பனையேறிக் கெண்டை மீன் வளர்ப்பு!

கெண்டை kendai

னையேறிக் கெண்டை மீன் (Anabas Koi) (Anabas testudineus) வட இந்திய மக்களின் மிக முக்கிய உணவு மீன்களில் ஒன்றாகும். இதன் சிறந்த சுவை மற்றும் இதிலுள்ள நோயெதிர்ப்புத் திறனால், பலதரப்பட்ட மக்களிடம் மிகவும் பிரபலமாக வாய்ப்பு உள்ளதாகக் கருதப் படுகிறது.

இந்த மீனில் இரும்புச் சத்து, செம்புச் சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் ஹீமோ குளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்களைத் தயாரிக்கும் தொகுப்புகள் அடங்கி இருப்பதால், இதை உண்ணும் மக்களுக்கு நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகமாகும்.

பனையேறிக் கெண்டை காற்றைச் சுவாசிக்கும் மீன் இனங்களில் ஒன்றாகும். இதற்கு, சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் உடலியல் தழுவல் மற்றும் அதிக உப்புத் தன்மையைத் தாங்கும் திறன் இருப்பதால்,

கெண்டை மீன்களை வளர்க்க முடியாத நீர் நிலைகளில் இம்மீனை வளர்க்கலாம்.

இந்த மீன்கள், பெரிய தொட்டிகள் மற்றும் குளங்களில், நீர்வாழ் பூச்சிகள் மற்றும் களை மீன்களைக் கட்டுப்படுத்த உதவுதாகக் கருதப் படுகிறது.

இம்மீனில், உள்ளூர் இரகம், தாய்லாந்து இரகம் என இரண்டு வகைகள் உள்ளன. உள்ளூர் இரகத்தின் உடலில் புள்ளிகள் இருக்காது. தாய்லாந்து மீனின் உடலில் புள்ளிகள் இருக்கும்.

தனித்தன்மை

இது, மிக வேகமாக வளரும் இனமாகும். அதாவது, இம்மீன் 40-60 கிராம் என்னும் விற்பனை எடையை 3-4 மாதங்களில் அடைந்து விடும். இதனால், ஆண்டுக்கு 3-4 அறுவடைக்கு வாய்ப்புண்டு.

வளர்ப்பு முறை மிகவும் எளிது. குறைந்த முதலீடே போதும். அதிகளவில் மீன்களை இருப்பு வைக்கலாம். ஆழமான அல்லது ஆழமற்ற நீரிலும் வளர்க்கலாம்.

ஆக்ஸிஜன் குறைவாக உள்ள நீரிலும் வாழும். நோய்களுக்கு மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்டது. உயிரோடு நேரடியாக விற்பனை செய்யலாம்.

பருவமடைதல்

பனையேறிக் கெண்டை மீன்கள் 15-20 கிராம் எடை மற்றும் 8.0-10 செ.மீ. நீளத்தை எட்டும் போது பாலின முதிர்ச்சியை அடையும்.

கிழக்கு இந்தியாவில் பருவமழையின் போது, இதன் இனப்பெருக்கம் உச்சத்தில் இருக்கும்.

மேலும், வளர்ப்புக்கான மீன் விதைகள் ஏப்ரலில் தொடங்கி ஆகஸ்ட் வரை கிடைக்கும். மே, ஜூனில் உச்சமாக இருக்கும்.

இனப்பெருக்கக் காலத்தில் மட்டுமே ஆண் மீன், பெண் மீன் என அடையாளம் காண முடியும்.

இனப்பெருக்கக் காலத்தில் பெண் மீன்கள் பெரியளவில் இருக்கும். மேலும், முதிர்ந்த பெண் மீனின் தோற்றம், மென்மையாக, வீங்கிய வயிறுடன், பாப்பிலா இளஞ்சிவப்பு நிற பிறப்பு உறுப்புடன் இருக்கும்.

மேலும், இனப்பெருக்கக் காலத்தில் பெண் மீனின் முன் துடுப்புகள் மென்மையாக இருக்கும். அடிவயிற்றை மென்மையாக அழுத்தினால் கூட கரு முட்டைகள் வெளியேறும்.

இனப்பெருக்கக் காலத்தில், முதிர்ந்த ஆண் மீனின் உடல் நிறம் அடர்த்தியாகவும், அடிவயிற்றுத் துடுப்புகள் நீண்டு கூராகவும் இருக்கும்.

மேலும், ஆண் மீனின் செவிள் பகுதித் துடுப்புகள் சற்றுக் கடினமாகவும், ஆசனவாய் சற்றே கூர்மையாகவும் காணப்படும்.

இனப்பெருக்கமும் பராமரிப்பும்

இனப்பெருக்கக் காலத்துக்கு முன்பே, 40-100 கிராம் எடையுள்ள ஆண் மற்றும் பெண் மீன்களை, இருப்புக் குளத்தில் இருந்து எடுத்து, தனித் தனியாக, சிமென்ட் தொட்டிகளில், சதுர மீட்டருக்கு 15 வீதம் இருப்பு வைக்க வேண்டும்.

பொதுவாக, இரண்டு பெண் மீன்களுக்கு ஒரு ஆண் மீன் வீதம் சேர்க்க வேண்டும். இவற்றுக்குக் கூடுதல் உணவாக, மீன் தூள், கடலைப் புண்ணாக்கு, சோயாப் புண்ணாக்கு மற்றும் அரிசித் தவிட்டுடன்,

வைட்டமின் மற்றும் தாதுக் கலவையைச் சேர்த்து, 30-35 சதப் புரத உணவாக, அவற்றின் உடல் எடையில் 3-4 சதம் அளிக்க வேண்டும்.

நீரின் தரத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உகந்த நீரின் தர அளவுகள் மாறாமல் இருக்க, தேவையான அளவில் நீரை மாற்ற வேண்டும்.

மீன்களின் முதிர்ச்சியை அறிய, ஆசன வாயின் வளர்ச்சியை அடிக்கடி சோதிக்க வேண்டும். நன்கு வளர்ந்த மீன்களை மட்டுமே இனவிருத்திக்கு விட வேண்டும்.

தூண்டப்பட்ட இனப்பெருக்க முறை

மீன்களின் இனப் பெருக்கத்தை தூண்டும் ஹார்மோன்களான OVAPRIM/ OVATIDE/ WOVA-FH/ GONOPROFH ஆகியவற்றை,

பெண் மற்றும் ஆண் மீன்களின் மேற்பகுதித் தசையில் அவற்றின் உடல் எடையைப் பொறுத்து முறையே 0.5-1.0 மி.லி./ கிலோ வீதம் செலுத்த வேண்டும்.

ஹார்மோன்கள் செலுத்தப்பட்ட மீன்களை, இனப்பெருக்கக் குளத்தில் விட வேண்டும்.

அனாபன்டிட் மீன்கள், அவற்றின் முட்டைகளைப் பாதுகாக்க, நுரைக் கூட்டைக் கட்டும். ஆனால், பனையேறிக் கெண்டை மீன்கள் அவற்றின் முட்டைகளைப் பாதுகாக்க, கூடுகளைக் கட்டுவதில்லை.

எனவே, மீன்கள் முட்டையிட்ட பிறகு அவற்றை இனப் பெருக்கக் குளத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும். ஹார்மோன் ஊசிக்குப் பிறகு மீன்கள் முட்டையிட 7-8 மணி நேரம் ஆகும்.

ஒரு பெண் மீன் 4,000 முதல் 68 ஆயிரம் முட்டைகள் வரை இடும். மேலும், கருவுற்ற பெண் மீன் அதன் உடல் எடையில் 300- 400 முட்டைகளை இடும்.

கருவுற்ற முட்டைகள் 70-85 மை.மீ. விட்ட அளவில் நீரில் மிதக்கும். அவை ஒட்டாத தன்மையில், சிறிய படிக மணிகளைப் போல இருக்கும்.

கருவுற்ற முட்டைகள் ஒளி ஊடுருவும் கண்ணாடியைப் போல இருக்கும். கருவுறாத முட்டைகள் ஒளிப்புகா அமைப்பில் பாலைப் போன்ற நிறத்தில் இருக்கும்.

கருவுற்ற முட்டைகள் பிளாஸ்டிக் தொட்டி அல்லது FRP தொட்டிகளில் தேங்கி நிற்கும் நீரில் அடைக்கப்படும்.

மீன் முட்டைகளை அடை காக்க, 26-28 டிகிரி செல்சியஸ் நீர் வெப்ப நிலையில், 12-15 மணி நேரம் இருக்க வேண்டும்.

60-100 கிராம் எடையுள்ள பெண் மீனில், 0.5-1.0 மி.லி. ஹார்மோனைச் செலுத்தி, தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்தால், 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் முட்டைகள் வரை உற்பத்தி செய்யலாம்.

மீன் குஞ்சு வளர்ப்பு

புதிதாகப் பிறந்த மீன் குஞ்சுகள், அதாவது, இலார்வாக்கள் 1.6-1.8 மி.மீ. நீளத்தில் இருக்கும். இவை தலைகீழான நிலையில் ஓய்வெடுக்கும்.

இவற்றை, 500- 1000 லிட்டர் கொள்ளளவு உள்ள வளர்ப்புத் தொட்டிகளில், 15-20 அங்குல ஆழமுள்ள நீரில் வளர்க்க வேண்டும்.

மூன்று நாள் மீன் குஞ்சுகளுக்கு, முட்டையின் மஞ்சள் கருக் கூழ்மம் மற்றும் விலங்கு மிதவை உயிரிகள் உணவாக அளிக்கப்படும்.

மீன் குஞ்சுகளின் சிறந்த வளர்ச்சிக்கு, உயிர் வாழ்வதற்கு, நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழலை நன்கு பராமரிக்க வேண்டும்.

தொட்டிகளுக்கு வரும் நீரை வடிகட்டி விட்டால், பெரிய மிதவை உயிரி நுழைவதைத் தடுக்கலாம். ஏனெனில், இவற்றால் மீன் குஞ்சுகள் உயிர் வாழ்வதிலும் வளர்வதிலும் தீமையே விளையும்.

வழக்கமான நீர் மாற்றம், சரியாக உணவிடுதல் மற்றும் பிரித்து எடுத்தல் ஆகியன, இந்த மீன் குஞ்சு வளர்ப்பில், அதிகப் பிழைப்புத் திறன் கிடைக்க வழி வகுக்கும்.

இந்த மீன் குஞ்சுகள் சுமார் 15 நாட்களில் 12-16 மி.மீ. நீளத்தை அடையும். இந்நிலையில் இவற்றுக்கு பிளாங்க்டன் கலவை, புண்ணாக்குத் தூள் மற்றும் அரிசித் தவிட்டைச் சமமாகக் கலந்து கொடுக்க வேண்டும்.

இளம் குஞ்சுகளின் இருப்பு அடர்த்தி இரண்டு வாரங்கள் வரை, ச.மீ.க்கு 1000- 1500 என இருப்பது உயிர் வாழ ஏற்றது.

மூன்று வாரங்கள் கழித்து இந்த இருப்பு அடர்த்தியை, 100-200 குஞ்சுகளாகக் குறைத்து, 30-35 சதப் புரதமுள்ள தீவனத்தை, மிதக்கும் உணவாக வழங்க வேண்டும்.

மீன்களின் வளர்ச்சியில் மாற்றம் பெரும்பாலும் இருக்கும். இதற்கு முக்கியக் காரணம், மீன்களின் மாறுபட்ட உணவு நுகர்வே ஆகும்.

இதைத் தவிர்க்க, பெரிய மீன் குஞ்சுகளைப் பிரித்து எடுத்துத் தனியாக வளர்க்க வேண்டும்.

இதைப் பின்பற்றினால், புதிதாகப் பிறந்த மீன் குஞ்சு முதல், விரல் அளவு குஞ்சுகள் வரை வளர, சராசரி பிழைப்பு விகிதம் 60-75 சதம் கிடைக்கும்.

இப்படி முதல் இரண்டு மாதங்கள் வளர்த்தால், மீன் விதைகள் 35 முதல் 40 மி.மீ. வரை வளர்ந்து இருப்புக்குத் தயாராகி விடும்.

உணவு

பனையேறிக் கெண்டை அனைத்து வகை தீவனங்களையும் ஏற்றுக் கொண்டாலும், உயர்தர ஊட்டத்தைப் பயன்படுத்தி, சிறந்த வளர்ச்சியைப் பெறலாம்.

இதற்கு உணவாக, மீன் தூள், கடலைப் புண்ணாக்கு, சோயாப் புண்ணாக்கு, அரிசித் தவிடு போன்ற பொருள்களுடன், வைட்டமின் மற்றும் தாதுக் கலவையைச் சேர்த்து, 30 சதப் புரத உணவாக வழங்க வேண்டும்.

இந்த உணவை, மீனின் உடல் எடையில் 5 சதம் வீதம் தினமும் இரண்டு முறை அளிக்க வேண்டும்.

இம்மீன் பூச்சிகளையும் உண்பதால், வளர்ப்புக் குளத்துக்குச் சற்று மேலே, தொங்கும் விளக்கைப் பொருத்திப் பூச்சிகளை ஈர்க்கலாம். இப்பூச்சிகள் நீரில் விழுந்து கூடுதல் உணவாக அமையும்.

குளத்தில் மீன் வளர்ப்பு

பனையேறிக் கெண்டை மீன்களை, ச.மீ.க்கு 5-6 வீதம் இருப்பு வைத்து வளர்க்கலாம். இந்த மீன் வளர்ப்புக்கு 0.05-0.2 எக்டர் பரப்புள்ள சிறிய குளங்களே போதும்.

கெண்டை மீன் வளர்ப்பில் பின்பற்றும் குள நிர்வாக முறைகளைக் கையாள வேண்டும். மீன்களுக்கு இயற்கை உணவுப் பொருள்களை உருவாக்க, மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், நீரில் 40 சத அளவில், மிதக்கும் நீர்வாழ் தாவரங்களான பிஸ்டியா, எய்கோர்னியா போன்றவை இருந்தால், குளத்தின் அடியில் தேங்கும் நச்சுக் கழிவை எளிதில் நீக்க முடியும்.

மழைக் காலத்தில் நீரின் அளவு உயரும் போது, இம்மீன்கள் ஒரு குளத்தில் இருந்து மற்றொரு குளத்துக்குத் தப்பும் வாய்ப்புண்டு.

எனவே, இதைத் தடுக்க, குளத்தின் கரை 75 டிகிரிக்கு மேற்பட்ட கோணத்தில் இருக்க வேண்டும்.

கல்லால் ஆன குளங்கள் இதற்குச் சரியான தீர்வாகும். குளத்தைக் கம்பி வேலி அல்லது பறவைத் தடுப்புச் சாதனங்கள் மூலம் மூட வேண்டும்.

மேலும், மழைக் காலத்தில் குளத்து நீரைப் பாதியாகக் குறைத்து வைத்துக் கொள்வது நல்லது.

இந்த மீன்கள் 4-6 மாதங்களில் 50-60 கிராம் என்னும் விற்பனை எடையை அடையும்.

ஒரு எக்டர் குளத்தில் 14.17 கிராம் எடை 9.31 செ.மீ. நீளமுள்ள, விரல் அளவு குஞ்சுகளை, ச.மீ.க்கு மூன்று வீதம் இருப்பு வைத்தால், ஒருமுறை வளர்ப்பில் எக்டருக்கு 1,279 கிலோ மீன்களை உற்பத்தி செய்யலாம்.

கூண்டில் வளர்த்தல்

இம்முறையில், 3x2x1.5 மீட்டர் அளவுள்ள கூண்டில், 550 மீன்களை வளர்க்கலாம்.

இயற்கையான தீவனங்கள் மற்றும் துணை உணவுகளை அளித்து இந்த மீன்களின் வளர்ச்சியை மேம்படுத்தலாம். மேலும், இதில் வளரும் மீன்கள் நான்கு மாதங்களில் சராசரியாக 62 கிராம் எடையை அடையும்.

இந்தக் கூண்டில் 5.8 கிராம் மற்றும் 12 செ.மீ அளவுள்ள விரல் அளவு மீன் விதைகளைச் ச.மீ.க்கு 60 வீதம் இருப்பு வைத்து நான்கு மாதங்கள் வளர்க்கும் போது, அவற்றில் 67 சத மீன்கள் உயிர் வாழ்ந்து, 40 கிராம் எடை, 6.1 செ.மீ. நீளம் விற்பனைத் தகுதியை அடையும்.

பல ஆய்வுகளில், 1x1x1 மீட்டர் அளவுள்ள கூண்டில் ச.மீ.க்கு 150 மீன்கள் மற்றும் 3x3x3 மீட்டர் அளவுள்ள கூண்டில் ச.மீ.க்கு 60 மீன்கள் வீதம் வைத்து வளர்த்ததில், அதேயளவு வளர்ச்சி மற்றும் உற்பத்தி பதிவாகி உள்ளது.

எனவே, அனைத்து முடிவுகளையும் வைத்துப் பார்க்கும் போது, 3x3x3 மீட்டர் கூண்டில் ச.மீ.க்கு 60 மீன்கள் வீதம் இருப்பு வைத்து, துணை உணவுகளை அளித்து, பனையேறிக் கெண்டை மீன்களை வளர்ப்பது ஏற்கத் தக்கதாக உள்ளது.

அறுவடையும் வளர்ச்சியும்

குளத்தில் உள்ள நீரை நீக்கிவிட்டு, கைகளால் மீன்களை எளிதாக அறுவடை செய்யலாம். அனபாஸ் என்னும் பனையேறிக் கெண்டை மீன்களின் தேவை ஆண்டு முழுவதும் உள்ளது.

மேலும், இந்த மீன்களுக்கு நல்ல சந்தை மதிப்பும் உள்ளது. ஒரு கிலோ மீனின் விலை 200-300 ரூபாயாக உள்ளது.

பொதுவாக, மீன்களைக் குறைத்து இருப்பு வைத்து வளர்க்கும் போது, சராசரி மொத்த விளைச்சல் அதிகமாக இருக்கும்.

ஆனால், இந்தப் பனையேறிக் கெண்டை மீன்களை, ச.மீ.க்கு 14 வீதம் அதிக இருப்பு அடர்த்தியில் வளர்த்தால், ஏக்கருக்கு 4,037 கிலோ மீன்களை அறுவடை செய்யலாம்.

இந்த மீன்களை, குளம் மற்றும் கூண்டுகளில் வளர்க்கும் போது, மொத்த உற்பத்தி, ச.மீ.க்கு 0.3 முதல் 1.0 கிலோவும், நான்கு மாதங்களில் 40-60 கிராம் எனவும் உள்ளது. எனவே, இதன் மூலம் நன்னீர் மீன் வளர்ப்பு விவசாயிகள் நல்ல இலாபத்தை ஈட்டலாம்.


கெண்டை S.DHINAKARAN

எஸ்.தினகரன், டாக்டர் எம்.ஜி.ஆர்.மீன்வளக் கல்லூரி, பொன்னேரி. முனைவர் எஸ்.ஆனந்த், ஈரோடு பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம். எஸ்.சுதர்சன்,

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், நாகை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading