My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மையில் வானிலை முன்னறிவிப்பின் பங்கு!

வேளாண்மையில் பருவ மாற்றம் மற்றும் பாதகமான நிலையால் ஏற்படும் இழப்பை முழுமையாகத் தவிர்க்க முடியாது.

எனினும், இத்தகைய சூழலை முன்கூட்டியே அறிந்தால், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம், பயிர்களை ஓரளவு காக்க முடியும்.

இதற்கு வானிலை முன்னறிவிப்பு மிகவும் உதவியாக இருக்கிறது.

இந்த வானிலை முன்னறிவிப்பு, குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு, மத்திய கால வானிலை முன்னறிவிப்பு, நீண்டகால வானிலை முன்னறிவிப்பு என, மூன்று விதமாக வழங்கப்படுகிறது.

குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு

அடுத்து வரும் மூன்று நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதைக் குறுகிய கால வானிலை அறிவிப்பின் மூலம் அறியலாம்.

இது, 70-80 சதம் நம்பகத் தன்மை உடையதாக இருக்கும். இதில், மழை, வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் வீசும் திசை, மேகமூட்டம்,

காற்றில் இருக்கும் ஈரப்பதம், சூரியவொளி கிடைக்கும் நேரம் போன்றவற்றை அறியலாம்.

இந்தத் தகவல்களைக் கொண்டு, விவசாயத்தில் அன்றாடம் நிகழும் வேலைகளை விரைந்து செய்யலாம் அல்லது தள்ளிப் போடலாம்.

இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு எவ்வகையில் பயன்படும் என்பதற்குச் சில எடுத்துக் காட்டுகள்:

வரும் நாட்களில் மழை எதிர்பார்க்கப் படுகிறது என அறிவித்தால், பாசனத்தைத் தள்ளிப் போடலாம்.

பயிர்ப் பாதுகாப்புக் கருதி, பூச்சி, பூசண மருந்துகளைத் தெளிப்பதை 2-3 நாட்கள் கழித்துச் செய்யலாம்.

நல்ல வெய்யில் இருக்கும் என்று அறிவித்தால், அறுவடை, விளை பொருள்களைக் காய வைத்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம்.

மத்திய கால வானிலை முன்னறிவிப்பு

அடுத்த ஐந்து நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பதை மத்திய கால வானிலை முன்னறிவிப்பு மூலம் அறியலாம்.

இது, வரும் நாட்களில் ஏற்படும் அதிகளவு மற்றும் குறைந்தளவு வெப்பநிலை, மழையளவு, மேக மூட்டம், காற்றின் வேகம் மற்றும் வீசும் திசை ஆகியவற்றைத் தெரிவிக்கும்.

பயிர்களின் நிலையை அறிந்து, மாறுபடும் வானிலைக்கு ஏற்ப, வேளாண் பரிந்துரைகளை எடுத்துக் கூறும்.

இந்த அறிவிப்பு 60-70 சதம் நம்பகத் தன்மை உடையதாகும்.

இந்த அறிவிப்பு, விதைக்க அல்லது விதைப்பைத் தள்ளிப் போட உதவியாக இருக்கும்.

அடுத்த ஒரு வாரத்தில் மழை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தால், மானாவாரி நிலங்களில் விதைப்பு வேலையைச் செய்யலாம்.

மழை வருவதற்கு வாய்ப்பில்லை எனில், மருந்துத் தெளிப்புப் போன்ற பயிர்ப் பாதுகாப்பு வேலையில் ஈடுபடலாம்.

வேலையாட்கள், பண்ணை இயந்திரம், தெளிப்பான் போன்ற கருவிகளை உரிய அளவில் பயன்படுத்தலாம்.

உரமிடுதல் மற்றும் அறுவடை செய்யும் காலத்தை முடிவு செய்யலாம்.

நீண்டகால வானிலை முன்னறிவிப்பு

பத்து நாட்கள் முதல் ஒரு பருவம் வரையில் வானிலையில் ஏற்படும் மாற்றங்களை, நீண்டகால வானிலை முன்னறிவிப்பு மூலம் அறியலாம்.

விவசாயத்தில் குறிப்பிட்ட சில உத்திகளைப் பயன்படுத்த, இந்த அறிவிப்பு உதவுகிறது. இந்த அறிவிப்பு 50-60 சதம் நம்பகத் தன்மை மிக்கது.

எதிர்பார்க்கும் பருவநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, சாகுபடிப் பயிர்களை முடிவு செய்யலாம்.

பயிர் நிர்வாகத்தைத் திட்டமிடவும் இந்த அறிவிப்புப் பயன்படுகிறது.

இந்த மூவகை வானிலை முன்னறிவிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால், மத்திய கால வானிலை முன்னறிவிப்பு, விவசாயிகளுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.

விவசாயத்தில் உழைப்பும் பணமும் வீணாவதைத் தவிர்த்து, நல்ல மகசூலை எடுப்பதற்கு, வானிலை முன்னறிப்பு உதவுகிறது.


முனைவர் ம.வெங்கடேஸ்வரி, முனைவர் ப.பாலசுப்பிர மணியன், முனைவர் தி.பாலாஜி, முனைவர் ஜெ.இராம்குமார், முனைவர் ஆ.கலைச்செல்வன், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம், முனைவர் சி.அருள்பிரசாத், வேளாண்மை அறிவியல் நிலையம், திருவள்ளூர்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks