My page - topic 1, topic 2, topic 3

மீன் உணவில் பயன்படும் பட்டுப்புழுத் தூள்!

லகளவில் முதன் முதலில் சீனம் தான் பட்டுப்புழு வளர்ப்பைத் தொடங்கியது.

பிறகு, இது மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலகளவில் சீனம் 57.5 சதப் பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது.

அடுத்து, ஜப்பான் 13.2 சதம், இந்தியா 10.3 சதம், தென் கொரியா 5.4 சதம், தாய்லாந்து 2.1 சதம் பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்து வருகின்றன.

எஃப்.ஏ.ஓ.யின் கணக்குப்படி, 2011 இல் உலகில் 4,85,000 டன் பட்டுப்புழுக் கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

தற்போது பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா, பட்டு நுகர்வில் முதலிடத்தில் உள்ளது.

பலவகையான பட்டுப் புழுக்களில், மல்பெரி பட்டுப் புழுக்கள் முக்கிய இனமாகும்.

இந்தியாவின் மொத்த பட்டு உற்பத்தியில், மல்பெரி பட்டுப் புழுக்களின் பங்கு முக்கியமானது.

பட்டுப்புழு ஓடுகள்

பட்டு நூல் உற்பத்திக்குப் பிறகு கழிவாக நிற்கும், பட்டுக்கூடு ஓடுகளில் புரதம் அதிகமாக உள்ளது.

அதாவது, 50-71 சதம் புரதமும், 30 சதம் கொழுப்பும் இந்த ஓடுகளில் உள்ளன.

இத்தகைய புரதமிக்க பட்டுப்புழு ஓடுகளை, விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக, கோழி, மீன், பன்றி போன்ற விலங்குகளுக்கு, இந்த ஓடுகளைத் தூளாக்கிக் கொடுக்கலாம். இதில் அமினோ அமிலங்களும் இருப்பது கூடுதல் சிறப்பு.

எனவே, குறைந்த விலையில் எளிதில் கிடைக்கும் பட்டுக்கூடு ஓடுகளைத் தூளாக்கி, மீன்களுக்குத் தந்தால், மீன் வளர்ப்புச் செலவைக் குறைக்கலாம்.

பட்டுப்புழுத் தூளிலுள்ள சத்துகள்

பட்டுப்புழுத் தூளில் புரதம் 50 சதம், கொழுப்பு 25 சதம், நீர் 50 சதம், நார்ச்சத்து 3.4 சதம் உள்ளன.

ஆனால், பட்டுப் புழுவை உற்பத்தி செய்யும் முறையைப் பொறுத்து, இந்தச் சத்துகளின் அளவுகள் மாறுபடும்.

எ.கா: அவனில் உலர்த்திய பட்டுப் புழுக்கள் மூலம் கிடைத்த தூளில் 47.9 சதம் புரதம், 27 சதம் கொழுப்பு, 3.4 சதம் நார்ச்சத்து இருந்தன.

இவற்றைத் தவிர இந்தத் தூளில், மீதியோனைன், அர்ஜினைன் போன்ற அமினோ அமிலங்களும் உள்ளன.

எனவே, விலங்குகள் மற்றும் மீன்களின் சிறந்த புரத உணவாக அமைகிறது.

இதைப் போல, கொழுப்பு நீக்கப்பட்ட பட்டுப்புழுத் தூளிலுள்ள புரதம், சாதாரணப் பட்டுப்புழுத் தூளில் உள்ளதை விட அதிகமாகும்.

இதில், 68.7 சதம் புரதம், 2.5 சதம் கொழுப்பு, 4 சதம் நார்சத்து உள்ளன. இதிலும் அமினோ அமிலங்கள் இருப்பதால், இந்தப் பட்டுப்புழுத் தூளையும் மீன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம்.

பட்டுப் புழுக்களின் வாழ்க்கை

பட்டுப் புழுக்கள் இனச் சேர்க்கைக்குப் பிறகு ஆயிரக் கணக்கில் முட்டைகளை இடும். இந்த முட்டைகள் பொரிப்பதற்குக் கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகும்.

இவற்றில் இருந்து வெளிவரும் பட்டுப் புழுக்கள், வெண் முசுக்கொட்டை இலைகளை விரும்பி உண்ணும்.

ஆனாலும், இவை மொரேசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில், வேறு சில இனங்களையும் உண்ணும்.

பட்டுப் பூச்சிகள் இடும் முட்டைகள் பொரிந்து உருவாகும் முதல் நிலைப் புழுக்கள் கேகோ என்றும், இந்தியாவில் சாவ்க்கி என்றும் கூறப்படுகின்றன.

இவற்றின் உடலில் கறுப்பு மயிர்கள் மிகக் குறுகிய அளவில் இருக்கும்.

இந்தப் புழுக்களின் தலை கறுப்பாக மாறத் தொடங்கும் போது, வெளித் தோலை இழந்து இரண்டாம் நிலைக்குத் தயாராகும்.

அடுத்த வளர் நிலைகள் வெள்ளை நிறத்தில், மயிர்களற்ற உடலுடன், முதுகில் கொம்பைப் போன்ற அமைப்புடன் காணப்படும்.

நான்காம் தோலுரிப்பு முடிந்து ஐந்தாம் நிலைக்கு வரும் போது, அதன் நிறம் வெளிர் மஞ்சளாகி விடும்; தோலில் இறுக்கம் ஏற்படும்.

மேலும், அதன் உமிழ்நீர்ச் சுரப்பியில் இருந்து சுரக்கும் திரவத்தின் மூலம் தன்னைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்கும்.

இந்தக் கூடுதான் அசையாத நிலையில் இருக்கும் போது, கூட்டுப் புழுவுக்குப் பாதுகாப்பை வழங்கும்.

செதில் இறகி வரிசையிலுள்ள பல பூச்சி இனங்கள் இவ்வகைக் கூட்டை உருவாக்கும்.

எனினும், பட்டுப் பூச்சியைப் போன்ற ஒருசில பூச்சிகள் உருவாக்கும் கூடுகள் மட்டுமே, ஆடைத் தயாரிப்பில் பயன்படுகின்றன.

இந்தக் கூடானது 300-900 மீட்டர் நீளப் பட்டு நூலால் ஆனது. இந்த நூல் பத்து மைக்ரோ விட்டத்தில் மிகவும் மெல்லியதாக, பளபளப்பாக இருக்கும்.

ஒரு பவுண்டு எடையுள்ள பட்டைத் தயாரிக்க, 2,000- 3,000 கூடுகள் தேவைப்படும்.

ஆண்டுக்கு 10 பில்லியன் கூடுகளில் இருந்து, 70 மில்லியன் பவுண்டு பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

வகைகள்

தற்போது இந்தியாவில் பட்டு உற்பத்திக்கு என, மல்பெரி, டசார், முகா, எரி ஆகிய நான்கு வகை பட்டுப் புழுக்கள் வளர்க்கப் படுகின்றன.

இவற்றில், இந்தியாவின் 80 சதப் பட்டு உற்பத்திக்கு, மல்பெரி பட்டுப் புழுக்கள் தான் பெரும் பங்கு வகிக்கின்றன.

நன்னீர் மீன் வளர்ப்பில் பட்டுப்புழுத் தூளின் பங்கு

சிறந்த புரத ஆதாரமாகத் திகழும் பட்டுப்புழுத் தூளை, கெண்டை மீன் இனங்களின் உணவுகளில் சேர்க்கலாம்.

கட்லா, ரோகு போன்ற கெண்டை மீன்களின் உணவுகளில் சேர்த்தால், அவற்றின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

கட்லா மீன்களின் உணவில் கொழுப்பு நீக்கிய பட்டுப்புழுத் தூளை 30 சதம் சேர்த்தால், அவற்றின் இறுதி உடல் எடை, சாதாரண உணவு அளிக்கப்பட்ட மீன்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.

அதைப் போல, ரோகு மீன்கள் உணவில் 50 சதப் பட்டுப்புழுத் தூளைச் சேர்த்தால், அவற்றின் வளர்ச்சியும் உண்ணும் திறனும் கூடும்.

சாதாக் கெண்டை மீன் இனங்கள் உணவில், பட்டுப்புழுத் தூளை, சிப்பி ஓட்டுச்சதை மற்றும் இறால் தூளைச் சேர்த்துக் கொடுத்தால், வளர்ச்சி மிகும்.

கட்லா விரலளவுக் குஞ்சுகளின் உணவில், மீன் தூளுக்கு மாற்றாக, 100 சதம் பட்டுப்புழுத் தூளைச் சேர்க்கலாம்.

புல் கெண்டை மீன்களின் வேகமான வளர்ச்சிக்கும், பட்டுப்புழுத் தூள் சிறந்த உணவாகும்.

ட்ரௌட் மீன்களின் உணவில் 10-15 சதப் பட்டுப்புழுத் தூளைச் சேர்த்தால், நல்ல வளர்ச்சி இருக்கும்.

மாஹ்சீர் மீன்களின் உணவில் 50 சதப் பட்டுப்புழுத் தூளைச் சேர்த்து, உணவுச் செலவைக் குறைக்கலாம்.

சில்வர் பார்ப், ரெட் ஜீப்ரா ஆகிய நன்னீர் அழகு மீன்களின் உணவில் முறையே, 38 சதம் மற்றும் 60 சதம் அளவில் பட்டுப்புழுத் தூளைச் சேர்த்தால், நல்ல வளர்ச்சியும் அழகான நிறங்களும் கிடைக்கும்.

கடல் மீன் வளர்ப்பில் பட்டுப்புழுத் தூளின் பங்கு

நன்னீர் மீன்கள் வளர்ப்பில் மட்டுமின்றி, கடல் மீன் வளர்ப்பிலும் பட்டுப்புழுத் தூள் பெரும்பங்கு வகிக்கிறது.

குறிப்பாக, ஜப்பானில் கொடுவா மீன் உணவில் பட்டுப்புழுத் தூளைச் சேர்ப்பதால், அந்த மீன்கள் நல்ல வளர்ச்சி மற்றும் சிறந்த செரிமானத் திறனைப் பெறுகின்றன.

எனவே, புரதமிக்க பட்டுப்புழுத் தூளை, மீன்களின் உணவில் 50 சதம் வரை சேர்த்து, அவற்றை வேகமாக வளர வைத்து, எடையைக் கூட்டலாம்.

புரதத்துடன் கொழுப்பு, வைட்டமின், தாதுகள் போன்ற சத்துகளும் பட்டுப்புழுத் தூளில் இருப்பதால், மீன் உணவுகளில் இதைச் சேர்ப்பது மிகவும் நல்லது.


ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ்சபரி, முனைவர் சா.ஆனந்த், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு – 638 451.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks