இயற்கை பாலிமர்கள் ஈரத்தைத் தக்க வைக்கும் தன்மை மிக்கவை. எனவே, இந்த பாலிமர்களில் மானாவாரி உளுந்து சாகுபடி விதைகளை நேர்த்தி செய்து விதைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த ஆய்வு, குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக, அகார், அகார் கார்பாக்சி, மீத்தைல் செல்லுலோஸ், ஈத்தைல் செல்லுலோஸ், கராஜீனன், சேந்தான் கம், கம் அராபிக் ஆகிய ஏழு வகை இயற்கை பாலிமர்களை எடுத்துக் கொண்டு, அவற்றின் ஈரத்தைத் தக்க வைக்கும் பண்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வில் இருந்து சேந்தான் கம் மிக அதிகமாக, அதாவது, ஒரு கிராம் பாலிமர் 38.27 மி.லி. நீரை உறிஞ்சி, ஒரு கிராம் பாலிமர் 36.27 கிராம் எடை அதிகரித்து, 3,527 சதம் ஈரத்தைத் தக்க வைத்தது.
இதைத் தொடர்ந்து, ஒரு கிராம் கராஜீனன் பாலிமர், 34.17 மி.லி. நீரை உறிஞ்சி, 31.17 கிராம் எடை அதிகரித்து, 3,017 சதம் ஈரத்தைத் தக்க வைத்தது. ஒரு கிராம் அகார் அகார் பாலிமர் 5.46 மி.லி. நீரை உறிஞ்சி, 6.16 கிராம் எடை அதிகரித்து, 516 சதம் ஈரத்தைத் தக்க வைத்தது.
மேலும், 90 சத முளைப்புத் திறனும், 9 சத ஈரப்பதமும் உள்ள வம்பன் 8 உளுந்து விதைகள், நான்கு முறைகளில் விதை நேர்த்தி செய்யப்பட்டன.
அதாவது, நீரில் கலக்காமல் தனித்தனி பாலிமர் பொடியில் விதை நேர்த்தி, நீரில் கரைத்துத் தனித்தனி பாலிமர் பொடியில் விதை நேர்த்தி, கூட்டு பாலிமர்களை நீரில் கரைத்து விதை நேர்த்தி,
கூட்டு பாலிமர்களை நீரில் கரைக்காமல் விதை நேர்த்தி என, நான்கு முறைகளில், ஈரத்தைச் சிறப்பாகத் தக்க வைக்கும் தன்மையுள்ள பாலிமர்கள், விதை நேர்த்தியில் பயன்படுத்தப் பட்டன.
விதை நேர்த்திக்குப் பிறகு, விதைகள் சோதனைக்கு 60% ஈரமுள்ள மணல் ஊடகமாகப் பயன்படுத்தப் பட்டது. இதிலிருந்து, நீரில் கரைக்காத சேந்தான்கம், கராஜீனன், அகார் அகார் ஆகியவற்றை 4:1:1 வீதம் எடுத்து நேர்த்தி செய்த விதைகள், அதிக வறட்சியைத் தாங்கி, தரமாகவும் வீரியமாகவும் இருந்தன.
வயல்வெளிச் சோதனையில், முதல் நீர் மற்றும் உயிர் நீருக்குப் பிறகு இருபது நாட்கள், வயலில் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையோடும்,
விதை நேர்த்தி செய்யப்படாத விதைகளில் முளைத்த பயிர்களை விட, பயிர் எண்ணிக்கை, பயிரின் உயரம், இலையின் நீள அகலம், பச்சைய அளவு விதை மகசூல் யாவும் கூடியிருந்தன.
இந்த ஆய்வுகளில் இருந்து, ஒரு கிலோ உளுந்து விதைக்கு, சேந்தான் கம், கராஜீனன், அகார் அகார் கூட்டு பாலிமர்களை 4:1:1, அதாவது, 20 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்தால், உயிர் நீருக்குப் பிறகு இருபது நாட்கள் பயிர் வறட்சியைத் தாங்கும் தன்மையில் இருக்கும்.
எனவே, மானாவாரி சாகுபடியில், இவ்வகை விதை நேர்த்தியைப் பயன்படுத்தி, விதைகளுக்கு வறட்சியைத் தாங்கி வளரும் ஆற்றலை ஏற்படுத்தி, நன்கு விளைய வைத்து அதிக மகசூலைப் பெறலாம்.
முனைவர் வீ.விஜயலட்சுமி, சே.சதீஷ், வேளாண்மை அறிவியல் நிலையம், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன் – 622 303.
சந்தேகமா? கேளுங்கள்!