My page - topic 1, topic 2, topic 3

தோப்பை நிறைத்தால் வருமானம் பெருகும்!

ன்று பெரும்பாலான தென்னை விவசாயிகள், தங்களின் தோப்புகளில் ஊடுபயிர் எதையும் செய்யாமல், அவ்வப்போது களைகளை அகற்றி விட்டுச் சுத்தமாக வைத்து உள்ளனர். இதைப் பெருமையாகவும் நினைத்துக் கொள்கின்றனர்.

ஆனால், உண்மை என்னவெனில், இவர்கள் தென்னை மரங்களுக்குக் கிடைக்கும் சத்துகளைச் சேர விடாமல் அகற்றி, நீர்த் தேவையைக் கூட்டுகிறார்கள் என்பது தான்.

மூடுபயிர் அல்லது நிலப்போர்வைப் பயிர் உள்ள தோப்புகளில், நிலத்து நீர் அதிகமாக ஆவியாவது இல்லை. தென்னந் தோப்புகளில் கிட்டத்தட்ட அறுபது வகையான ஊடுபயிர்களைப் பயிரிடும் சூழல் உள்ளது.

ஆனால், நீரை மட்டும் அவ்வப்போது பாய்ச்சுவது, மழைநீர்க் கிடைத்தால் தோப்புக்குள் விடுவது என்று கருதும் விவசாயிகள், தென்னையில் முழு மகசூல் திறனைக் கொண்டு வர முயல்வது இல்லை என்பதே உண்மை நிலையாகும்.

இன்னும் சிலர் தங்களின் தோப்புகளுக்குச் சொட்டுநீர் முறை சரியாக வராது என்றும், நிறைய நீரை விட வேண்டும் என்றும், தோப்புகளை வெள்ளக்காடாக ஆக்குவதும் முற்றிலும் அறியாமை ஆகும்.

ஏனெனில், தனக்கு வேண்டிய சத்துகளை அல்லது நீரை, நம்மைப் போல மூச்சு முட்ட, தொப்பை நிறைய எடுத்துக் கொள்ளும் உறுப்புகள், எந்தப் பயிருக்கும் இல்லை.

ஆக, அதிக நீர் என்பது, வேர்கள் சுவாசிப்பதை நிறுத்தி அதிர்ச்சியைத் தருவதும், வேருக்கு அருகில் இல்லாமல் நீர் வடிந்து கீழே சென்றதும் பயிர்கள் வறட்சிக்கு உள்ளாவதும் தான் உண்மை நிலையாகும்.

வளமான மேற்பரப்பில் வெள்ளம் போல நீரை நிறுத்தும் போது, பள்ளம் நோக்கிச் சத்துகள் அடித்துச் செல்லப் படுவதும் நடக்கும்.

எனவே, தீவனப்புல், கொள்ளு, தக்கைப் பூண்டு, சணப்பை, செடியவரை, கொத்தவரை, வெட்டிவேர், மலர்கள், காய்கறிகள், கிழங்கு வகைகள், சில்வர் ஓக், கறிப்பலா, துரியன், காபி, கொக்கோ, ஏலக்காய், மிளகு, மஞ்சள், இஞ்சி, அன்னாசி, வாழை என,

ஏதேனும் சிலவற்றை, தென்னை விவசாயிகள் ஊடுபயிராக இட்டுப் பணம் பண்ண வேண்டும். இதை உடனே செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98420 07125 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


முனைவர் பா.இளங்கோவன், இணை இயக்குநர் மற்றும் பேராசிரியர், பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி – 620 015.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks