செர்ரிபார்ப் மீனின் அறிவியல் பெயர் புன்டியஸ் டிட்டேயா (Puntius titeya) எனப்படும். இது, சிப்ரினிடே குடும்பத்தைச் சார்ந்தது. இம்மீன்கள் தொட்டியின் மத்தியில் கூட்டமாக வாழும்.
பளபளக்கும் இந்த மீன்களால் தொட்டியின் நடுப்பரப்பு அழகாக இருக்கும். எனவே, செர்ரிபார்ப் மீன்களைத் தொட்டியில் கூட்டமாக வளர்க்க வேண்டும்.
இல்லையெனில், பயந்து மறைவான இடத்தில் ஒளிந்து கொள்ளும். தொட்டியில் ஆண், பெண் மீன்களை 1:2 வீதம் வளர்த்தால், எளிதில் வளர்ந்து இனப் பெருக்கம் செய்யும்.
அதைவிடக் குறைவான வீதத்தில் விட்டால், பெண் மீன்களை ஆண் மீன்கள் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும்.
அமைப்பு
ஆண் மீன்களின் உடல் நீளமாக, மெல்லியதாக, கருஞ்சிவப்பு மற்றும் பளபளக்கும் நிறங்களில் இருக்கும்.
உடலின் பக்கவாட்டில், தலை முதல் வால் வரையில் கறுப்புக் கோடு இருக்கும். இரண்டு அங்குலம் நீளம் வரையில் வளரும்.
பெண் மீன்கள் வெளிர் சிவப்பாக, உருண்டை வயிறுடன், நெரிசலான பக்கக் கோடுகளுடன் இருக்கும்.
செர்ரிபார்ப் வகை மீன்கள் நீர்த் தாவரங்கள் உள்ள அலங்காரத் தொட்டியில் வளர்க்க ஏற்றவை.
குறிப்பாக, ஆண் மீன்களின் பளபளக்கும் நிறங்கள், தொட்டிகளுக்கு அழகைச் சேர்க்கும்.
அல்பினோ செர்ரிபார்ப் வகை மீன்கள், மரபணுத் தேர்வு இனவிருத்தி மூலம் உருவாக்கப்பட்டு உள்ளன.
இவை, செர்ரிபார்ப் வகை மீன்களைப் போல, சிறப்பாக இருக்கும். ஆனால், செர்ரிபார்ப் மீன்களைப் போலக் கூட்டமாகச் செல்வதில்லை.
மேலும், சில குணங்களும், செர்ரிபார்ப் மீன்களில் இருந்து மாறுபட்டு இருக்கும்.
செர்ரிபார்ப் வாழ்விடங்கள்
செர்ரிபார்ப் மீன்கள், இலங்கையில் நீரோட்டம் குறைந்த வெப்ப மண்டலப் பகுதிகள் மற்றும் சிறிய குளங்கள், நீரோடைகள் மற்றும் மழைக் காடுகளில் இருட்டான இடங்களில் வாழ்கின்றன.
இப்போது, மெக்சிகோ மற்றும் கொலம்பியா நாட்டு மக்கள் வீடுகளில் அலங்கார மீனாக வளர்க்கின்றனர்.
இயற்கையில் இவ்வகை மீன்கள் குறைந்தளவில் தான் உள்ளன. ஆனால், அலங்கார மீன் வளரப்பு முறையால், இவ்வகை மீன்கள் பெருகியுள்ளன.
தொட்டித் தயாரிப்பு
செர்ரிபார்ப் மீன்கள், நீர்த் தாவரங்கள் உள்ள அலங்காரத் தொட்டிகளில் நன்கு வளரும்.
தொட்டியின் அடியில் கரடு முரடான சரளை அல்லது மணல் மற்றும் அலங்காரப் பொருள்களை வைத்தால், மீன்கள் பளிச்செனத் தெரிவதுடன் தொட்டியும் அழகாக இருக்கும்.
ஏனெனில், தாவரங்கள் மீன்களின் மறைவிடமாக, அவற்றின் இயற்கையான வாழ்வாதாரமாக விளங்குகின்றன.
குறிப்பிட்ட தாவரங்களைத் தான் வைக்க வேண்டும் என்னும் விதியில்லை. ஆனாலும், ஜாவாபெர்ன், ஹார்ன்வொர்ட் அல்லது அனாசார்ஸ் போன்ற தாவரங்களை இடுவது நல்லது.
அலங்காரத் தொட்டியானது, குறைந்தது 100 லிட்டர் நீரைப் பிடிப்பதாக இருக்க வேண்டும்.
மீன்கள் கூட்டமாக வாழவும், பெண் மீன்கள் இனவிருத்தியின் போது மறைந்து வாழவும், வேற்று மீன் இனங்களைச் சேர்த்து வளர்க்கவும், பெரிய தொட்டி ஏற்றதாக இருக்கும்.
இருபது லிட்டர் நீருள்ள தொட்டியில் ஒரு செர்ரிபார்ப் வீதம், நூறு லிட்டர் நீருள்ள தொட்டியில் 5-6 செர்ரி பார்ப் மீன்களை விட்டால், கூட்டமாக வாழவும், மற்ற மீன்களுடன் சண்டை போடாமல் மறைந்து வாழவும் ஏற்றதாக இருக்கும்.
நீர் மேலாண்மை மற்றும் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களால் இவ்வகை மீன்கள் அதிகப் பாதிப்புக்கு உள்ளாவது இல்லை.
ஆனால், தொட்டியில் ஒளி குறைவாக இருக்க வேண்டும் அல்லது நிழலைத் தரும் தாவரங்களை வளர்க்க வேண்டும்.
இணக்கமான மீன் இனங்கள்
செர்ரிபார்ப் மீன்கள் மிகவும் அமைதியாக இருக்கும். இது, டெட்ராஸ், பெர்ல்டானியோஸ், கிளாஸ் காட் ஃபிஷ், லோச்சஸ், கப்பி, பிளாட்டி, ரெயின்போ ஷார்க் போன்ற மீன் வகைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.
மேலும், அலங்கார இறால் வகைகள் மற்றும் நத்தைகளோடும் வளர்க்கலாம்.
தொட்டியில் செர்ரிபார்ப் மீன்களோடு, மற்ற மீன்களை முதன் முதலில் விடும் போது, செர்ரிபார்ப் மீன்கள் புதிய சூழலுக்குப் பயந்து கொண்டு தாவரங்களின் கீழ் மறைந்து கொள்ளும்.
சில நாட்களுக்குப் பிறகு அவை, இந்தத் தன்மையை மாற்றிக் கொள்ளும். டைகர் பார்ப் மீன்கள் சினமாக இருக்கும் போது, மற்ற மீன்களின் துடுப்புகளைச் சேதப்படுத்தும்.
ஆனால், செர்ரிபார்ப் மீன்கள் இந்தத் தன்மையில் இருப்பதில்லை. தொட்டியில் தனியாக வாழும் மீன்களையும், மற்ற மீன்களோடு ஒத்து வாழாத மீன்களையும் விடக்கூடாது.
ஏனெனில், இவை செர்ரிபார்ப் மீன்களுடன் சண்டையிட்டு, அவற்றைக் காயப்படுத்தலாம்.
உணவு
செர்ரிபார்ப் மீன்கள் அனைத்து உண்ணியாகும். ஆனால், இறால்களை அதிகமாக விரும்பிச் சாப்பிடும்.
நுண் பாசிகள், மிதவைப் பிராணிகள், பாசிகள், தாவர உணவுகள் மற்றும் சிறிய பூச்சிகளையும், ஆர்டிமீயா, டாப்னியா, மண்புழு, இரத்தப்புழு போன்ற நீர் உயிரிகளையும் உணவாகத் தரலாம்.
செயற்கையாகத் தயாரித்த செறிவூட்டிய உணவுகளை அளித்தால், அவற்றுக்குத் தேவையான அனைத்துத் தாதுகள் மற்றும் புரதங்கள் எளிதில் கிடைக்கும்.
தினமும் 2-3 முறை உணவைத் தந்தால், இவற்றின் நிறம் கூடுவதுடன் நன்றாகச் செழித்து வளர உதவும்.
செர்ரிபார்ப் இனவிருத்தி
தொட்டியில் ஆண் மற்றும் பெண் மீன்களை 1:2 என்ற விகிதத்தில் விடும் போது எளிதில் முதிர்ந்து இனப்பெருக்கம் செய்யும்.
செர்ரிபார்ப் மீன்கள் முட்டைகளைச் சிதறவிடும் வகையைச் சார்ந்தவை. இவை தங்கள் குட்டிகளைப் பாதுகாக்கும் தன்மை அற்றவை.
எளிதில் இனப்பெருக்கம் அடையக் கூடியவை. இனப்பெருக்கக் காலத்தில் பிரகாசமான சிவப்பு நிறத்தில் காணப்படும்.
ஒரு ஜோடி செர்ரிபார்ப் மீன்கள், 200-300 முட்டைகளை இடும். இனப்பெருக்கம் செய்யும் போது, முட்டைகளை தாவரத்தின் மீதோ அல்லது வேறு பொருள்கள் மீதோ சிதறச் செய்யும்.
இனப்பெருக்கம் முடிந்த பின்பு, பெரிய மீன்களைத் தனியாக வேறு சிறிய தொட்டியில் போட வேண்டும். இல்லையெனில் தாய் மீன்கள், முட்டைகளை உண்ணும்.
தொட்டியை அவற்றின் இயற்கை வாழ்விடம் போன்று அமைக்க வேண்டும். அதாவது, தொட்டி சிறிய அளவில், குறைவான நீரோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும்.
நீரானது அமிலத் தன்மையில், வெளிச்சம் குறைவாக மற்றும் வெப்பநிலை 25-27 டிகிரி செல்சியசில், அதிக மாற்றமின்றி இருக்க வேண்டும்.
ஒரு சில நாட்களுக்குப் பின், புதிய மீன் குஞ்சுகள் பிறக்கும். அவற்றுக்கு உணவாக, நுண் புழுக்கள், இன்புசோரியா மற்றும் பாசியைக் கொடுக்கலாம்.
அதன் பிறகு, அவற்றுக்கு ஆர்டீமியா நாப்பிலியைக் கொடுக்க வேண்டும். மீன் குஞ்சுகள் ஒரு அங்குல நீளம் வளர்ந்ததும் அல்லது இரண்டு மாதத்துக்குப் பின்பு, அவற்றை வளர்ப்புத் தொட்டிக்கு மாற்ற வேண்டும்.
இனப்பெருக்கம் முடிந்த பின்பு பெண் மீன்கள் வலிமையற்று இருப்பதால், அவற்றைச் சில நாட்களுக்குத் தனியாக வேறு தொட்டியில் வளர்ப்பது அவசியம்.
நோய்த்தடுப்பு முறைகள்
செர்ரிபார்ப் மீன்கள் மிகவும் கடினமான மற்றும் எளிதில் நோயால் தாக்காத மீன்கள்.
நீரில் அம்மோனிய அளவு மாற்றம் அடையும் போது இவை நோயால் தாக்கப்படும்.
வாரம் ஒருமுறை மீன் தொட்டியில் உள்ள நீரை மாற்றுவதன் மூலம், நீர்த் தொட்டியில் உள்ள நீரின் தட்பவெப்ப நிலையைச் சரியான அளவில் வைப்பதன் மூலம், நோயின்றி மீன்களைக் காக்கலாம்.
பொ.கார்த்திக் ராஜா, சா.ஆனந்த், ஸ்ரீ.ஜெயபிரகாஷ்சபரி, ஈரோடு பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு – 638 451.
சந்தேகமா? கேளுங்கள்!