My page - topic 1, topic 2, topic 3

கொய்க்கெண்டை விதைமீன் வளர்ப்பு!

கொய்க் கெண்டை மீன், நன்னீர் அலங்கார மீன் இனங்களில் முக்கிய மற்றும் எளிதில் இலாபம் தரும் மீனினம் ஆகும்.

கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இம்மீன், சாதாக் கெண்டை மீன்களின் நிறமாறிய இனமாகும்.

மேலும் இது, Cyprinus carpio haematopteru என்னும் மீனிலிருந்து உருவாக்கப் பட்டது.

ஜப்பானில், கொய் என்பதற்கு அன்பு அல்லது பாசம் என்று பொருள். எனவே, ஜப்பானில் இம்மீன் நட்பு மற்றும் காதல் சின்னமாகத் திகழ்கிறது.

தனது அழகான நிறங்களால் இம்மீன் எளிதாகப் பிரபலம் அடைகிறது. நிறம் மற்றும் செதில் அமைப்பை வைத்து, கொய் கெண்டை மீன்களை 20 வகைகளாகப் பிரிக்கலாம்.

இம்மீன்கள், 15-20 ஆண்டுகள் வாழும். ஆயுட் காலம் 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும்.

மேலும் 60-75 டிகிரி பாரன்ஹீட் வெட்ப நிலையில் நன்றாக வளரும்.

இதன் வளர்ப்பு நிலைகளில் விதைமீன் வளர்ப்பு நிலை முக்கியமானது. அலங்கார மீன் வளர்ப்போர் மற்றும் அலங்கார மீன் தொழில் புரிவோர்,

மீன் வளர்ப்பை முழுதாகக் கற்றுக் கொள்ளாமல் மீன் வளர்ப்பைச் செய்தால், பல மீன்கள் இறக்க நேரிடும்.

மேலும், விதைமீன் வளர்ப்பு நிலையில், சிறப்புப் பராமரிப்பும் கூடுதல் கவனமும் தேவை.

ஏனெனில், விதைமீன் வளர்ப்பு நிலை, மற்ற மீன் வளர்ப்பு நிலைகளைக் காட்டிலும் அதிகப் பாதிப்பைத் தரக் கூடியது.

இடத்தேர்வும் இருப்பு வைத்தலும்

விதைமீன் வளர்ப்பில், குட்டை அமைவிடம் மற்றும் இருப்பு அடர்த்திக்கு முக்கியப் பங்குண்டு.

கொய்க்கெண்டை விதை மீன்களை, குட்டைகள், தொட்டிகள் மற்றும் வலைத் தொட்டிகளில் வளர்க்கலாம்.

இவற்றின் ஆழம் 1.5 மீட்டர் இருக்க வேண்டும். மேலும், காற்றூதிகள் இருக்க வேண்டும்.

விதை மீன்களைக் குட்டை அல்லது தொட்டிகளில் விடுவதற்கு முன், அங்குள்ள தாவரங்கள் மற்றும் களை மீன்களை ஒழிக்க வேண்டும்.

பிறகு, ஏக்கருக்கு 80 கிலோ மாட்டுச் சாணம், 20 கிலோ சிங்கில் சூப்பர் பாஸ்பேட் வீதம் இட வேண்டும்.

மீன்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, அவற்றை இருப்பு வைக்க வேண்டும்.

அதிகமாக இருப்பு வைத்தால், மீன்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். மேலும், அவற்றுக்கு இடையில் பாதகமான விளைவுகள் உண்டாகும்.

கொய்க் கெண்டை விதை மீன்களின் சிறந்த இருப்படர்த்தி, சதுர மீட்டருக்கு 300 மீன்கள் ஆகும்.

மேலும், மீன்களைக் குளத்தில் விடுவதற்கு முன், குளச் சூழலுக்கு ஏற்ப, மீன்களை இணக்கம் செய்ய வேண்டும்.

உணவுப் பழக்கம்

கொய்க் கெண்டை மீன்கள் அனைத்து உண்ணி ஆகும். குட்டையின் அடியிலுள்ள பாசி, சிறு பூச்சி மற்றும் எல்லாத் தானிய வகைகளையும் உண்ணும்.

இந்த மீன்கள் குளத்தின் அடியில் இருந்து கொண்டு தான் உணவை உண்ணும்.

மேலும், குளிர் காலத்தில் இவற்றின் செரிமான அமைப்பு, மெதுவாக இயங்குவதால் செரிமானம் குறைவாக இருக்கும். எனவே, அப்போது இம்மீன்கள் குறைவாகவே உண்ணும்.

நீரின் தட்பவெட்ப நிலை 10 டிகிரி செல்சியஸ் இருந்தால் உணவைக் கொள்ளாது.

எனவே, குளிர் காலத்தில் நீரின் தட்பவெட்ப நிலை, கார அமிலத் தன்மை மற்றும் மூச்சுக் காற்றை முறையாகக் கண்காணிக்க வேண்டும்.

உணவு விகிதம்

விதைமீன் வளர்ப்பில் உணவு மற்றும் உணவு விகிதம், கவனத்தில் கொள்ளத் தக்கது.

இம்மீன்களின் மொத்த உடல் எடையில் 5 சத அளவு உணவை, 2-3 மாதங்கள் அளிக்க வேண்டும்.

சத்துத் தேவை

புரதம்: அனைத்து விலங்குத் திசுக்களுக்கும் புரதம் முக்கியத் தேவை. இது, ஆற்றலின் மூலதனம். மேலும், மீன் வளர்ச்சியை முடிவு செய்யும் பொருளும் ஆகும்.

விதை மீன்களின் புரதத் தேவை, முதிர்ந்த மீன்களைக் காட்டிலும் சற்று அதிகமாகும்.

எனவே, விதை மீன்களுக்குப் புரதம் நிறைந்த உணவைக் கொடுக்க வேண்டும். கொய்க் கெண்டை விதைமீன் உணவில் 35 சதம் புரதம் இருக்க வேண்டும்.

கொழுப்பு: திசுச் சவ்வுகள் மற்றும் செல் சவ்வுகள் உருவாகக் கொழுப்பு உதவுகிறது.

மேலும், இன முதிர்வுக்கு, குறிப்பாக, பெண் மீன்களின் கரு முட்டைகளை உருவாக்கும் மூலப் பொருளாகக் கொழுப்பு இருக்கிறது.

இத்தகைய சிறப்புமிகு கொழுப்பு, இம்மீன்களின் உணவில் 5-7 சதம் இருக்க வேண்டும். மேலும், இக்கொழுப்பு, மீன்கள் வளரவும், முதிரவும் உதவும்.

மாவுச்சத்து: மீன்களின் உணவில் மாவுச்சத்துத் தேவையில்லை. எனினும், இது ஆற்றலைத் தரும் மலிவான மூலப் பொருளாகத் திகழ்கிறது.

மேலும், இது புரதம் மற்றும் கொழுப்புச் சிதைமாற்ற வினை மூலம், ஆற்றலாக மாற்றும் செயலைப் புரிகிறது.

குளிர் மண்டல மீன்களை விட, வெப்ப மண்டல மீன்கள் தான் அதிகளவில் மாவுச்சத்தை எடுத்துக் கொள்கின்றன.

கொய்க் கெண்டை, பொன்மீன் போன்றவை, சிக்கலான மாவுச் சத்தை, குடலில் உள்ள நுண்ணுயிரிகள் மூலம் செரிக்கச் செய்கின்றன.

வைட்டமின்கள்: இவை, கரிமங்களின் சேர்மமாகும். அனைத்து உயிர்களும் இயங்க, குறைந்தளவில் தேவைப்படும்.

இவை மீன்களின் உடலில் உற்பத்தி ஆகாது என்பதால், உணவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

இதனால், வைட்டமின் குறையால் ஏற்படும் நோய்களில் இருந்து, மீன்களைக் காப்பாற்ற முடியும்.

தாதுப்புகள்: மீன்களின் திசு வளர்ச்சிக்கு, வளர்சிதை மாற்றத்தின் பல்வேறு செயல்களுக்கு, கனிமக் கூறுகளான தாதுப்புகள் அவசியம்.

சில மீன்கள் இயற்கையாக நீரிலுள்ள தாதுகளை எடுத்துக் கொள்ளும். தாதுப்புகளில் பாஸ்பரஸ் முக்கியமானது.

ஏனெனில், மீனின் வளர்ச்சி, எலும்பு உருவாதல், கொழுப்பு மற்றும் மாவுச் சத்தின் சிதை வினை மாற்றத்தில், இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும், அயன், ஜிங்க், மெக்னிசியம் போன்ற தாதுகளும் அலங்கார மீன்களின் வளர்ச்சிக்குத் தேவை.

எனவே, மீன் உணவில், தாதுக்குறை நோயிலிருந்து மீன்களைக் காக்கத் தேவையான தாதுப்புகளைச் சேர்க்க வேண்டும்.

கரோட்டினாய்டுகள்: கொய்க்கெண்டை போன்ற அலங்கார மீன்களின் சந்தை மதிப்பு அவற்றின் நிறத்தைப் பொறுத்தே அமையும்.

மீன்களின் தோல் மற்றும் தசை நிறத்தை அதிகரிக்க ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்ட கரோட்டி னாய்டுகள் பயன்படுகின்றன.

பீட்டா கரோட்டினாய்டு, லுட்டின், டாராசாந்தின், அஸ்டாசாந்தின், டுயுனா சாந்தின், ஜியாசாந்தின் போன்றவை நீரிலுள்ள கரோட்டினாய்டுகள் ஆகும்.

ஆனால், மீன்களால் இவற்றைத் தங்களின் உடலில் உற்பத்தி செய்ய இயலாது.

எனவே, இவற்றை அலங்கார மீன் உணவில் சேர்க்கும் போது, மீன்களின் நிறமும் தோற்றமும் சிறப்பாக அமையும்.

வண்ணமிகு அலங்கார மீன்கள் மேலும் அழகான தோற்றம் பெற, இந்த கரோட்டினாய்டுகளை, அவற்றின் உணவுகளில் சேர்க்க வேண்டும்.

கொய் விதை மீன்களின் உணவு

உயிரி உணவு: உயிரி உணவை, வாழும் சத்துமிகு காப்ஸ்யூல் எனக் கூறலாம். ஏனெனில், இதில் புரதம், கொழுப்பு, வைட்டமின், தாதுப்புகள் மற்றும் மாவுச்சத்து உள்ளது.

மேலும், நீர்ச்சூழலில் இது, மீன் வளர்ப்பில் மதிப்புமிகு மூலதனமாகத் திகழ்கிறது.

அனைத்து மீன்களின் வளர்ச்சி, இனப் பெருக்கத்தில், புரதம் மிகுந்த உயிரி, உணவு ஆதாரமாக இருக்கிறது.

உயிரி உணவுகள் பலவாக இருப்பினும் கொய்க் கெண்டை விதைமீன் வளர்ப்புக்குத் தேவைப்படும் முக்கிய உயிரி உணவுகள்:

நுண்ணுயிர்ப் பாசி, ஆர்ட்டெமியா, ரோட்டிஃபர், டாப்னியா, மொய்னா, செம்மயிர்ப் புழு மற்றும் இன்ஃபு சோரியா.

விலங்கின ஆதார உணவுகள்: இப்போது வரை மீன் தூள் தான் அனைத்து மீன் உணவுகளிலும் புரத ஆதாரமாகத் திகழ்கிறது.

ஏனெனில், இது புரதம், அமினோ அமிலம், மேம்பட்ட செரிப்புத் திறன் மிக்கதாக, சத்து எதிரிக் காரணிகள் குறைந்ததாக இருக்கிறது.

சந்தையில் எளிதாகக் கிடைக்கும் பொருளாகவும் இருந்தது. ஆனால், இப்போது கடல் மீன் பிடிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

எனவே, மீன் தூளின் உற்பத்திக் குறைந்தும், தேவையும் மதிப்பும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டும் உள்ளன.

இதனால், மீன் தூளுக்கு மாற்றாக வேறு விலங்கினப் புரதத்தை, மீன் உணவுகளில் சேர்ப்பது அவசியம்.

எனவே, பட்டுப்புழு, கறுப்புப் படைப் பூச்சி; நண்டு, இறால், சிங்கி இறால் ஓடுகளில் தயாராகும் உணவுகள் மற்றும் கோழியிறைச்சிக் கழிவில் தயாராகும் உணவுகளை,

மீன் தூளுக்கு மாற்றாக, மொத்தமாக அல்லது பகுதியாக, கொய்க் கெண்டை விதை மீன்களுக்குத் தரலாம்.

தாவர ஆதார உணவுகள்: விலங்கின உணவுகளின் விலையை விட, தாவர உணவுகள் குறைந்த விலையில் கிடைப்பதால், இவற்றையும் கொய்க் கெண்டை விதை மீன்களுக்குத் தரலாம்.

அவற்றில் சில: கடலைப் புண்ணாக்கு, அரிசித்தவிடு, சோயா மொச்சை மாவு, பருத்தி விதைப் புண்ணாக்கு, சூரியகாந்தி விதை மாவு, மக்காச்சோள மாவு, கோதுமை மாவு.

கொய் விதைமீன் வளர்ப்பும் நிர்வாகமும்

கொய்க் கெண்டைத் தாய் மீன்களில் ஹார்மோனைச் செலுத்தி இனப் பெருக்கம் நடக்கத் தூண்டலாம்.

ஊசியைச் செலுத்திய 4-6 மணி நேரத்தில் முட்டைகளை இட்டுக் கருவுறுதல் நடக்கும்.

3-5 நாட்களில் முட்டைகளில் இருந்து, 8 மி.மீ. அளவுள்ள குஞ்சுகள் வெளிவரும்.

இந்தக் குஞ்சுகளை ஐந்து நாட்கள் கழித்து, ஏக்கருக்கு 20 இலட்சம் வீதம் விடலாம்.

குளத்தில் விட்டு 15-20 நாட்களில், அவை 30-40 மி.மீ. அளவுள்ள குஞ்சுகளாக மாறும்.

இந்தக் குஞ்சுகளைப் பெரிய குளத்தில் அல்லது வலைத் தொட்டியில் வளர்த்தால், இரண்டு மாதத்தில் 5-6 செ.மீ. அளவை அடையும்.

இந்த அளவுள்ள மீன்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.

இளநிலை மற்றும் மேம்பட்ட குஞ்சுகளின் வாய் சிறியதாக இருப்பதால், பொடியாக உள்ள மீன்தூள், கடலைப் புண்ணாக்கு, அரிசித்தவிடு,

கோதுமை மாவு, வைட்டமின் மற்றும் தாதுப்புக் கலவையைக் கலந்து, மீன்களின் உடல் எடையில் 5 சத அளவில் வழங்க வேண்டும்.

மீன்களின் வேகமான வளர்ச்சிக்கு, பட்டுப்புழுத் தூள், கறுப்புப் படைப் பூச்சி இலார்வாத் தூள் ஆகியவற்றை, மீன் தூளுக்கு மாற்றாகத் தரலாம்.

மேலும், சாதாரண உணவை விட, இந்த மாற்றுத் தூள்கள், கொய் விதை மீன்களில் 50 சத கூடுதல் வளர்ச்சியை எட்டச் செய்யும்.

இந்தியாவில், அலங்கார மீன் வளர்ப்பு வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது.

எனவே, அனைத்து மீனின வளர்ப்பில் உள்ளோரும், முறையான விதைமீன் வளர்ப்பு, சத்துத் தேவைகள் மற்றும் நிர்வாகத்தைக் கற்றுச் செயல்பட்டால் அதிக வருவாயை ஈட்டலாம்.

மேலும், பூச்சி உணவுகளான பட்டுப்புழுத் தூள், கறுப்புப் படைப் பூச்சி இலார்வாத் தூள் ஆகியவற்றை, மீன் தூளுக்கு மாற்றுப் புரதமாக 50% வரை கொடுக்கலாம்.

இதனால், தரமான கொய்விதை மீன்களை வளர்த்து நல்ல இலாபத்தை அடையலாம்.


ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ் சபரி, முனைவர் சா.ஆனந்த், ஜெ.ஸ்டீபென் சம்பத்குமார், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர் – 638451. செரில் ஆண்டனி, டாக்டர் எம்.ஜி.ஆர்.மீன்வளக் கல்லூரி, பொன்னேரி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks