறப்புத் தன்மை பெற்றவை.

வளரும் பற்களைக் குறைப்பதற்காக, எலிகள் எப்போதும் பொருள்களைக் கடித்துக் கொறித்துக் கொண்டேயிருக்கும். இவற்றுக்குக் கண் பார்வையை விட, தொடுவுணர்வு, கேள்வியுணர்வு மற்றும் மோப்ப உணர்வு அதிகம். கூச்சம் நிறைந்தவை. எதையும் சோதிக்கும் தன்மை பெற்றவை.

எலிகளால் உண்டாகும் சேதங்கள்

நெல், கோதுமை, மக்காச்சோளம், சிறு தானியங்கள், கரும்பு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, தென்னை, பயறு வகைகள், பருத்தி, காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் போன்றவற்றைத் தின்று சேதப்படுத்தும்.

தானியச் சேமிப்புகளில், சிறுநீர், எச்சம் மற்றும் முடிகள் போன்றவற்றை விட்டுச் சென்று, மனிதர்களுக்குச் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும். சேமிப்புத் தானியங்களைத் தின்று அழிக்கும்.

கோழிப்பண்ணைகளில் கோழிகளையும், முட்டைகளையும், மாமிசக் கூடங்களில் மாமிசத்தையும் உண்டு சேதப்படுத்தும். வசிப்பிடங்களில் நீர்க் குழாய்கள், மின்சாரக் கம்பிகள் போன்றவற்றைக் கடித்துச் சேதப்படுத்தும்.

தானியங்கள், தின்பண்டங்கள், காய்கறிகள் போன்றவற்றைத் தின்று அழிக்கும். அரசு அலுவலகங்களில், பாட சாலைகளில் இருக்கும் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளைக் கடித்துச் சேதப்படுத்தும்.

எலிகளின் வகைகள்

நமது நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட எலி வகைகள் இருக்கின்றன. தமிழகத்தில் விளைநிலங்கள், வீடுகள் மற்றும் தானியச் சேமிப்புக் கிடங்குகளில் கரம்பெலி அல்லது வயலெலி, புல்லெலி, வெள்ளெலி,

வயல் சுண்டெலி, கல்லெலி, குன்னெலி, பெருச்சாளி, வீட்டெலி, வீட்டுச் சுண்டெலி, தென்னை எலி போன்ற சுமார் பத்து வகைகள் உள்ளன.

இவற்றுள் வயலெலி அல்லது கரம்பெலி, புல்லெலி, வயல் சுண்டெலி ஆகிய மூவகை எலிகள் தான் நெற்பயிரைத் தாக்கிச் சேதம் விளைவிக்கின்றன.

வயலெலி அல்லது கரம்பெலி: வயலெலி பேன்டிகோட்டா என்னும் இனத்தைச் சேர்ந்தது. நெல் வயல்களில் உள்ள வரப்புகளில் தான் அதிகமாக வாழும். அதனால், இதை வரப்பெலி அல்லது வயலெலி என்றும் சொல்வதுண்டு.

வயலெலியின் உடம்பு திரண்டு பருத்திருக்கும். தலை சிறியது. முகம் பன்றியின் முகம் போன்றது. காதுகள் பெரியளவில் வட்டமாக இருக்கும். கண்கள் சிறியன. வாலின் நீளம் உடலின் நீளத்துக்கு அல்லது சற்றுக் குறைவாக இருக்கும். நன்கு வளர்ந்த கரம்பெலி சுமார் 325 கிராம் எடை இருக்கும். இது, ஓராண்டு வரை உயிர் வாழும்.

புல்லெலி: இது, கரம்பெலியை விடச் சிறியது. உடலின் மேற்பகுதி கரும் பழுப்பாகவும், அடிப்பகுதி வெளிர் பழுப்பாகவும் இருக்கும். உடலில் முடிகள் அடர்த்தியாக இருக்காது. சிறியதாகவும் மென்மையாகவும் இருக்கும். காதுகள் வட்டமாக இருக்கும். வாலின் நீளம் உடலின் நீளத்துக்கு அல்லது சற்றுக் குறைவாக இருக்கும். நன்கு வளர்ந்த புல்லெலி 100 கிராம் இருக்கும்.

வயல் சுண்டெலி: இது, பழுப்பு நிறத்தில் இருக்கும். வயிற்றின் அடிப்பகுதி வெள்ளையாக இருக்கும். வாலானது உடம்பின் நீளத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கும். இதன் எடை பத்து கிராம் இருக்கும். வயல் எலிகளிலேயே இது தான் மிகவும் சிறியது. நன்றாக நீந்தும். இதன் வளை முப்பது சென்டி மீட்டர் நீளம் இருக்கும்.

தென்னைமர எலி: இந்த எலியின் மேற்பகுதி சிவப்பாக அல்லது பழுப்புக் கலந்த மஞ்சளாக இருக்கும். அடிவயிறு வெள்ளையாக இருக்கும். பறவைகளைப் போல இந்த எலிகள் மரத்தின் உச்சியில் கூடு கட்டி வாழும். தென்னை மரங்களில் குரும்பைகளைக் கடித்து உதிரச் செய்யும். இளநீர்ப் பருவத்தில் கடித்து நீரைக் குடித்துக் காய்களைப் பாழ்படுத்தி உதிரச் செய்யும்.

எலிக் கொல்லிகள்

சிங்க் பாஸ்பைடு: சிங்க் பாஸ்பைடு பல ஆண்டுகளாக, எலிக் கொல்லியாகப் பயன்பட்டு வருகிறது. கருந்தூளாகப் பூண்டு வாசத்தில் இருக்கும். வயல் எலிகளைக் கொல்லும் விஷ உணவுத் தயாரிப்பில் இதை இரண்டு பங்கு சேர்க்க வேண்டும். அதாவது,

அரிசிப்பொரி: சிங்க் பாஸ்பைடு: தேங்காய் எண்ணெய்யை 47:2:1 வீதம் கலந்து இந்த எலிக்கொல்லியைத் தயாரிக்க வேண்டும்.

உணவுடன் கலந்து இரைப்பையை அடையும் சிங்க் பாஸ்பைடு அங்குள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினை புரிந்து பாஸ்பின் என்னும் வாயுவை வெளியிடும். இந்த வாயு நரம்புகளைத் தாக்கி எலிகளை இறக்க வைக்கும்.

நச்சுணவுக் கூச்சம்: இயற்கையாகவே எலிகளுக்கு நச்சுணவு மீது கூச்சத்தன்மை உண்டு. விஷ உணவை ஒரே ஒரு தடவை உண்ட அனுபவம் மூலம் மீண்டும் அவ்வகை உணவுகளை உண்ணாது.

இந்த உணர்வு மிகவும் சக்தி வாய்ந்தது. இது பல மாதங்களுக்கு அழியாது. நம் நாட்டில் பெரும்பாலான எலியினங்கள், நாம் அதிகமாகப் பயன்படுத்தும் சிங்க் பாஸ்பைட் கலந்த உணவை உண்பதில் கூச்சத் தன்மையை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

நச்சுக் கூச்சத் தன்மையைப் போக்குவதற்கு, ப்ரிபைட்டிங் (Pre-biting) முறையைப் பின்பற்ற வேண்டும். அதாவது, 2-3 நாட்களுக்கு மருந்தில்லாத உணவை வைத்து எலியைக் கவர்ந்த பிறகு, விஷ உணவை வைக்க வேண்டும்.

சில நேரங்களில் விஷ உணவில் பலவகையான தானியங்களைச் சேர்ப்பதன் மூலமும் நச்சுக் கூச்சத்தைப் போக்க முடியும். அல்லது புதிய உணவில் புதிய விஷ மருந்தைச் சேர்த்து, ப்ரிபைட்டிங் செய்து எலிகளுக்கு இட வேண்டும்.

வார்ஃபரின்: இந்த மருந்து ஒரு பங்குடன் 19 பங்கு அரிசிப் பொரியைக் கலந்து விஷ உணவைத் தயாரிக்க வேண்டும். வார்ஃபரின் மருந்துக்கு, இரத்தத்தை உறையச் செய்யாத தன்மை இருப்பதால், இரத்த நாளங்களில் இருந்து இரத்த உள்கசிவு ஏற்பட்டு எலிகள் இறக்கின்றன. எலிகளை முற்றிலும் அழிப்பதற்கு, சில நாட்களில் குறைந்தது நான்கைந்து முறை இந்த விஷ மருந்தை வைக்க வேண்டும்.

புரோமோடையலோன்: ஒருமுறை சாப்பிட்டாலே எலிகளை மட்டும் கொல்லும் ஆற்றலைக் கொண்டது, புரோமோடையலோன் என்னும் எலி மருந்து. இது, இரத்தத்தை உறைய வைக்காத தன்மையுள்ளது.

முதுகை ஒடிக்கும் பொறி: இந்தப் பொறியில் உணவை உண்ண வரும் எலி, ஒரு சிறிய கொக்கியை அசைப்பதால், விசையிலிருந்து விடுபடும் விசைமிக்க கம்பி, எலியின் கழுத்து அல்லது முதுகில் வேகமாகத் தாக்கி, அந்த எலியைக் கொன்று விடும்.

விந்தைப் பொறி: இந்தப் பொறி மூலம், வயல்களிலும் வீடுகளிலும் உள்ள எலிகளை உயிருடன் பிடித்து அழிக்கலாம். இரவு நேரத்தில் இந்தக் கூண்டில் கவர்ச்சிமிகு உணவை இட்டு வயல்களில் வைத்து விட வேண்டும்.

அப்போது உள்ளே செல்லும் எலிகள், முன் கதவு கீழே அழுத்தப்படுவதால் அகப்பட்டுக் கொள்ளும். வெளியில் வர, கதவு திறக்காது. இதன் மூலம், ஒருநாளில் 5-10 எலிகளை எளிதில் பிடித்து அழிக்க முடியும்.

சிறு வரப்புகளை அமைத்தல்: வயல்களில் முக்கால் அடி அகலம் அரையடி உயரமுள்ள வரப்புகளை அமைக்க வேண்டும். இதனால், எலிகள் வளைகளைத் தோண்டி வரப்புகளில் வாழ்வதும், பயிர்களை அழிப்பதும் பெரிதும் தடுக்கப்படும்.

எலி வளைகள் வயல் வரப்புகளில் அதிகமாகக் காணப்படும். பொதுவாக நெல் அறுவடை சமயத்தில் வரப்புகளை வெட்டினால் எலிகளையும் அவற்றின் குட்டிகளையும் பிடிக்கலாம்.

எலியைக் கொல்லும் விலங்கினங்கள்: மாமிசப் பட்சிகளான ஆந்தை, கழுகு, கோட்டான், பாம்பு, காட்டுப்பூனை, நாய், கீரிப்பிள்ளை, பருந்து முதலியன எலிகளைக் கொன்று உண்ணும்.

காட்டுப் பூனைகளும், சிறுகாது ஆந்தைகளும் எலிகளை அழிப்பதில் சில சூழல்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏனெனில், இவை இரண்டுமே எலிகள் நடமாடும் இரவு நேரங்களில் தான் அதிகமாக நடமாடுகின்றன. புள்ளிக் கோட்டான்கள், சிறியதாக இருக்கும் சுண்டெலிகளை அதிகமாகப் பிடித்து உண்கின்றன.

இயற்கை வேளாண்மை மூலம் எலிகளைக் கட்டுப்படுத்துதல்: மனிதனின் முதல் எதிரி எலி தான். ஏனெனில், ஆறு எலிகள் சேர்ந்தால் ஒரு மனிதனின் ஒருநாள் உணவைக் காலி செய்து விடும். சேமிப்பில் உள்ள தானியத்தில் 20 மில்லியன் முதல் 55 மில்லியன் டன் தானியத்தை எலிகள் ஒவ்வொரு ஆண்டும் சேதப்படுத்தி வருகின்றன.

அதைப்போல விளைச்சலில் சுமார் 25 சதப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நெல் அதிகமாக விளையும் பகுதிகளில், நெல் தரிசுப் பயிர்களில் 90 சதம் அளவுக்குச் சேதத்தை உண்டாக்குகின்றன.

ஒரு பெண் எலி ஒவ்வொரு முறையும் 8 முதல் 18 குட்டிகள் வரை ஈனுவதால், ஒரு ஜோடி எலிகள் ஓராண்டில் 500 ஆகப் பெருகுகின்றன.

இயற்கை வேளாண்மை உத்திகளில் பயிர்க் கழிவுகளை முறையாக மட்க வைப்பது, தாவர நிலப்போர்வை இடுதல் மற்றும் ஊடுபயிர்களை வளர்த்துக் களைகள் வளராமல் தடுத்தாலே எலிப்பெருக்கம் கட்டுக்குள் வந்து விடும்.

எலிகள் தாக்கும் பயிர்களைப் பயிரிடும் போது, சரியான இடைவெளி விடுவதும், அனைவரும் ஒரே சமயத்தில் பயிரிடுவதும், எலி ஒழிப்பில் அவசியம்.

நெல், கரும்பு, கோதுமை, மக்காச்சோளம், பயறு வகைகள், பருத்தி, கடலை முதலியவற்றை எலிகள் விருப்பமுடன் தாக்கும். எனவே, உணவாகப் பயன்படும் பயிர்களைத் தொடர்ந்து இடாமல் தவிர்ப்பதும், வைக்கோல் போர்களை வயலுக்கு அருகில் அமைக்காமல் இருப்பதும் நல்லது. எலிகளைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 30-40 தஞ்சாவூர்க் கிட்டிகளைப் பயன்படுத்தலாம்.

வரப்புகளைச் சீராக்குதல், அவ்வப்போது தோண்டி வளைகளை அழித்தல், கோடையில் வரப்பை வெட்டி எலிகளை அழித்தல், வளைகளில் புகை மூட்டம் போட்டு, எலிகள் வெளியேறாமல் இருக்க, வளை வாசல்களை களி மண்ணால் அடைத்து எலிகளைக் கொல்வதன் மூலமும் எலிகளைக் கட்டுப்படுத்தலாம். சுவருக்கு அருகில் இருக்கும் எலிப் பொந்துகளைக் கல், சிமென்ட்டால் அடைத்து விட வேண்டும்.

இரவுப் பறவைகளான ஆந்தை, கூகை, கோட்டான் முதலியன அமர்ந்து, எலிகளைப் பிடித்து உண்ண ஏதுவாக, காலிப் பானைகள் அல்லது சட்டிகளைத் தலைகீழாக ஒரு குச்சியில் கவிழ்த்து வைக்கலாம்.

ஏக்கருக்கு இருபது இடங்களில் T வடிவக் குச்சிகளை நட்டுப் பறவைகளை அமர வைப்பதன் மூலம் எலிகளை அழிக்கலாம். பூனைகளை வளர்ப்பதும், பாம்புகளைக் கொல்லாமல் விடுதலும் எலிகளைக் கட்டுப்படுத்த உதவும்.

பப்பாளிப் பழத்தைத் துண்டுகளாக்கி வயலில் ஆங்காங்கே வைத்தால் எலிகள் விரும்பி உண்ணும். இவை இனிப்பாக இருப்பதால் நன்கு உண்டு வயிற்றோட்டம் ஏற்பட்டே அழியும். எலிகள் இரவில் தான் அதிகம் ஆட்டம் போடும். கண்வலிக் கிழங்கு, வேம்பு, எருக்கு முதலிய தாவரங்கள் எலிக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்.

பெட்டிப்பொறி, முதுகை ஒடிக்கும் பொறி, விந்தைப் பொறி, ஒட்டும் அட்டைப் பொறி ஆகியவற்றில் வைக்கப்படும் எலி உணவாக, தேங்காய், கருவாடு, தக்காளி போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

அதிக வெளிச்சம் தரும் டார்ச் லைட்டை அடித்தால் எலிகள் அப்படியே நின்று விடும். அப்போது எலிகளை அடித்தே கொல்லலாம்.

தெர்மோகோல் துண்டுகளைச் சீனிப்பாகு அல்லது சர்க்கரைப் பாகில் தோய்த்து ஆங்காங்கே வைக்கலாம். இவற்றை உண்ணும் எலிகள் செரிக்க முடியாமல் செத்துப் போகும். எலிகள் அதிகமாக உள்ள இடங்களில் ஆட்கள் மூலம் பிடித்தும் அழிக்கலாம்.

நெல் வயலில் ஒருங்கிணைந்த எலிக் கட்டுப்பாடு: நெல் வயலின் 15 சதவீதக் குத்துகள் அல்லது 2 சதவீதச் சிம்புகள் சேதமாகி இருந்தாலும், கதிர் உருவாகும் முன் கீழ்க்காணும் எலிக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வயலில் உள்ள வரப்புகளைக் குறுகலாக அமைத்துக் கொள்வது அவசியம். எலிகள் மறைந்து தங்கி வாழ்வதற்கு உகந்ததாக இருக்கும் வைக்கோல் போர்கள் மற்றும் முள் செடிகளை அகற்ற வேண்டும்.

கதிர் வெளிவரும் போது, தஞ்சாவூர் எலிக்கிட்டிகளை ஏக்கருக்கு 20 வீதம் எடுத்து, வரப்பிலிருந்து 3 மீட்டர் தள்ளி, கிட்டிக்குக் கிட்டி 5 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும்.

எலிகளின் சேதம் அதிகமாக இருந்தால், ஜிங்க் பாஸ்பைடு அல்லது புரோமோடையலான் நச்சு மருந்தைப் பயன்படுத்த வேண்டும். எலிகளின் இயற்கை எதிரிகளான, பாம்பு, கீரி மற்றும் பறவை இனங்களைக் காக்க வேண்டும்.

வயல்களிலும் வரப்புகளிலும் T வடிவக் குச்சிகளை நட்டு, ஆந்தை போன்ற பறவைகளை இரவு நேரங்களில் அமர வைத்து எலிகளைக் கொல்லலாம்.

கோடையில் வயல்களில் உணவுப் பயிர்களே இல்லாத நிலையில், எலிகள் நச்சுணவை எளிதில் எடுத்துக் கொள்ளும் பக்குவத்தில் வைத்து எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

மேற்கூறிய கட்டுப்பாட்டு முறைகளைத் தனித்தனியாக மேற்கொள்ளாமல், ஒருங்கிணைந்த வகையில், அதாவது, ஒரு கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றாகச் சேர்ந்து சமுதாய நோக்குடன் கடைப்பிடித்தால் எலிகளைக் கணிசமாகக் கட்டுப்படுத்தலாம்.

எலிக்கொல்லி நச்சுகளை நேரடியாகப் பயன்படுத்தி எலிகளைக் கொல்ல இயலாது. எனவே, இவற்றை உணவில் கலந்து எலிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

எலிகள் விரும்பி உண்ணும் பொரி, தானிய வகைகள் அல்லது கருவாடு 97 கிராம், 1 மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் 2 கிராம் ஜிங்க் பாஸ்பைடைக் கலந்து பயன்படுத்த வேண்டும்.

இந்த நச்சுத்தீனியை வைப்பதற்கு முன், 2-3 நாட்களுக்கு நச்சு கலக்கப்படாத உணவை வைக்க வேண்டும். இதை ஏக்கருக்கு 10 இடங்களில் வைக்க வேண்டும்.

ஒரு இடத்தில் 15-20 கிராம், அதாவது, 3-4 தேக்கரண்டி வீதம் வைக்க வேண்டும். எஞ்சியுள்ள எலிகளைக் கட்டுப்படுத்த புரோமோடையலான் தயார் நிலை மருந்தைப் பயன்படுத்தலாம்.


எலி V.SANGEETHA

முனைவர் வி.சங்கீதா, முனைவர் வே.எ.நேதாஜி மாரியப்பன், முனைவர் மு.புனிதாவதி, வேளாண்மை அறிவியல் நிலையம், பெரம்பலூர். முனைவர் பெ.மோகனா, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading