ரேபிஸ் என்னும் வெறிநோய், தடுப்பூசி மூலம் முற்றிலும் தடுக்கக் கூடிய நச்சுயிரி நோயாகும்.
விலங்குகள் மற்றும் மக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் முக்கிய நோயான இது, விலங்குகள் மூலம் பரவும்.
இந்த நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட விலங்கு கடிக்கும் போது, அதன் உமிழ்நீர் வழியாக மக்களுக்குப் பரவும்.
மேலும், உடலிலுள்ள சிராய்ப்பு, கீறல் மற்றும் காயத்தில், ரேபீஸ் நச்சுயிரிப் பாதிப்புள்ள நாயின் உமிழ்நீர் படுவதன் மூலம், இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்நோய், வளரும் நாடுகளில் நாய்கள் மூலமும், வளர்ந்த நாடுகளில் வன விலங்குகள் மூலமும் பரவுகிறது.
வெறிநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களைப் பாதுக்காக்க, உலக நாடுகள் செப்டம்பர் 28 ஆம் தேதியை, உலக வெறிநோய் நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகின்றன.
மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள், நாய்கள் மூலம் பரவும் வெறிநோய் இறப்பை, முற்றிலும் ஒழிக்கும் பணி நடந்து வருகிறது.
நோய்க்காரணி
ரேபிஸ் வைரஸ், ராப்டொ விரிடே குடும்பத்தை, லைசா வைரஸ் வகுப்பைச் சார்ந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட நாய், 2-3 நாளிலேயே, தன் உமிழ்நீர் வழியாக இந்த நச்சுயிரி வெளிவிடத் தொடங்கும்.
மேலும், அந்த நாய் இறக்கும் வரை, அதன் உமிழ்நீர் வழியாக ரேபிஸ் நச்சுயிரி வெளியேறிக் கொண்டே இருக்கும்.
அறிகுறி தென்பட்ட ஒரு வாரத்தில், இந்த வைரசால் பாதிக்கப்பட்ட விலங்கு இறந்து விடும்.
உலகளவில் நோய்த் தாக்கம்
உலகளவில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆண்டுதோறும் சுமார் 59 ஆயிரம் பேர் வெறிநோயால் இறக்கின்றனர்.
இதில், 95 சத இறப்பு, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் ஒன்பது நிமிடத்துக்கு ஒருவர் இந்நோயால் இறப்பதாக, உலகச் சுகாதார நிறுவனத் தரவுகள் கூறுகின்றன.
இந்திய நிலை
இந்தியாவில் நிகழும் இறப்புகள் இதுவரை முழுமையாக அறியப்படவில்லை. எனினும், ஆண்டுக்கு 18,000 இருந்து 20,000 பேர் வரை இறக்கலாம் எனத் தரவுகள் கூறுகின்றன.
இதில், 30-60 சத அளவில் பாதிக்கப்படுவது, பதினைந்து வயது வரையுள்ள குழந்தைகள் ஆவர். மேலும், 97 சதப் பாதிப்புகள் மற்றும் இறப்புகள், நாய்களால் பரவும் வெறிநோயால் ஏற்படுகின்றன.
நோய் பரவும் முறைகள்
நோயுற்ற விலங்குகள் கடிக்கும் போது வெளியேறும் உமிழ்நீர் வழியாகப் பரவும்.
உடலிலுள்ள சிராய்ப்பு, கீறல் மற்றும் காயத்தில், இந்த உமிழ்நீர் படுவதன் மூலம் பரவும்.
உடலிலுள்ள சவ்வுப் படலத்தில் உள்ள புண்ணில் இந்த உமிழ்நீர்ப் பட்டாலும் இந்நோய் பரவும்.
வெறிநோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை நேரடியாகக் கையாளும் போது, உடலிலுள்ள கீறல்கள் மற்றும் காயங்கள் வழியாகப் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மக்களிடம் ஏற்படும் நோய் அறிகுறிகள்
மனிதர்களில் நோய்க்கான அறிகுறி தோன்றி விட்டால் இறப்பது உறுதி.
நாய் கடித்த இடத்தில் வலி, அரிப்புணர்வு ஏற்படும். இந்நோய் மூளை அயர்ச்சியை ஏற்படுத்துவதால், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், காற்று, நீர், ஒளி மற்றும் ஒலிக்கு அஞ்சுவார்கள்.
குரல்வளை வலிப்பு ஏற்படுவதால், நீரைக் குடிக்க முடியாத நிலை ஏற்படும். உணவை விழுங்க முடியாத நிலை, வாந்தி, வலிப்பு ஏற்பட்டு, இறுதியில் இறப்பு ஏற்படும்.
செல்லப் பிராணியில் ஏற்படும் நோய் அறிகுறிகள்
வெறிநாய் மிகவும் கோபமாக இருத்தல். அதிகமாக உமிழ்நீர் வடிதல். விழுங்குவதில் சிரமம். உடல் நடுக்கம்.
குரல்வளை வலிப்பால் உணவு மற்றும் நீரை விழுங்க முடியாத நிலை. கண்ணில் தெரியும் பொருள்கள் மற்றும் மனிதர்களைக் கோபத்தில் கடித்தல்.
வளர்த்தவர்கள் அழைப்பதைக் கவனிக்க முடியாத நிலை. ஒருங்கிணைந்த செயல் திறன் இல்லாத காரணத்தால், தனது இருப்பிடத்தில் இருந்து வெகு தொலைவு சென்று விடுதல்.
ஒளிக்கு அஞ்சுவதால், இருள் சூழ்ந்த அல்லது ஒளி படாத இடத்தில் தனித்திருத்தல்.
நோய்த்தடுப்பு
செல்லப் பிராணிகள் வழியாகப் பரவும் வெறிநோயைத் தடுக்க; நோயைப் பற்றிய தகவலைத் தெரிவித்தல், கண்காணித்தல்.
தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல். அனைத்துச் செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்துதல்.
வெறிநோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல்.
நாய் கடித்ததும் செய்ய வேண்டியவை
கடிபட்ட இடத்தை கார்போலிக் அமிலம் நிறைந்த சோப்பைப் போட்டு, குழாயில் வழிந்தோடும் நீரை வைத்து நன்றாகப் பதினைந்து நிமிடங்கள் கழுவ வேண்டும்.
கடிபட்ட இடத்தில் போவிடோன் ஐயோடின் திரவத்தை இட வேண்டும். மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
வெறிநாய் கடித்த பின் முதல் நாள் தடுப்பூசிக்குப் பிறகு, 3, 7, 14, 28 ஆகிய நாட்களில் தடுப்பூசியை அவசியம் போட வேண்டும்.
ரேபிஸ் நோய், தடுப்பூசி மூலம் முற்றிலும் தடுக்கக் கூடியது. எனவே, செல்லப் பிராணிகளுக்கு 70 சதவிகிதம் தடுப்பூசியைப் போடுவதால், நாய்கள் மூலம் ரேபிஸ் பரவுவதைத் தடுக்கலாம்.
மேலும், நோய்கள் பரவும் விதம், அதன் தடுப்பு முறைகளை அறிந்து கொள்வதன் மூலம், அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
எனவே, அனைத்துச் செல்லப் பிராணிகளுக்கும் வெறிநோய்த் தடுப்பூசியைப் போடுவோம். நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோயிலிருந்து தற்காத்துக் கொள்வோம்.
மருத்துவர் ம.சிவக்குமார், முனைவர் மூ.தாஸ் பிரகாஷ், கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் – 624 004.
சந்தேகமா? கேளுங்கள்!