செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.
ஒரு தொழிலின் உட்பொருள்கள், இணைப் பொருள்கள், கழிவுப் பொருள்கள் மூலம், உற்பத்திச் செலவைக் குறைத்து, கூடுதல் வருவாயைப் பெறுவது என்னும் நோக்கத்தில் அமைந்தது தான், பாசனக்குளப் பராமரிப்பு மற்றும் அதைச் சார்ந்த விவசாயத்துக்கு ஏற்ற இணைத் தொழிலாக விளங்கும் மீன் வளர்ப்பு.
எத்தகைய நீர் நிலையிலும் மீன்களை வளர்க்க முடியும் என்னும் அளவில், மீன் வளர்ப்புத் தொழில் நுட்பம் பெருகியுள்ளது. அதனால், பாசனக் குளங்களில் மீன்களை வளர்த்து, நாட்டின் புரதத் தேவையைச் சரி செய்யலாம்; குளப் பராமரிப்புச் செலவை ஈடுகட்டலாம்; அதிகமான வருமானத்தை அடையலாம்.
வாய்ப்பு வரம்புகள்
குறிப்பிட்ட ஓர் இடத்தில் குளத்தை வெட்டி நீரை நிரப்பி மீன்களை வளர்க்கும் போது, நீரின் அளவு, களைச்செடிகள், களை மீன்கள் மற்றும் நீரின் உற்பத்தித் திறனை, மீன் வளர்ப்புக்கு ஏற்ப, நம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆனால், பாசனக் குளங்களில் களைகள், களை மீன்கள் ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை. மீன்களை வளர்க்கும் வகையில் பாசனக் குளங்களை அமைத்துக் கொள்வது அவசியம்.
நீர் நிலையின் கொள்ளளவு, வெவ்வேறு காலங்களில் வெளியேற்றும் நீரின் அளவு ஆகியன, பாசனத்தை ஒட்டியே அமைவதால், எந்தெந்தக் காலத்தில் குளத்தில் எவ்வளவு நீர் இருக்கும் என்பதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப மீன்களை இருப்பு வைக்க வேண்டும்.
மீன்களை இருப்பு வைத்தல்
பாசனக் குளங்களில் களை மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களை உணவாகக் கொள்ளும் விரால், கெளுத்தி போன்ற மீன்களை, களையும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, விரலளவு மீன் குஞ்சுகளை இருப்பு வைப்பதற்குப் பதிலாக, அவற்றை மேலும் வளர்த்து இருப்பு வைத்தால், அதிகளவில் மீன்கள் திரும்பக் கிடைக்கும்.
பாசனக் குளங்களில் அதிவேக வளர்ச்சிக் கெண்டைகளான, கட்லா, ரோகு, மிர்கால், சாதாக் கெண்டை, வெள்ளிக் கெண்டை மற்றும் புல் கெண்டை மீன்களை வளர்க்கலாம். இவற்றில், கட்லாவும், வெள்ளிக் கெண்டையும் நீரின் மேற்பரப்பிலும், ரோகு நடுப்பரப்பிலும், சாதாக்கெண்டை, மிர்கால் ஆகியன நீரின் அடியிலும் வாழும்.
கட்லா மீன்கள், விலங்கின நுண்ணுயிர்களையும், ரோகு மீன்கள், இடைப்பரப்பில் உள்ள உயிரிகளையும், மிர்கால், சாதாக்கெண்டை மீன்கள், அடிப்பரப்பில் உள்ள உயிரிகளையும் சார்ந்து வாழும். புல் கெண்டை மீன்கள், கரையோரப் புல், பூண்டை உண்டு வாழும்.
கூட்டு மீன் வளர்ப்பில் ஒரு எக்டர் குளத்தில், மூவாயிரம் முதல் பத்தாயிரம் குஞ்சுகள் வரை வளர்க்கிறார்கள். பாசனக் குளத்தில் அடிக்கடி நீரை மாற்றுவதால், உரமிடல் அதிகப் பலனைத் தராது. மேலும், நீரின் தரத்தைக் கட்டுக்குள் வைப்பது கடினம்.
எனவே, குறைந்தது ஒரு எக்டரில் மூவாயிரம் குஞ்சுகள் வீதம் இருப்பு வைத்து வளர்த்தால், நீரானது குறையும் போது, மீன்கள் மடிவதைத் தவிர்க்கலாம். மேலும், மீன்கள் நன்கு வளர்வதால், அதிக உற்பத்தியைப் பெற இயலும்.
இவற்றில், மிர்கால், சாதாக்கெண்டை மீன்கள் நீரின் அடியிலேயே இருப்பதால், அவற்றைப் பிடிப்பது சற்றுக் கடினம். எனவே, இந்த மீன்களைக் குறைந்தளவில் தான் இருப்பு வைக்க வேண்டும். ஒரு குளத்தில் அதன் உயிர் உணவு உற்பத்தித் திறனுக்கு ஏற்ப, மீன் வகைகளை இருப்பு வைக்க வேண்டும்.
அதாவது, நூறு மீன்களை வளர்க்க நினைத்தால், கட்லா 20, வெள்ளிக் கெண்டை 15, ரோகு 25, மிர்கால் 10, சாதாக்கெண்டை 10, புல்கெண்டை 20 வீதம் இருப்பு வைத்து வளர்க்க வேண்டும்.
பராமரிப்பு
பாசனக் குளத்தில் மீன்களைப் பராமரிப்பது எளிதான காரியம் அல்ல என்றாலும், சில உத்திகளைக் கடைப்பிடித்தால், உற்பத்திக் குறைவைத் தடுக்க முடியும். நீரானது உள்ளே வரும் பகுதி மற்றும் வெளியேறும் பகுதியில் வலைகளைக் கட்டி, அடுத்த இடத்து மீன்கள் உள்ளே வருவதையும், வளர்ப்பு மீன்கள் வெளியேறுவதையும் தடுக்க வேண்டும்.
சிறிய பாசனக் குளமாக இருப்பின், எக்டருக்கு மாதம் ஆயிரம் கிலோ சாணம் வீதம், ஆறு மாதங்கள் இடலாம். குளத்தில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு, 15 நாட்களுக்கு முன் இட வேண்டும்.
கரையோரத்தில் புல்லை வளர்ப்பது, புல் கெண்டைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், இந்தப் புல்லை மேயும் மாடுகளின் சாணமும் குளத்துக்கு உரமாகும். மிகச்சிறிய குளத்தில் தவிடு, புண்ணாக்குக் கலந்த உணவை, மீன்களின் எடையில் ஒரு சதம் அளவில் தரலாம்.
மீன்கள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, வாத்துகளைக் குளத்தில் நீந்தவும், களை மீன்களை உண்ணவும் விடலாம். இதனால், வாத்துகளின் கழிவு, மீன்களுக்கு நல்ல உணவாக, உரமாகப் பயன்படும்.
நகர, கிராமக் கழிவுநீரைக் குளத்தில் கலப்பதன் மூலம், மீன் உற்பத்தித் திறனைப் பெருக்கலாம். எனினும் இது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். ஏனெனில், கழிவுநீரின் அளவு சிறிது கூடினாலும், மீன்கள் இறக்கும் வாய்ப்புண்டு. கழிவுநீரைக் கொண்டு மீன்களை வளர்ப்பதால், சுகாதாரக்குறை ஏதும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீச்சு வலையைக் கொண்டு பல இடங்களில் வீசிப் பார்த்து, மீன்களின் வளர்ச்சித் திறனை அறிந்து கொள்ளலாம். சிறிய குளத்தில் வளரும் மீன்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால், எக்டருக்கு 200 கிலோ சுண்ணாம்பு வீதம் இடலாம். இதன் மூலம், குளத்தின் கார அமிலத் தன்மை 7-8 வரை இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். சுண்ணாம்பை ஒரே இடத்தில் இடாமல், பிரித்தும், தகுந்த கால இடைவெளி விட்டும் இடுவது அவசியம்.
குளத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் லெம்னா, அசோலா போன்ற தாவரங்களை வளர்ப்பதன் மூலம், குளத்தின் தழைச்சத்தை அதிகப்படுத்தலாம். மணிச்சத்துக் குறையுள்ள சிறிய குளங்களில், சூப்பர் பாஸ்பேட்டை, எக்டருக்கு 250 கிலோ வீதம் தக்க கால இடைவெளியில் இட வேண்டும்.
மீன்களுக்கு உறைவிடம் மற்றும் காப்பிடமாக இருக்க, பழைய டயர்கள், கான்கிரீட் பிளாக்குகள் மூலம் மறைவிடங்களை அமைக்கலாம். இவற்றால், நீரின் தரம் உயரும் வாய்ப்புகளும் உள்ளன.
மீன்பிடிப்பு
பாசனக்குள மீன்களைப் பெரும்பாலும், குளம் காயும் போது பிடிப்பது தான் வழக்கம். ஆனால், மொத்தமாக மீன்களைப் பிடித்தால், அதிகளவில் மீன்கள் கெடுவதுடன், விலையும் குறைவாகவே கிடைக்கும். எனவே, செவிள் கண்ணி வலை மூலம் அவ்வப்போது பிடித்து விற்றால் நல்ல விலையும், மற்ற மீன்கள் நன்கு வளரும் வாய்ப்பும் கிடைக்கும்.
எனவே, குளத்தில் நீர் அதிக நாட்களுக்கு இருக்கும் வாய்ப்பு இருந்தால், தொடர் இருப்பு, தொடர் பிடிப்பு முறையை மேற்கொண்டு, குளத்தின் உற்பத்தித் திறனைப் பன்மடங்கு பெருக்கலாம்.
காவல் காத்தல்
நீருக்குள் இருப்பது கண்ணுக்குத் தெரியாது. அதனால், மீன்கள் திருடு போகும் வாய்ப்புகள் அதிகம். எனவே, மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர், கூட்டுப் பண்ணை அமைப்பை மேற்கொண்டு, பாசனக்குளப் பண்ணைப் பங்காளர்கள் அனைவரும் முறைப்படி காவல் காப்பதும் மிகவும் முக்கியமாகும்.
முனைவர் கி.சிவக்குமார், முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!