நம்மில் பலருக்கு நாய்க்குட்டி என்றால் கொள்ளைப் பிரியமாக இருக்கும். குறிப்பாக, குழந்தைகள் நாய்க் குட்டியைத் தூக்கவும், கொஞ்சவும், அதனுடன் விளையாடவும் ஆசைப்படுவர்.
இது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், ஒரு நாய்க் குட்டியை முறையாக வளர்த்தால் தான் இந்த மகிழ்ச்சி நிலையானதாக இருக்கும்.
நாய் வளர்ப்பு, பொழுது போக்குக்கு என்பதைக் கடந்து, அதனால் நாம் அடையும் பயனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, வீட்டுக் காவலுக்கு, தோட்டக் காவலுக்கு, நாய் மிகப் பொருத்தமானது. இதை வைத்துத் தான் நாய் வளர்ப்பில் ஈடுபடுகிறோம்.
எனவே, தன் தாயைப் பிரிந்து, உடன் பிறப்புகளைப் பிரிந்து, பிறப்பிடத்தை விட்டு, புதிய இடத்துக்கு வந்து,
நம் குடும்பத்தில் ஓர் அங்கமாக இருக்கப் போகும் நாய்க் குட்டியை, எப்படி வளர்க்க வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நாய்க் குட்டியின் இருப்பிடம்
நாய்க் குட்டியை வீட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன், அது தங்கும் அறை அல்லது இடத்தைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
மின் கம்பி மற்றும் மின் பொருளை, நாய்க் குட்டிக்கு எட்டாத இடத்தில் அல்லது உயரத்தில் மறைத்து வைக்க வேண்டும்.
தேவையற்ற பொருள்களை, அலமாரி அல்லது அறைக்குள் வைப்பது நல்லது.
வீட்டுக்குத் தேவைப்படும் நச்சுப் பொருள்களான எலிக்கொல்லி மருந்து, கரையான் கொல்லி, விவசாயத்தில் பயன்படும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி போன்றவை, நாய்க் குட்டிக்கு எட்டாத பகுதியில் இருக்க வேண்டும்.
வீட்டைச் சுற்றி வேலியாக அமைத்துள்ள வலை அல்லது தடுப்பானில் ஓட்டையேதும் இருந்தால் சரி செய்து வைக்க வேண்டும்.
நாய்க்குட்டி வளர்ப்புக்கான பொருள்கள்
நாய்க் குட்டியை வீட்டுக்குக் கொண்டு வந்ததும், நனைந்த துணியால் அதன் உடம்பை நன்கு துடைத்து விட வேண்டும்.
ஒட்டுண்ணி ஏதும் இருப்பின் எடுத்து விட வேண்டும். தேவைப்படின் மருந்துக் குளியல் செய்து விடலாம்.
வளரும் நாய்க்குட்டி, பற்களின் வளர்ச்சிக் காரணமாகக் கண்டதைக் கடிக்கும்.
எனவே, நெகிழிப் பொருள்களைத் தவிர்த்து, உலோகப் பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது.
ஏனெனில், இவை எளிதில் உடையாது; துருப் பிடிக்காது; கழுவி வைக்கவும் ஏதுவாக இருக்கும்.
கூடிய வரை, நாயக் குட்டிக்குப் பயன்படும் பொருள்களை, தனியிடத்தில் வைக்க வேண்டும்.
அமைதியான மற்றும் உடலுக்கு ஏற்ற இடத்தை நாய்க் குட்டிக்கு ஒதுக்கி, மெல்லிய படுக்கையை அமைத்துத் தர வேண்டும்.
உடலுக்குச் சூட்டைத் தரும் பொருள்களை அறவே தவிர்க்க வேண்டும். நாய்க்குட்டி விளையாட, சின்னச் சின்ன விளையாட்டுப் பொருள்களை வாங்கி வைக்க வேண்டும்.
வீட்டில் அல்லது தோட்டத்தில் வளரும் நாய், அதிக விளையாட்டுத் தன்மையுடன் இருக்கும்.
எனவே, நாயைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள, குட்டியாக இருக்கும் போதே, அதற்குக் கழுத்துப் பட்டை மற்றும் உடற் பட்டையை அணிந்து விட வேண்டும்.
மேலும், வளர்ந்த நாயைக் கட்டுப்படுத்த, சிறுவயது முதலே சிறு சிறு சொற்களைச் சொல்லியும், செல்லப் பெயர் வைத்தும் அழைக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை சீப்பால் வாரிவிட்டு, நாய் முடிகளைப் பராமரிக்க வேண்டும். இதனால், தோல் நோய் மற்றும் முடி உதிர்வைத் தவிர்க்கலாம்.
உணவுகள்
நாய்க் குட்டிக்கு எளிதில் செரிக்கும், பால் சோறு, பருப்புச் சோறு, தயிர்ச் சோறு, பாலுடன் ரொட்டி, பிஸ்கட் போன்றவற்றைத் தரலாம்.
உணவில் உப்பைச் சேர்க்கலாம். ஆனால், காரம் இருக்கக் கூடாது. ஒரு நாளைக்கு 5-6 முறை உணவளிக்க வேண்டும்.
குறைந்த அளவில் பலமுறை உணவை அளித்தால், குட்டியின் செரிக்கும் திறன் சரியாக இருக்கும்.
குட்டியின் பற்கள் வளரும் காலத்தில் எலும்புத் துண்டுகள் போன்ற கடினமான பொருள்களைக் கொடுக்கக் கூடாது.
ஆறு மாதம் கடந்த பிறகு எலும்புத் துண்டுகளை அளிக்கலாம். அதுவரை நன்கு வேக வைத்த இறைச்சி சூப்பைத் தரலாம்.
இனிப்பு வகைகளை அளவாகத் தரலாம். ஆனால் சாக்லேட் மற்றும் கேக்கைத் தவிர்க்க வேண்டும்.
தோல் மற்றும் விதைகளை நீக்கிய பழங்களைத் தரலாம். தேவைப்படின் சாறாகப் பிழிந்தும் தரலாம்.
திராட்சைப் பழ விதைகள், ஆப்பிள் விதைகள், பூனை மற்றும் நாய்களுக்கு நஞ்சாக அமையும். எனவே, அவற்றைத் தரக்கூடாது.
அவ்வப்போது கால்நடை மருத்துவரை அணுகி, நாய்க் குட்டியின் உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.
குடற்புழு நீக்க மருந்து மற்றும் நோய்த் தடுப்பூசிகளைப் போட்டுப் பேணிக் காக்க வேண்டும்.
மரு.மா.வெங்கடேசன், முனைவர் நா.பிரேமலதா, கால்நடை சிகிச்சைத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு – 614 625.
சந்தேகமா? கேளுங்கள்!